அய்யப்ப பக்தர்கள் கொதிப்பு


அய்யப்ப பக்தர்கள் கொதிப்பு
x
தினத்தந்தி 3 Jan 2019 10:00 PM GMT (Updated: 2019-01-03T18:46:58+05:30)

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு மட்டும் என்று தனியாக வழிபாட்டு முறைகள் உண்டு. இந்த கோவிலுக்கு ஆண் பக்தர்களை தவிர, 10 வயதுக்கு குறைவான பெண்களும், 50 வயதுக்கு அதிகமான பெண்களும் போகலாம் என்பது இதில் முக்கியமான வழிபாட்டு முறைகளாகும்.

பாலின பாகுபாடு காட்டுவது சட்டவிரோதம் என்றுகூறி, சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி வழங்கி கடந்த செப்டம்பர் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு வெளியிடப்பட்டது. இந்த தீர்ப்பு அய்யப்ப பக்தர்களின் மனதில் பெரும் வேதனையை அளித்தது. அன்றுமுதல் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களெல்லாம் யாராவது பெண்கள் வந்துவிடுவார்களோ? என்ற அச்சத்தில் அவர்களை கண்காணிப்பதில்தான் தங்களது கவனத்தை அதிகமாக செலுத்தினார்கள். பக்தி மணம் கமழவேண்டிய அந்தநேரத்தில், பக்தர்களின் மனம் கண்காணிப்பில்தான் அதிகமாக இருந்தது. பல பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்தனர். ஆனால், அய்யப்பன் கோவிலில் இருந்த பக்தர்களின் எதிர்ப்பால் அவர்களால் போகமுடியவில்லை. 

கண்ணூர் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை உதவி பேராசிரியையாக பணிபுரியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியை சேர்ந்த 42 வயதுள்ள பிந்து என்ற பெண்ணும், மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளரான கனகதுர்கா என்ற கேரள சிவில் சப்ளை கார்ப்பரே‌ஷன் உதவி மேலாளரும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் கடந்த டிசம்பர் 24–ந்தேதி நுழைய முயற்சி செய்தனர். அப்போது பக்தர்களின் எதிர்ப்பால் திரும்பிசென்ற அவர்கள், ஏதோ ஒரு இடத்தில் மறைவாக தங்கியிருந்து மீண்டும் சபரிமலைக்குள் நுழைய ரகசிய திட்டம் தீட்டினர். தங்கள் திட்டத்தை செயல்படுத்தும்வகையில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் ஆதரவோடு நடந்த பெண்கள் சுவர் போராட்டம் முடிந்தநிலையில், மாநில போலீசாரின் துணையோடு அழைத்துவரப்பட்டு அதிகாலை 2 மணிக்கு பம்பாவுக்கு வந்து, அங்கிருந்து 45 மணி நிமிடம் நடந்துசென்று அதிகாலை 3.38 மணிக்கு சபரிமலையில் 18 படி ஏறும்வழியை தவிர்த்து, பின்புறம் வழியாக சன்னிதானத்திற்குள் அழைத்துச்செல்லப்பட்டு, ஒருசில நிமிடம் மட்டும் இருந்து மீண்டும் போலீசாரால் அழைத்துவரப்பட்டு, இப்போது எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று தெரியாத இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பக்தர்களோ, பத்திரிகையாளர்களோ அதிகம் இல்லாத இந்த அதிகாலை நேரத்தை தேர்ந்தெடுத்து அய்யப்பன் கோவிலில் இதுவரையில் நடக்காத ஒன்றை அரங்கேற்றிவிட்டார்கள்.

அதிகாலையில் இப்படி பெண்கள் நுழைந்துவிட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன், தந்திரிகள் அய்யப்பன் கோவிலின் நடையை சாத்தி பரிகார பூஜைகள் நடத்தி இருக்கிறார்கள். கேரளா முழுவதிலும் திரளான மக்களால் இதை தாங்கிக்கொள்ளமுடியாமல், நேற்று கடை அடைப்பு நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் உள்பட ஏராளமான அமைப்புகள் சேர்ந்து கடை அடைப்பு, பேரணி என்று தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர். அய்யப்ப பக்தர்கள் அனைவரும் கொந்தளித்து எழுந்துள்ளனர். இனி சபரிமலையில் ஒரு அமைதியான சூழ்நிலை ஏற்படுவது நிச்சயமாக சந்தேகத்திற்குரியதுதான். இடதுசாரி உணர்வுள்ள மேலும் பல பெண்கள் சபரிமலைக்குள் செல்ல முயற்சிப்பார்கள். பக்தர்கள் அவர்களை தடுக்க முயற்சிப்பார்கள். சபரிமலை கோவிலில் பக்திதான் நிலவவேண்டுமே தவிர, புரட்சி உணர்வுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதை எல்லோரும் உணரவேண்டும்.

Next Story