கம்ப்யூட்டர் தகவல்கள் கண்காணிப்பு


கம்ப்யூட்டர்  தகவல்கள் கண்காணிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2018 10:30 PM GMT (Updated: 2018-12-23T22:36:47+05:30)

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டதில் இருந்து பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில்கூட செல்போன்களில் இணையதளம் மூலம் பல தகவல்களை பெறுகின்றனர்.

ந்தியாவில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டதில் இருந்து பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில்கூட செல்போன்களில் இணையதளம் மூலம் பல தகவல்களை பெறுகின்றனர். தகவல் பரிமாற்றங்களையும் மேற்கொள்கிறார்கள். அரசே வர்த்தகங்களிலும், வங்கிகளிலும், டிஜிட்டல் பணபரிமாற்றங்கள் செய்வதை ஊக்குவிக்கிறது. வர்த்தக நிறுவனங்களிலும், கடைகளிலும், தொழில் நிறுவனங்களிலும், ஏன் சின்னஞ்சிறு கடைகளில்கூட கம்ப்யூட்டர் பயன்பாடு வளர்ந்து வருகிறது. அலுவல் ரீதியாக மட்டுமல்லாமல், குடும்பங்களில்கூட, ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றங்கள் இப்போது கம்ப்யூட்டர் மூலமாகத்தான் நடக்கிறது.

ஆனால், தற்போது நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் 10 விசாரணை அமைப்புகள் கண்காணிக்கலாம் என்று மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ‘ஐ.பி.’ என்று சொல்லப்படும் உளவுப்பிரிவு, போதைமருந்து தடுப்புப்பிரிவு, அமலாக்கப்பிரிவு, மத்திய நேரடி வரிகள் வாரியம் (வருமானவரி), வருவாய் புலனாய்வு இயக்குனரகம், சி.பி.ஐ., தேசிய புலனாய்வு அமைப்பு, ‘ரா’ பிரிவு, காஷ்மீர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் இயங்கும் ராணுவத்திற்கான சிக்னல் உளவு இயக்குனரகம், டெல்லி போலீஸ் கமி‌ஷனர் போன்ற 10 மத்திய அமைப்புகள் இப்போது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் கம்ப்யூட்டர்களை கண்காணிக்கும் அதிகாரம் படைத்தவை. இதன்படி, நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை கண்காணிப்பது, கம்ப்யூட்டர் மூலம் பரிமாறப்படும் தகவல்களை கண்காணிப்பது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும் தகவல்களை கண்காணிப்பது, இதுபோன்ற தகவல்களை இடைமறித்து ஆய்வுசெய்வது, தடைசெய்வது மற்றும் கம்ப்யூட்டரில் அனுப்பப்படும் தகவல்களின் உண்மைத்தன்மை ஆராய்வது என்பதுபோன்ற பல அதிகாரங்கள் இந்த 10 அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை அமைப்புகள் கேட்கும்போது, தகவல் தொடர்பு சேவையாளர், பயன்பாட்டாளர், கம்ப்யூட்டர் உரிமையாளர் அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் செய்து ஒத்துழைக்கவில்லையென்றால், 7 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற கண்காணிப்பை மேற்கொள்வது, 5 காரணங்களின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. தேசிய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டு நலன், நாட்டின் ராணுவ பாதுகாப்பு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாடுகளோடு நட்புறவு, பொது அமைதி மற்றும் மேற்கண்ட அம்சங்களுக்கு எதிராக செய்யப்படும் குற்றங்களை மேற்கொள்வதற்கு தூண்டுதல் ஆகியவையே இந்த உத்தரவு அமல்படுத்துவதற்கான அம்சங்களாகும். இறையாண்மையை பாதுகாத்தல், நாட்டின் ராணுவ பாதுகாப்பு, பயங்கரவாதிகள் இந்திய மக்களை மூளை சலவை செய்து அவர்கள் அமைப்பில் சேர முயற்சிப்பதை தடுத்தல் என்பதுபோன்ற நோக்கங்களுக்காக மட்டும் இந்த கண்காணிப்பை பயன்படுத்தினால் நிச்சயம் வரவேற்கத்தக்கதாகும். ஆனால், இந்த பணிகளுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டுமானால், இத்தனை அமைப்புகளுக்கு அதிகாரம் தேவையில்லையே. இப்போது இருக்கும் சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த பணிகளுக்கான அமைப்புகளுக்கு அதிகாரம் இருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிப்பது என்பது ஒரு கொடூரமான உத்தரவு, தனிநபர் ரகசியம் எனப்படும் பிரைவசிக்கு எதிரானது என்பது எதிர்க்கட்சிகளின் கருத்தாக இருக்கிறது. இது நிச்சயமாக கம்ப்யூட்டர் பயன்பாட்டாளர் அனைவரையும் அச்சுறுத்துவதாக இருக்கிறது. தனிமனித சுதந்திரம், வர்த்தகர்கள், தொழில்அதிபர்கள் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள் ஆகியவற்றை தேவையில்லாமல் கண்காணிப்பதை தவிர்க்கவேண்டும்.

Next Story