சபரிமலை மதசார்பற்ற கோவில் அல்ல


சபரிமலை மதசார்பற்ற கோவில் அல்ல
x
தினத்தந்தி 22 Nov 2018 10:30 PM GMT (Updated: 22 Nov 2018 5:11 PM GMT)

சபரிமலை அய்யப்பனை தரிசிக்க ஏதோ கோவிலுக்கு போனோம், வழிபட்டோம், திரும்பி வந்தோம் என்று சாதாரணமாக யாரும் சென்றுவிடமுடியாது. இருமுடி கட்டி செல்பவர்கள் 48 நாட்கள் கடும்விரதம் இருக்கவேண்டும்.

பரிமலை அய்யப்பனை தரிசிக்க ஏதோ கோவிலுக்கு போனோம், வழிபட்டோம், திரும்பி வந்தோம் என்று சாதாரணமாக யாரும் சென்றுவிடமுடியாது. இருமுடி கட்டி செல்பவர்கள் 48 நாட்கள் கடும்விரதம் இருக்கவேண்டும். கழுத்தில் துளசிமாலை அணிந்து, காவி, கருப்பு அல்லது நீலநிற ஆடைகளை அணியவேண்டும். தினமும் காலையும், மாலையும் சூரிய உதயத்துக்கு முன்பும், பின்பும் குளிர்ந்த நீரில் குளித்தும், அய்யப்பனை பூஜைசெய்து, மது, மாது, மாமிசம் ஆகியவற்றை அறவே தவிர்த்து அய்யப்பனை நினைத்தே வாழவேண்டும். சபரிமலைக்கு செல்லும்போது தலையில் இருமுடி கட்டிக்கொண்டு பெரியபாதை அல்லது சிறியபாதை வழியாக, ‘சுவாமியே சரணம் அய்யப்பா’ என்று வழிபட்டு செல்லவேண்டும். 18 படி ஏறி சபரிமலை அய்யப்பனை வழிபடவேண்டும். 

சபரிமலைக்கு ஆண்கள் எந்த வயதினரும் செல்லலாம். பெண்களை பொறுத்தமட்டில், 10 வயதுக்கு குறைந்த பெண் குழந்தைகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே அய்யப்பன் கோவிலுக்கு செல்லமுடியும் என்று பல கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் திடீரென்று அனைத்து பெண்களும் வயது வித்தியாசமின்றி சபரிமலைக்கு செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக, ‘சுவாமியே அய்யப்பா, சரணம் அய்யப்பா’ என்று மட்டும் கூறிக்கொண்டு சபரிமலைக்கு செல்லும்நிலை மாறி, எங்கே பெண்கள் வந்துவிடுவார்களோ?, சபரிமலையில் வழிபாட்டு முறை மாறிவிடுமோ? என்ற பயத்தில் அதை தடுப்பதிலேயே பக்தர்கள் குறியாக இருக்கிறார்கள். பெண் சமூகஆர்வலர்கள் சிலரும், மாற்றுமதத்தை சேர்ந்தவர்களும், பெண் பத்திரிகையாளர்களும் சபரிமலைக்குள் நுழைய முயற்சித்தது பக்தர்கள் மனதில் பெரும் வேதனையை அளித்தது. 

இந்தநிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த பி.ஜி.மோகன்தாஸ் என்பவர் கேரள சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர்களையும், அய்யப்பனை வழிபடாதவர்களையும் அனுமதிப்பதை தடை செய்யவேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள அரசாங்கம் தாக்கல் செய்த பதில்மனுவில், ‘சபரிமலை அய்யப்பன் கோவில் புத்தமத கோவிலாக இருந்தது என்றும், சரணம் என்ற கோ‌ஷமே புத்த மதத்திலிருந்து வந்தது என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. ஆதிகாலத்தில் இது பழங்குடியினர் வழிபடும் தலமாக இருந்தது. சன்னிதானம் அருகே வாவரு சுவாமி நடை என்ற இடத்தில் முஸ்லிம்கள் வழிபடுகிறார்கள். அவர்கள் அய்யப்பனையும் வழிபடுகிறார்கள். அதுபோல, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வாவரையும் வழிபடுகிறார்கள். எனவே, இது மதசார்பற்ற கோவில்தான். இது சரித்திரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று’ என்று கூறியுள்ளது. 

இந்த வாதம் முழுக்க முழுக்க தவறானது. சபரிமலை கோவில் ஒரு சுற்றுலா தலம் அல்ல. இந்துக்களின் வழிபாட்டு தலம். இங்கு கடுமையான விரதங்களுக்கு பிறகுதான் வழிபடமுடியும். மாற்று மதத்தினரும் வரலாம் என்றால் அவர்கள் 48 நாட்கள் விரதம் இருப்பார்களா?, துளசி மாலை அணிவார்களா?, கருப்பு, நீலம் மற்றும் காவிநிற ஆடைகளை அணிவார்களா?, சுவாமியே சரணம் அய்யப்பா என்று அய்யப்பனின் திருநாமத்தை கூறுவார்களா?, தலையில் இருமுடி கட்டிக்கொண்டு, ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ என்று நடந்து செல்வார்களா?. இப்படி எல்லாமே இந்துக்கள் மட்டுமே செய்யக்கூடியது. எனவே, நிச்சயமாக சபரிமலை அய்யப்பன் கோவில் மதசார்பற்ற கோவில் அல்ல, கேரள அரசின் இந்த வாதம் ஏற்புடையதல்ல என்பதே அய்யப்ப பக்தர்களின் கருத்தாகும்.

Next Story