தலையங்கம்

வாஜ்பாய் வழியில் கூட்டணி + "||" + Vajpayee's way is on the coalition

வாஜ்பாய் வழியில் கூட்டணி

வாஜ்பாய் வழியில் கூட்டணி
ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும்நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறப்போகின்றன?, பா.ஜ.க. கூட்டணியில் எந்த கட்சிகள் எல்லாம் இடம்பெறப்போகின்றன? என்ற பரபரப்பில் தமிழக மக்கள் இருக்கிறார்கள்.
காங்கிரசை பொறுத்தமட்டில், கடந்த மாதம் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலையை சோனியாகாந்தி திறந்து வைத்தபோது நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணியில், ‘பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான்’ என்று இந்தியாவிலேயே முதல்முறையாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது பெயரை முன்மொழிந்தார். மேலும், பா.ஜ.க.வுடன், தி.மு.க. ஒருபோதும் கூட்டணி அமைக்காது என்று நேற்று மு.க.ஸ்டாலின் ஆணித்தரமாக அறிவித்து விட்டார். 

இந்தநிலையில், பா.ஜ.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேரும் என்ற கேள்விக்கு இதுவரையில் விடைதெரியாமல் இருந்தநிலையில், பூர்வாங்கமாக ஒரு பதிலை பிரதமர் நரேந்திரமோடி நேற்றுமுன்தினம் அரக்கோணம், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசும்போது கோடிட்டு காட்டி விட்டார். அப்போது, வாக்குச்சாவடி பொறுப்பாளர்களில் ஒருவர், ‘தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன், ரஜினிகாந்துடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்கப் போகிறது, தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்படுகின்றன, இதை தெளிவுபடுத்த வேண்டும்’ என்று கேட்டார். 

இதற்கு பதில் அளித்த நரேந்திரமோடி தமிழகத்தை பொறுத்தவரையில், வாஜ்பாய் காட்டிய வழியில் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும். பழைய நண்பர்கள் மீது அன்புகொண்டு இருக்கிறோம். அவர்களை இணைத்துக்கொள்ள தயாராக இருக்கிறோம். அவர்களுக்காக நமது கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கும். வாஜ்பாய் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைத்திருந்தார் என்று போகப்போகும் பாதையை அந்தக்கூட்டத்தில் காட்டிவிட்டார். இதில் என்ன குழப்பம் என்றால், வாஜ்பாய் 2 வழிகளை காட்டியிருக்கிறார். 1998 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., சுப்பிரமணியசுவாமி ஜனதா கட்சி, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது. 1999–ல் அப்படியே மாறியது. தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., திருநாவுக்கரசர் தொடங்கிய எம்.ஜி.ஆர். அ.தி.மு.க., தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த கூட்டணி தமிழகத்தில் 26 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. கூட்டணி கட்சிகளை மந்திரி சபையிலும் வாஜ்பாய் சேர்த்தார். 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியும் நடத்தினார். ரஜினிகாந்தை பொறுத்தமட்டில், இப்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கட்சி தொடங்க முடியாது. ஏனெனில், இன்று கட்சியை தொடங்கும் முடிவை அறிவித்து தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தாலும், பதிவு செய்ய 4 மாதங்கள் ஆகும். எனவே, இந்த தேர்தலில் நிச்சயமாக ரஜினிகாந்துடன் கூட்டணி அமைக்க முடியாது. அவர் ஆதரவு தெரிவிப்பாரா?, இல்லையா? என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியும். ஆக, இப்போது தி.மு.க., அ.தி.மு.க. தவிர, அந்த இரு கூட்டணிகளிலும் பா.ஜ.க.வோடு இருந்த கட்சிகள் என்றால் ம.தி.மு.க.வும், பா.ம.க.வும்தான் இருக்கிறது. ம.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவே வைக்காது என்று வைகோ உறுதிபட தெரிவித்து விட்டார். பா.ம.க.வின் நிலை மட்டும் தெரியவில்லை. பழைய கூட்டணிகளில் மீதமுள்ள நண்பர்கள் என்றால் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும்தான். பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் சேருமா? என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பாகும்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழரின் பெருமையை பறைசாற்ற வேண்டும்
‘தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவருக்கோர் குணமுண்டு’, என்று பாடினார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. பண்டைய காலந்தொட்டே தமிழன் நாகரிகத்தோடு வாழ்ந்தான் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
2. செயற்கை மழை - சிறந்த யோசனை
தமிழ்நாட்டில் தேர்தல் சூறாவளியால், இப்போது நிலவும் கடுமையான வறட்சி யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. எங்கு பார்த்தாலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
3. மக்களை கவருமா? காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
வருகிற 11–ந்தேதி தொடங்கி மே 19–ந் தேதிவரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை மக்கள் வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
4. வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் 2004, 2009, 2014-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
5. மக்கள் எதிர்பார்ப்பு மானியம் அல்ல
பொதுவாக ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் ஓட்டுகளை கவர்வதற்காக மானிய மழையை பொழிவதுண்டு. எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு இலவசங்களையும், மானியங்களையும் வழங்குவோம் என்று வாக்குறுதிகளை வாரி வாரி வழங்குவார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை