விவசாயக் கடன் ரத்து மட்டும் வறுமையை போக்கிவிடுமா?


விவசாயக் கடன் ரத்து மட்டும் வறுமையை போக்கிவிடுமா?
x
தினத்தந்தி 19 Dec 2018 10:30 PM GMT (Updated: 19 Dec 2018 5:06 PM GMT)

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்தி பேசும் மாநிலங்களான இந்த 3 மாநிலங்களும் பா.ஜ.க.வின் கோட்டையாகவே கருதப்பட்டது.

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்தி பேசும் மாநிலங்களான இந்த 3 மாநிலங்களும் பா.ஜ.க.வின் கோட்டையாகவே கருதப்பட்டது. ஆனால், அதையும் மீறி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது என்றால், அதற்கு ஒரு முக்கியமான காரணம் விவசாயிகள் பெருமளவில் ஓட்டுபோட்டதுதான். இந்த பகுதிகளில் விவசாயிகள் கடன் தொல்லையாலும், விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைக்காததாலும் வறுமையில் வாடினர். அவர்கள் ஆதரவைப் பெறும்வகையில் ராகுல்காந்தி தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசும்போது, காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெறவைத்தால், ஆட்சி அமைத்த 10 நாட்களுக்குள் விவசாயக்கடன் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இது இடம்பெற்றிருந்தது. இந்த வாக்குறுதி கடைக்கோடி கிராமத்தில் உள்ள விவசாயியின் உள்ளத்தை தொட்டது. ஆக, விவசாயக்கடன் ரத்து என்ற ஒரே தாரக மந்திரத்தை வைத்து காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டது. 

மத்தியபிரதேச மாநில முதல்–மந்திரியாக கமல்நாத் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே அவர், ராகுல்காந்தி உறுதியளித்த, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்த விவசாயக்கடனை ரத்து செய்வதாக கூறினார். நான் பதவியேற்றவுடன் முதலில் கையெழுத்திட்ட கோப்பு ‘ரூ.2 லட்சம் வரையிலான விவசாயிகள் கடனை ரத்து செய்ததுதான்’ என்றார். இதன்படி, 2018–ம் ஆண்டு மார்ச் 31–ந் தேதிவரை கூட்டுறவு வங்கிகளிலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாயிகள் ரூ.2 லட்சம் வரை வாங்கிய குறுகியகால கடன்கள் ரத்து செய்யப்படும். இதன்மூலம் 34 லட்சம் விவசாயிகள் பயனடையப்போகிறார்கள். ரூ.35 ஆயிரம் கோடி முதல் ரூ.38 ஆயிரம் கோடிவரை அரசுக்கு செலவாகும். இதுபோல, கடன் ரத்து தொடர்பான அறிவிப்பை சத்தீஷ்கார் மாநில முதல்–மந்திரியும் அறிவித்தார். குறுகியகால விவசாயக்கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அவரும் பதவியேற்றவுடன் அறிவித்துவிட்டார். எந்தநேரத்திலும் ராஜஸ்தான் முதல்–மந்திரியும் இதுபோன்ற அறிவிப்பை நிச்சயமாக வெளியிட்டுவிடுவார். 

விவசாயக்கடன் ரத்து என்பது விவசாயிகளுக்கு உடனடி பயன்கொடுப்பதாகும். ஆனால், இது ஒரு காயத்துக்கு பேண்ட் எய்டு போடுவதுபோலத்தான். காயத்தை முழுமையாக ஆற்றுவதற்கு இது போதாது. அதுபோல, விவசாயிகளின் துயரத்தைப்போக்க கடன் ரத்து மட்டுமே போதாது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவேண்டும். அதற்கு நெல், கோதுமை போன்ற அரசாங்க கொள்முதல் நிலையங்கள்போல, மற்ற பயிர்களுக்கும் அரசு நிர்ணயித்த ஆதாரவிலையில் கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் செய்யவேண்டும். நாடு முழுவதும் அரசு நிர்வகிக்கும் கொள்முதல் நிலையங்கள் மட்டும் கொள்முதல் செய்துவிடமுடியாது. வேளாண் பொருட்கள் வணிகத்தில் உள்ள பெரிய நிறுவனங்களையும் இதுபோன்ற கொள்முதல் நிலையங்கள் அமைத்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவேண்டும். இப்போது கடன் ரத்து செய்யப்பட்டுவிட்டாலும், இனிமேல் விவசாயிகளின் செலவுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கவேண்டும். விளைபொருட்களை விவசாயிகள் சேமித்துவைக்க அரசே ஆங்காங்கு கிட்டங்கிகளையும், குளிர்சாதன கிட்டங்கிகளையும் ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை லாபகரமான விலையில் விற்க சந்தை வசதியையும் ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். மாடு, ஆடு, தேனீ வளர்ப்பு போன்ற உபதொழில்களை விவசாயிகள் மேற்கொள்ள அரசே உதவிகள் செய்யவேண்டும் என்பதுபோன்ற பல ஆலோசனைகளை வேளாண் துறை வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

Next Story