சிமெண்டுக்கு வரியை குறைக்கலாம்


சிமெண்டுக்கு வரியை குறைக்கலாம்
x
தினத்தந்தி 25 Feb 2019 9:40 PM GMT (Updated: 25 Feb 2019 9:40 PM GMT)

கட்டுமான தொழில் கீழ்மட்டத்திலுள்ள ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வாரி வழங்குகிறது.

அதனால்தான் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ந்தால், கட்டுமான தொழிலாளர்கள், பிளம்பர்கள், மின்சார வேலைகளுக்கான தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் போன்ற ஏராளமானவர்களுக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்தத்தொழில் வளர்ந்தால் நாட்டில் பணப்புழக்கமும் பெருகும். வர்த்தகம் தழைக்கும். அரசுக்கும் வருவாய் பெருகும். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பிறகும், சரக்கு சேவைவரி அமலுக்கு வந்தப்பிறகும் இந்தத்தொழிலில் பெரும்பாதிப்பு ஏற்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களிடையே பணப்புழக்கம் இல்லாதநிலை உருவானது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் எல்லாப்பொருட்களின் விலையுமே பெருமளவில் உயர்ந்து வந்தது. இதனால் சென்னை உள்பட 7 பெரிய நகரங்களில் மட்டும் 5 லட்சத்து 88 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், விற்பனையாகாமல் அப்படியே இருந்தது. இதில் 34 சதவீத வீடுகளின் விலை ரூ.40 லட்சத்துக்கும் குறைவாகும். இந்த ரியல் எஸ்டேட் தொழிலை வளர்க்க, சரக்கு சேவைவரியை குறைக்க வேண்டும் என்று கடந்த பலமாதங்களாக கோரிக்கை விடப்பட்டுவந்தது.

இந்தநிலையில், மத்திய நிதிமந்திரி தலைமையில், மாநில நிதிஅமைச்சர்கள் கொண்ட சரக்கு சேவைவரி கவுன்சிலின் 33-வது கூட்டம் கடந்த 24-ந்தேதி டெல்லியில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் எல்லோரும் வரவேற்கத்தக்க ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்கள் வாங்க கூடிய அளவிற்கான வீடுகள் அதாவது, குறைந்தவிலை வீடுகள் என்பதற்கான வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்தது. கடந்த கூட்டத்தில் ரூ.40 லட்சமாகவும், இப்போது ரூ.45 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாங்கக்கூடிய வீடுகள் என்பதற்கான நிலப்பரப்பு வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் 646 சதுரஅடி தரைபரப்பில் ரூ.45 லட்சம் செலவில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீடுகள் அல்லது அடுக்குமாடி வீடுகளும் மற்ற பெருநகரங்கள், நகர்ப்பகுதிகளில் 969 சதுரஅடி தரைப்பரப்பில் கட்டப்படும் ரூ.45 லட்சம் மதிப்பிலான வீடுகள், அடுக்குமாடி வீடுகளும் பொதுமக்கள் வாங்கக்கூடிய வீடுகளாக வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இந்த கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீடுகளுக்கு 8 சதவீதம் சரக்கு சேவைவரி விதிக்கப்படுகிறது. இந்தவரி ஒரு சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதுபோல, உயர்மதிப்பில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மற்ற வீடுகளுக்கு தற்போது விதிக்கப்படும் 12 சதவீதவரி, 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்ட ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்குபவர்களுக்கு சரக்கு சேவைவரி விதிக்கப்படாது. இதன்மூலம் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் கட்டப்படும் 2 படுக்கை வசதிகொண்ட வீடுகளுக்கும், மற்ற இடங்களில் 3 படுக்கை வசதிகொண்ட வீடுகளுக்கும் இந்தச்சலுகைகள் கிடைக்கும். இந்த 2 இனங்களுக்கும் உள்ளட்டு வரி திரும்பப்பெறும் வசதிகள் இனி கிடையாது. இந்த வரிச்சலுகை நிச்சயமாக ரியல்எஸ்டேட் தொழிலை வளர்ப்பதோடு நிறையபேர்கள் வீடுவாங்க உதவிகரமாக இருக்கும். ரூ.45 லட்சம் என்பது வரவேற்கத்தக்க வரம்பு என்றாலும், இப்போதெல்லாம் நடுத்தரமக்கள் வங்கிகளில் கடன்பெற்று அதைவிட அதிகமான தொகையில் பிரீமியம் வீடுகளை வாங்குவதால் அவர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும் வகையில் பரிசீலிக்க முடியுமா? என்பதை சரக்கு சேவைவரி கவுன்சில் ஆராயவேண்டும். கட்டுமான தொழில் வளரவேண்டுமென்றால், சிமெண்டு மீதான வரி குறைக்கப்படவேண்டும். தற்போது சிமெண்டுக்கு அதிகபட்ச வரியான 28 சதவீதம் விதிக்கப்படுகிறது. இதையும் குறைக்கவேண்டும். சிமெண்டு மீதான வரியை குறைத்தால் பெரிய நடுத்தர அளவிலான கட்டுமானத்தொழில் மட்டுமல்லாமல், ஏழை-எளிய மக்களுக்கு சிறியளவில் வீடுகள் கட்டுவதற்கும் நிச்சயமாக உதவிகரமாக இருக்கும். 

Next Story