மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரிய பாதிப்பு


மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரிய பாதிப்பு
x
தினத்தந்தி 28 Jan 2019 10:30 PM GMT (Updated: 28 Jan 2019 1:09 PM GMT)

‘‘இரண்டு யானைகள் சண்டைபோட்டால் காலடியில் உள்ள புல்தான் பெரும் பாதிப்புக்குள்ளாகும்’’ என்பது ஆப்பிரிக்க நாட்டின் பழமொழி. அதுதான் இப்போது தமிழ்நாட்டிலும் நடந்துகொண்டிருக்கிறது.

ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ கடந்த ஒருவார காலமாக காலவரையற்ற போராட்டத்தை நடத்திவருகிறார்கள். அரசு பணிகள் பாதிக்கப்பட்டாலும், ஓரளவிற்கு அதை ஈடுகட்டிவிடமுடியும். ஆனால், கடந்த ஒருவார காலமாக பள்ளிக்கூட ஆசிரியர்கள் நடத்திவரும் போராட்டத்தால் மாணவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். அரசு கடும்நடவடிக்கை எடுத்து சஸ்பெண்டு மற்றும் கைது நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இன்று அவர்கள் பணியில் சேர்கிறார்கள். 

வேலைநிறுத்தத்திற்கு காரணமாக 1–4–2003–க்கு பிறகு அமலுக்கு கொண்டுவந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டுவிட்டு, பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்தவேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்தியஅரசுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். 21 மாத ஊதியமாற்ற நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கவேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்படவேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை ஆசிரியர்கள் முன்னெடுத்து வேலைநிறுத்தம் செய்துவருகிறார்கள்.

செயல்படுத்தமுடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவேண்டாம். உடனடியாக பணிக்கு திரும்புங்கள் என்று அரசு தரப்பில், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதியதிட்டம் என்பது 2003–ம் ஆண்டிலேயே சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தனியாக நடைமுறையில் இல்லை. 174 நாடுகள் மற்றும் இந்தியாவில் மேற்குவங்காளம் தவிர, அனைத்து மாநிலங்களிலும் புதிய ஓய்வூதிய திட்டம்தான் அமலில் இருக்கிறது. ஊதியஉயர்வு நிலுவைகள் எல்லாம் உடனடியாக வழங்கமுடியாது. அரசின் வருவாய் பற்றாக்குறை அதாவது, அரசுக்கு கிடைக்கும் வருவாயைவிட கூடுதல் செலவு இந்த ஆண்டு ரூ.24 ஆயிரம் கோடியாக இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு ஊதியநிலுவை வழங்கவேண்டுமென்றால் ரூ.20 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகிறது. இதை சமாளிக்கவேண்டுமென்றால், பொதுமக்கள்மீது கூடுதல் வரிச்சுமையை திணிப்பது ஒன்றே வழியாகும். இதைசெய்ய அரசு தயாராக இல்லை. இதுபோல, மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசிடம் பணம் இல்லை என்று மிகத்தெளிவாக அறிவித்துவிட்டது. மாணவர்களை பொறுத்தமட்டில், அடுத்த 2 மாதங்களில் இறுதித்தேர்வு எழுதவேண்டும். இந்த ஒருவருட உழைப்பும் தற்போது ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது. நேற்று மதுரை ஐகோர்ட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் ஏற்கத்தக்கதல்ல. தமிழக அரசும், சங்கங்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளனர். போராட்டம் நடத்துவதற்கு தேர்வுகாலம்தான் சரியான நேரமா?, தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்பமுடியுமா? என்பதை இன்று பிற்பகலில் ஜாக்டோ–ஜியோ தெரிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி என்.கிருபாகரன் கேட்டு இருக்கிறார். இந்தநிலையில், அரசும், ஆசிரியர்களும், மாணவர்களின் நலனை மனதில் நினைத்து, இந்தப்போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும். மாணவர்களின் தேர்வுமுடிந்து விடுமுறைக்காலத்தில் இந்தப்பிரச்சினையை இருதரப்பும் கையில் எடுத்துக்கொள்ளலாம். இப்போது உங்கள் மோதலால் இளந்தளிர்களான எங்களை நசுக்கிவிடாதீர்கள் என்பதுதான் மாணவர்களின் கோரிக்கையாகும்.

Next Story