பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பெரிய நிம்மதி


பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பெரிய நிம்மதி
x
தினத்தந்தி 16 Dec 2018 10:00 PM GMT (Updated: 2018-12-16T22:45:01+05:30)

நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் மீது 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றதில் இருந்து, பெரிய ஊழல் புகார் எதுவும் சொல்லப்படாத நிலையில், ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக மட்டும் ஒரு ஊழல் புகார் கூறப்பட்டது.

இந்திய ராணுவத்திற்கான பல்வேறு உபகரண கொள்முதல் தொடர்பாக ஊழல் புகார்கள் 1948-ம் ஆண்டில் இருந்தே கூறப்பட்டு வருகின்றன.

2012-ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் ரபேல் போர் விமானங்கள் வாங்க முயற்சித்தபோது, பிரான்ஸ் நாட்டின் ‘டசால்ட்’ நிறுவனத்தின் ரபேல் விமானம், இதற்கு போட்டியாக களம் இறங்கிய ‘யூரோ பைட்டர் டைபூன்’ விமானத்தைவிட, குறைந்த விலைக்கு வழங்க முன் வந்ததால் ‘டசால்ட்’ நிறுவனத்திடமிருந்தே 126 போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க. அரசு வந்தவுடன் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது. 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திரமோடி பிரான்ஸ் சென்றிருந்தபோது, டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து 36 ரபேல் போர் விமானங்கள் ரூ.58 ஆயிரம் கோடி செலவில் வாங்க கையெழுத்திடப்பட்டது. இதற்கு உதிரிபாகங்கள் தயாரிக்க இந்தியாவில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை, டசால்ட் நிறுவனம் தேர்ந்தெடுத்து ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட்டது. இதில் ஊழல் நடந்திருக்கிறது என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்தநிலையில், இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், ரபேல் போர் விமானங்கள் தொடர்பான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. போர் விமானங்கள் கொள்முதல் நடைமுறை முழு திருப்தி அளிக்கிறது. மேலும் ரபேல் போர் விமானங்களின் தரத்தில் எந்தவித குறைபாடும் இல்லை. எந்தவிதத்திலும் அன்றைய நிலையோடு, தற்போதைய நிலையை ஒப்பிடுவது நீதிமன்றத்தின் பணி இல்லை என்பதுபோல பல அம்சங்களைக் கூறி, ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இந்த தீர்ப்பு தங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று பா.ஜ.க. மகிழ்ச்சியடைகிறது. இந்தி பேசும் 3 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வியால் பா.ஜ.க.வுக்கு சறுக்கல் ஏற்பட்ட நிலையில், இந்த தீர்ப்பு பெரிய நிம்மதியை கொடுத்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வில்லை. ஏனெனில், இந்த தீர்ப்பில் இந்திய கணக்கு தணிக்கை அதிகாரி விமான விலை குறித்து தாக்கல் செய்த அறிக்கையை நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு ஆராய்ந்து இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் பொதுக்கணக்கு குழு தலைவரான காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே அப்படி அறிக்கை தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்கவேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை. ஆனால், பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷா, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கலாம். நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்கலாமா? என்பதை நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆக, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்திலேயே இதற்கென தனியாக ஒரு நாள் ஒதுக்கி, விரிவான விவாதங்களை மேற்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்பதே சாலச் சிறந்ததாகும்.

Next Story