தென்னை மரத்துக்கு நிவாரணம் போதாது


தென்னை  மரத்துக்கு நிவாரணம்  போதாது
x
தினத்தந்தி 23 Nov 2018 10:30 PM GMT (Updated: 23 Nov 2018 5:15 PM GMT)

‘தென்னையை பெற்றால் இளநீரு, பிள்ளையை பெற்றால் கண்ணீரு’ என்று பழைய திரைப்பட பாடல் ஒன்று உண்டு. கிராமங்களில் வேறு எந்த பயிரையும் பிள்ளை என்று சொல்லமாட்டார்கள்.

‘தென்னையை பெற்றால் இளநீரு, பிள்ளையை பெற்றால் கண்ணீரு’ என்று பழைய திரைப்பட பாடல் ஒன்று உண்டு. கிராமங்களில் வேறு எந்த பயிரையும் பிள்ளை என்று சொல்லமாட்டார்கள். தென்னை மரத்தை மட்டும் தென்னம்பிள்ளை என்று சொல்வார்கள். ஆக, ஒரு பிள்ளையைபோல தென்னை மரத்தை விவசாயிகள் வளர்ப்பார்கள். தென்னை மரமும் விவசாயிகளுக்கு பெற்றெடுத்த பிள்ளையைபோல வருமானம் ஈட்டித்தரும். முன்பெல்லாம் தென்னங்கன்றை நட்டால் அது விளைச்சலுக்கு வர 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் ஆகும். தொடர்ந்து 60 ஆண்டுகள் நல்ல விளைச்சலையும், அதன்பிறகு 40 ஆண்டுகள் வரை ஓரளவு விளைச்சலையும் தரும். ஆனால் இப்போது பல நவீனரக தென்னை மரக்கன்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நல்ல உயரமான தென்னை மரம் என்றால் 5 ஆண்டுகளிலும், குட்டை ரக தென்னை மரம் என்றால் 3 முதல் 4 ஆண்டுகளிலும் விளைச்சலுக்கு வந்துவிடுகிறது. ஆக 2 மற்றும் 3 தலைமுறைக்கு வாழ்வாதாரமாக விளங்குவது தென்னை மரம். 

 ஒரு ஏக்கர் நிலத்தில் 75 தென்னங்கன்றுகளை நடமுடியும். தென்னையில் இருந்து தேங்காய் மட்டுமல்லாமல், தென்னங்கீற்றும், தேங்காய் மட்டைகளும் விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்டித்தருகிறது. இப்போது ‘நீரா’ பானம் வருமானமும் கூடுதலாக கிடைக்கிறது. ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 120 முதல் 160 வரை தேங்காய்களை பறிக்கலாம். தற்போது ‘கஜா’ புயலினால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. முதல்–அமைச்சரே 30,100 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தென்னை மரங்கள் சேதம் அடைந்ததாக கூறியுள்ளார். அரசு தரப்பில் தோராயமாக 45 லட்சம் தென்னை மரங்கள் சேதம் அடைந்திருக்கக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எத்தனை தென்னை மரங்கள் பாதிப்பு என்பது இறுதி மதிப்பீட்டுக்கு பிறகுதான் தெரியும்.

சேதங்களுக்கு நிவாரணமாக ஒரு மரத்துக்கு ரூ.600 வழங்கியும், அவற்றை வெட்டி அகற்றிட ஒரு மரத்துக்கு ரூ.500 வழங்கவும், ஆக மொத்தம் ஒரு மரத்துக்கு ரூ.1,100 வழங்க முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை நிச்சயம் போதாது. நவீனரக தென்னை மரக்கன்றுகளை நட்டால் விளைச்சலுக்கு 3 முதல் 5 ஆண்டுகள்வரை ஆகும். அதுவரை அவர்கள் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வார்கள்?. சேலம் 8 வழிச்சாலை அமைப்பதற்கு ஒரு தென்னை மரத்துக்கு ரூ.50 ஆயிரம் அறிவித்தநிலையில், எங்களுக்கு வெறும் ரூ.1,100 மட்டும்தானா என்பதே விவசாயிகளின் கேள்வியாக இருக்கிறது. எனவே, தென்னை மரத்துக்கான நிவாரணத் தொகையை அரசு உயர்த்தி அறிவிக்கவேண்டும். விவசாயிகளுக்கு தேவையான தென்னை மரக்கன்றுகளை உடனடியாக வழங்கவேண்டும். ஓரளவு சேதத்துடன் சாய்ந்த தென்னை மரங்களை, அதிலும் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட மரங்களை திரும்ப நடமுடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வளர்ந்த மரங்களையே சவுதி அரேபியாவில் நட்டு வளர்க்கும்போது இது நிச்சயமாக சாத்தியம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதற்கு தேவையான கருவிகளையும், பணியாளர்களையும் தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும். மொத்தத்தில், எவ்வளவு மரங்களை காப்பாற்ற முடியுமோ?, அவ்வளவு மரங்களை காப்பாற்றவேண்டும். இந்த பணிகளை உடனே தொடங்கவேண்டும். சேதமடைந்த தென்னை மரங்களுக்கு கூடுதல் நிவாரணம் அளிக்க தமிழக அரசு சிறப்பு அறிவிப்புகளை வெளியிடவேண்டும்.

Next Story