தமிழர் தந்தைக்கு தமிழக அரசு தந்த கவுரவம்


தமிழர் தந்தைக்கு தமிழக அரசு தந்த கவுரவம்
x
தினத்தந்தி 14 Feb 2019 10:30 PM GMT (Updated: 2019-02-14T22:42:14+05:30)

தமிழர்களின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ‘தினத்தந்தி’யை நிறுவி, தமிழ்மொழிக்காக, தமிழ்நாட்டுக்காக, தமிழர்களுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டு போராட்ட வாழ்க்கையை வாழ்ந்தவர் சி.பா.ஆதித்தனார்.

ட்டசபையில் நேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110–வது விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், இரட்டைமலை சீனிவாசன், வி.கே.பழனிசாமி கவுண்டர், சர். ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மணிமண்டபங்களும், அல்லாள இளைய நாயகருக்கு திருவுருவ சிலையும், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கனார் ஆகியோரின் மணிமண்டபங்களை புனரமைத்து நூலகங்கள் அமைக்கவும் அறிவிப்பு வெளியிட்டார். இதுபோல பென்னிகுயிக், காலிங்கராயன் ஆகியோருக்கு ஆண்டுதோறும் அரசு விழா கொண்டாடப்படும். வீரன் அழகுமுத்துகோன், ம.பொ.சி. சிலைகளுக்கு ஆண்டுதோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். சி.பா.ஆதித்தனார் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடவேண்டுமென்று தமிழ் ஆர்வலர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனாரின் திருவுருவ சிலைக்கு அவர் பிறந்த நாளான செப்டம்பர் 27 அன்று அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்து, தமிழக மக்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.

தமிழர்களின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ‘தினத்தந்தி’யை நிறுவி, தமிழ்மொழிக்காக, தமிழ்நாட்டுக்காக, தமிழர்களுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டு போராட்ட வாழ்க்கையை வாழ்ந்தவர் சி.பா.ஆதித்தனார். அண்ணா ஆட்சியின்போது, சபாநாயகராகவும், கலைஞர் கருணாநிதி அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றி, பிறகு விவசாயத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். ஏற்கனவே விவசாயிகள் மீது அதிக அன்புகொண்ட அவர், மாத்தூர் விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமைதாங்கி கைது செய்யப்பட்டநேரத்தில், கைவிலங்கிடப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டவர். 1905–ம் ஆண்டு செப்டம்பர் 27–ந்தேதி அன்றைய நெல்லை மாவட்டத்திலும், இப்போது தூத்துக்குடி மாவட்டத்திலும் உள்ள காயாமொழி என்ற ஊரில் பிறந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், 1981–ம் ஆண்டு மே மாதம் 24–ந்தேதி காலமானார். ‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’ என்று முழங்கி அதற்கேற்ற வகையில், வாழ்ந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது தமிழ் உள்ளங்களை பூரிப்படைய செய்துள்ளது. 

சி.பா.ஆதித்தனாருக்கு சென்னை எழும்பூரில் சிலையமைத்தது மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர்.தான். எழும்பூர் பாந்தியன் சாலையில் 5 சாலைகள் சந்திக்கும் இடத்தில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலை அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து, 1987–ம் ஆண்டு மே மாதம் 24–ந்தேதி அந்த சிலையை திறந்து வைத்தார். சென்னை ஹாரீஸ் சாலைக்கு சி.பா.ஆதித்தனார் சாலை என பெயர் சூட்டியதும் அவர்தான். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா 2005–ம் ஆண்டு செப்டம்பர் 27–ந்தேதி சட்டசபையில் 110–வது விதியின் கீழ் ஸ்ரீவைகுண்டத்தில் ஆதித்தனார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக்கி, அங்கு டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே ஆதித்தனாரின் மகனும், ‘தினத்தந்தி’யை வழிநடத்தி சென்றவருமான டாக்டர் பா.சிவந்திஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் அரசு சார்பில், மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கடந்த 26–10–2018 அன்று இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு, அந்தப்பணியும் மிகத்தீவிரமாக நடந்துவருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்துவரும் எடப்பாடி பழனிசாமி இப்போது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆதித்தனாருக்கு புகழ் சேர்த்ததுபோல, ‘தமிழர் தந்தை ஆதித்தனார் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்’ என்று கூறியது நிச்சயமாக ஆதித்தனார் புகழுக்கு மகுடம் சூட்டியதுபோல் அமையும். எம்.ஜி.ஆர். திறந்துவைத்த ஆதித்தனார் சிலையை புதுப்பித்தவரும், அதைசுற்றியுள்ள பகுதிகளை அழகுப்படுத்தியவரும் எடப்பாடி பழனிசாமிதான். தமிழர் தந்தை ஆதித்தனாருக்கு பெருமைசூட்டிய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக அரசுக்கும் தமிழ்கூறும் நல்லுலகம் நன்றி கூறுகிறது, போற்றி பாராட்டுகிறது.

Next Story