சீரமைப்பு பணிகளில் 100 நாள் வேலைத்திட்டம்


சீரமைப்பு பணிகளில் 100 நாள் வேலைத்திட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2018 10:30 PM GMT (Updated: 2018-11-30T20:03:27+05:30)

கடந்த மாதம் 16–ந்தேதி வீசிய ‘கஜா’ புயல் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் முழுமையும், மேலும் சில மாவட்டங்களில் சிலஇடங்களிலும் பெரிய சீரழிவை ஏற்படுத்திவிட்டது.

டந்த மாதம் 16–ந்தேதி வீசிய ‘கஜா’ புயல் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் முழுமையும், மேலும் சில மாவட்டங்களில் சிலஇடங்களிலும் பெரிய சீரழிவை ஏற்படுத்திவிட்டது. லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அரசு உதவி கிடைத்தால் மட்டும்தான் இனி வாழ்க்கை நடத்தமுடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். கணக்கிட முடியாத அளவில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றினால் தான் போக்குவரத்தை சீரமைக்க முடியும். தென்னை விவசாயிகள் எங்கள் மரங்களை யாராவது எடுத்துச் செல்லுங்கள், அந்த மரங்களில் உள்ள தேங்காய் களையும் எடுத்துச்செல்லுங்கள் என்று கண்ணீர்விட்டு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆக, இன்றைய நிலையில் முதல்பணியாக கீழே விழுந்துகிடக்கும் மரங்களை அகற்றி, புதிய தென்னை மரக்கன்றுகளை நடவேண்டிய நிலைமை இருக்கிறது. 

கடந்த மாதம் 28–ந்தேதி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள மரங்களை வெட்டி அகற்றுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டமான 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, மரங்களை அரசு முழுமையாக அகற்றி உதவும். மரங்களை அகற்ற தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மர வியாபாரிகளை அழைத்து மரங்களை அகற்ற, அரசு விவசாயிகளுக்கு உதவும்’ என்று அறிவித்தார். இது நிச்சயமாக வரவேற்கத்தக்க அறிவிப்பாகும். கிராமங்களில் உள்ள மக்கள் அதிலும், விவசாயிகளை பொறுத்தமட்டில், அரசு என்னதான் உதவிகள் செய்தாலும், தான் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற தன்மானம் மிக்கவர்கள். கடந்த 

15 நாட்களுக்கும் மேலாக எந்த வேலையும் இல்லாமல் இருப்பதே அவர்களுக்கு பெரிய மனச்சுமையாகும். இந்தநிலையில், மத்திய ஊரக அமைச்சகத்திடம் ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பதை, ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களிலும் 150 நாட்களாக உயர்த்தவேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 

ஏற்கனவே நரேந்திரமோடி அரசு பதவியேற்ற வுடனேயே, வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 100 நாள் வேலைத்திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். எனவே, இந்த கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும். 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் தினக்கூலியாக ரூ.224 வழங்கப்படுகிறது. இந்த ரூபாயை அவர்களுக்கு தினசரி சம்பளமாக கொடுத்து போர்க்கால அடிப்படையில் விழுந்த மரங்களை எல்லாம் அகற்றிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், ஒரு தென்னங்கன்று நடுவதற்கு அந்த கன்றின் விலை உள்பட மற்ற கூலிகளையும் சேர்த்து ரூ.327 என்று கணக்கிடப்பட்டுள்ளது. மற்ற தோட்டக்கலை பயிர்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.123.84 என்று கணக்கிடப் பட்டுள்ளது. இதையெல்லாம் கணக்கிட்டு, 100 நாள் வேலைத்திட்டத்தில கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசாங்கத்திடம், தமிழகஅரசு கோரவேண்டும். ஏனெனில், நடப்பு ஆண்டு இந்த திட்டத்துக்காக தமிழகத்திற்கு ரூ.5,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் 90 சதவீதம் மத்தியஅரசின் பங்கும், 10 சதவீதம் மாநில அரசின் பங்கும் ஆகும். இந்த நிதிஆண்டில் இதுவரை ரூ.3,033 கோடி தமிழகத்திற்கு, மத்திய அரசாங்கம் தந்துவிட்டது. மீதமுள்ள தொகை நிச்சயமாக இந்த மரங்களை அகற்றும் பணிக்கும், புதிய மரங்களை நடும் பணிக்கும் போதாது. எனவே, இந்தத்திட்டத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கீட்டையும் தமிழக அரசு கேட்கவேண்டும். 

Next Story