ஏமாற்றம் அளிக்கும் பொருளாதார வளர்ச்சி


ஏமாற்றம் அளிக்கும் பொருளாதார வளர்ச்சி
x
தினத்தந்தி 6 Dec 2018 10:30 PM GMT (Updated: 6 Dec 2018 5:15 PM GMT)

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது ஜி.டி.பி. என்று கூறப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வைத்துத்தான்.

ரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது ஜி.டி.பி. என்று கூறப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வைத்துத்தான். விவசாய விளைபொருள்கள் உள்பட நாட்டில் உற்பத்தியாகும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் ஒட்டுமொத்த மதிப்புதான், இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும். இதை 3 மாதத்துக்கு ஒருமுறை கணக்கிடுவது வழக்கம். அந்தவகையில், கடந்த 2017–18–ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்– ஜூன்) பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீத மாகவும், 2–வது காலாண்டில் (ஜூலை– செப்டம்பர்) 6.3 சதவீத மாகவும், 3–வது காலாண்டில் (அக்டோபர் – டிசம்பர்) 7.2 சதவீதமாகவும் இருந்தது. 4–வது காலாண்டில் (இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச்) 7.7 சதவீதமாக இருந்தது. இந்த நிதி ஆண்டு முதல் காலாண்டில் (ஏப்ரல் – ஜூன்) 8.2 சதவீத வளர்ச்சி இருந்தது. ஆக, பொருளாதார வளர்ச்சி இந்தியாவில் வேகமாக இருந்தது. ஆனால், வளர்ந்துகொண்டே இருந்த பொருளாதாரம், 2–வது காலாண்டில் 7.1 சதவீத மாக குறைந்தது, எல்லோருக்கும் ஏமாற்றத்தை அளித்தது. 

இவ்வாறு பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும், இந்த மழைகாலங்களில் ஏற்பட்ட பின்னடைவு, அடுத்த 

3 மாதங்களில் நிலைமை சீராகும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஏனெனில், மழைகாலங்களில் கட்டுமானம் மற்றும் சுரங்கத்தொழில் வேகமாக இருக்காது. இதன் காரணமாக சிமெண்டு, இரும்பு, மின்சார சாதனங்கள் போன்ற பொருட்களின் தேவை மிகவும் குறைந்துவிடும் என்று கருதப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி பின்தங்கியிருப்பதன் காரணமே வேலைவாய்ப்பை உருவாக்கும் கட்டிடத்தொழில் மற்றும் சுரங்கத் தொழிலில் ஏற்பட்ட மந்தமான சூழ்நிலைதான். மற்றொரு காரணம், வாங்கும் சக்தி 8.59 சதவீதத்தி லிருந்து 7.01 சதவீதமாக குறைந்துள்ளது. வேலை வாய்ப்புகள் அதிகமாக இருந்தால்தான் மக்களிடையே பணப்புழக்கம் இருக்கும். அதன் காரணமாக பல பொருட்களை வாங்குவார்கள், வர்த்தகம் தழைக்கும்.

உற்பத்தித்துறையிலும் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விவசாயத்துறையிலும் வளர்ச்சி கணிசமாக குறைந்துள்ளது. இந்த 2–வது காலாண்டில் அரசின் செலவினம் 10 சதவீதத்திலிருந்து 12.4 சதவீதமாக அதிகரித்திருந்தாலும், தனியார் துறை நிறுவனங்களின் செலவினம் 8.6 சதவீதத்திலிருந்து 

7 சதவீதமாக குறைந்துள்ளது. தனியார் துறையின் செலவினம் குறைவது நாட்டுக்கு நல்லதல்ல. பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வேண்டுமென்றால், தனியார் துறைகளை ஊக்குவிக்கவேண்டும். தனியார் துறையில் செலவினம் குறைகிறது என்றால், அவர்களை அழைத்து அவர்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

கடந்த காலாண்டு வளர்ச்சியோடு ஒப்பிடும்போது, நமது வளர்ச்சி குறைவு என்றாலும், நம்பிக்கை குறையவில்லை. ஏனெனில், இந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் ரூ.21.63 லட்சம் கோடிக்கு புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த புதிய முதலீடுகளின் பலன்கள் கிடைக்கும்போது, நிச்சயமாக பொருளாதார வளர்ச்சி மேலோங்கும். இருந்தாலும், மத்திய அரசாங்கம் உடனடியாக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை பொருளாதார நிபுணர்கள் மற்றும் மாநில அரசுகளோடு கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். பா.ஜ.க. அரசின் இலக்கு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பது என்பதுதான். கடந்த ஆண்டில் 70 லட்சம் பேருக்குத் தான் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதிலும் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும். 

Next Story