சாதனை படைக்கப்போகும் இடைத்தேர்தல்


சாதனை படைக்கப்போகும் இடைத்தேர்தல்
x
தினத்தந்தி 14 Dec 2018 6:25 AM GMT (Updated: 2018-12-14T11:55:55+05:30)

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே இந்த 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வரவாய்ப்பு இருக்கிறது.

தமிழக சட்டசபையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக இருந்த ஆண்டிப்பட்டி, விளாத்திகுளம், பெரியகுளம் (தனி), பரமக்குடி (தனி), அரவக்குறிச்சி, மானாமதுரை (தனி), நிலக்கோட்டை (தனி), சோளிங்கர், சாத்தூர், திருப்போரூர், ஒட்டப்பிடாரம், அரூர் (தனி), தஞ்சாவூர், பாப்பிரெட்டிப்பட்டி, பூந்தமல்லி (தனி), குடியாத்தம் (தனி), பெரம்பூர், ஆம்பூர் ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரால் பதவிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், 18 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் நீக்கியது சரி என்றே தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் போட்டியிட்ட திருப்பரங்குன்றம் தொகுதியும் அவர்கள் இருவரும் காலமானதால் காலியாக இருக்கிறது. திருப்பரங்குன்றம் தொகுதி வேட்புமனுவில் ஜெயலலிதா கைரேகை இட்டது தொடர்பாக உள்ள வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு எந்த நேரத்திலும் வரலாம். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று டி.டி.வி. தினகரன் அறிவித்திருந்தார். ஆக, தற்போது 20 தொகுதிகளுமே தேர்தலுக்கு தயாரான நிலையில் இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே இந்த 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வரவாய்ப்பு இருக்கிறது. இப்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, 18 சட்டசபை தொகுதிகளிலும் பதவியிழந்த எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செய்திருக்கிறார்களா? என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அலுவல் ரீதியாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அவர்கள் மேல்முறையீடு செய்யவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி பதிலளித்து இருக்கிறார். இந்த 18 தொகுதிகளுக்கும் ஜனவரி 25-ந் தேதிவரை அப்பீல் செய்ய காலக்கெடு இருக்கிறது. ஆக, ஜனவரி 25-ந்தேதிக்குப்பிறகு எந்தநேரத்திலும் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவர இருக்கிறது. 19 தொகுதிகளில் இடைத்தேர்தல் என்றாலும் சரி, 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் என்றாலும் சரி, இந்தவகையில் இதுவரை எந்த மாநிலத்திலும் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இடைத்தேர்தல் நடந்ததில்லை.

கடந்த 20 ஆண்டுகளில் 4 மாநிலங்களில் மட்டுமே 7 முதல் 18 தொகுதிகள்வரை இடைத்தேர்தல் நடந்திருக்கிறது. 18 தொகுதிகளை எடுத்துக்கொண்டால், கடைசியாக 2012-ம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரசைவிட்டு விலகி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வகையிலும், மற்றொரு எம்.எல்.ஏ. பிரஜா ராஜ்ஜியம் கட்சியிலிருந்து விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வகையிலும், மேலும் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தவகையிலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்ததேர்தலில் 15 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும், 2 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், ஒரு இடத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் வெற்றிபெற்றன. இந்த கணக்குப்படி பார்த்தால், இந்தியாவிலேயே ஒரேநேரத்தில் அதிகமான எண்ணிக்கையில் இடைத்தேர்தல் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு என்ற சாதனையை படைக்கப்போகிறது. இதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்றால், குறைந்தது 8 இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்றநிலையில், இந்த இடைத்தேர்தல் ஒரு பலப்பரீட்சையாக இருக்கிறது.

Next Story