பயன் அளிக்கும் இடைக்கால பட்ஜெட்


பயன் அளிக்கும் இடைக்கால பட்ஜெட்
x
தினத்தந்தி 1 Feb 2019 10:30 PM GMT (Updated: 1 Feb 2019 2:13 PM GMT)

ஏப்ரல்–மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கின்ற நேரத்தில், புதிய நிதிஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.

இந்தநிலையில், நேற்று இடைக்கால பட்ஜெட்டை தற்காலிக நிதிமந்திரி பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். பொதுவாக இடைக் கால பட்ஜெட்களில் பெரிய அளவில் வரிமாற்றங்கள் அல்லது கொள்கைமுடிவுகள் அறிவிக்கப்படுவதில்லை. ஆனால் அப்படி பெரிய அறிவிப்புகள் அறிவிக்கக்கூடாது என்று விதிகளும் இல்லை. ஆனால் தற்போதைய 

பா.ஜ.க. அரசாங்கத்தின் இடைக்கால பட்ஜெட், ‘எல்லோரையும் மகிழ்விக்கும் இடைக்கால பட்ஜெட்டாகத்தான் இருக்கும்’ என்று பல அறிவிப்புகள் தொடர்பாக யூகங்கள் கடந்த சிலதினங்களாக வெளி யிடப்பட்டு வந்தன. அவையெல்லாம் உண்மை என்று நிரூபிக்கும் வகையில் நேற்றைய பட்ஜெட் பிரதிபலித்தது. 

பட்ஜெட் உரையின் தொடக்கத்தில், பியூஸ் கோயல் இதுவரை பா.ஜ.க. அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதில் படைத்த சாதனைகளை பட்டிய லிட்டார். ஆங்கிலத்திலும், இந்தியிலும் கலந்துபேசிய அவரது உரையில், ‘ஒரு திட்டம் பாக்கியில்லாமல் அனைத்து திட்டங்களின் சாதனைகளையும் பட்டியலிட்டு, உலகிலேயே பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் 6–வது நாடு இந்தியா. மிக வேகமாக வளர்ந்து வரும்’ நாடு என்றும் பெருமைபட கூறினார். இதையெல்லாம் தேர்தல் பிரசாரத்திற்கு 

பா.ஜ.க. அப்படியே படித்தால் போதும் என்ற அளவில் இருந்தது. விவசாயிகள், தொழிலாளர்கள், வருமானவரி கட்டும் நடுத்தர மக்கள் என்று ஒருவர் பாக்கியில்லாமல் பலதரப்புக்கும் பயனளிக்கும் பட்ஜெட்டாக அமைந்தது மிகவும் பாராட்டுக்குரியதாக இருந்தது. ராகுல்காந்தி, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் பல திட்டங்களை நிறைவேற்றுவோம்’ என்று பொதுக்கூட்டங்களில் பட்டியலிட்டு கொண்டிருக்கிறார். இந்தநிலையில், பிரதமர் நரேந்திரமோடி மிக சாமர்த்தியமாக பணஉதவி அளிக்கும் திட்டத்தை அறிவித்துவிட்டார். 

சிறு, குறு விவசாயிகளுக்கு 3 தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அவர்கள் வங்கிக்கணக்கி லேயே செலுத்தப்படும் என்று 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள 12 கோடி விவசாயிகளுக்கு பலனளிக்கும் திட்டம் இந்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்காக அடுத்த ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதமே முன்தேதியிட்டு வழங்க ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், பல்வேறு வட்டிச்சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 கோடி தொழிலாளர்களுக்கு பென்‌ஷன் அளிக்கும் திட்டம் கொண்டுவரப்படுகிறது. தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பென்‌ஷன் ரூ.1,000 என நிர்ணயிக்கப் படுகிறது என்பதுபோன்ற விவசாயிகளுக்கும், ஆம்–ஆத்மி என்று கூறப்படும் ஏழை மக்களுக்கும் பயனளிக்கும் பலதிட்டங்கள் இந்த பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ளன. வருமானவரி கட்டும் 

3 கோடி மக்கள் வரிவிலக்கு பெறும் வகையில், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரையில் வருமானவரி கட்டத்தேவையில்லை. சேமிப்பு முதலீடுகளில் ரூ.1½ லட்சம் பணம் கட்டினால் ரூ.6½ லட்சம் வரை வரி கட்ட வேண்டியதில்லை. இதுமட்டுமல்லாமல், ‘ஸ்டாண்டர்டு டிடக்சன்’ என்று கூறப்படும் நிரந்தரக் கழிவு ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பலனளிக்கும் பட்ஜெட்டை பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு பரிசாக வழங்கிவிட்டார் என்பதுதான் நிதர்சனமான உண்மை. தேர்தல் பிரசார பட்ஜெட் என்று சொல்லாவிட்டாலும், தேர்தல் பிரசாரத்துக்கு 

பா.ஜ.க.வுக்கு நிச்சயமாக இந்த இடைக்கால பட்ஜெட் கைகொடுக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

Next Story