பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைகிறது


பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைகிறது
x
தினத்தந்தி 4 March 2019 10:00 PM GMT (Updated: 2019-03-04T20:16:19+05:30)

தமிழ்நாட்டில் காலம்காலமாக பெண்மையை போற்றி, வாழ்த்தி வந்திருக்கிறார்கள்.

குடும்பங்களில்கூட, பெண் குழந்தை என்றால் பெரிய அளவில் செல்லமாக வைத்திருப்பார்கள். பிற்காலத்தில் வரதட்சணை, பெண்ணை திருமணம் செய்வதற்கு ஆகும் பொருட்செலவு என்பதுபோன்ற பல சமுதாய பின்னடைவுகளால் பெண் குழந்தைகள் பிறந்தால் பெரியசுமை, ஆண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்ற ஒரு எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத்தொடங்கியது. அதனால்தான் பெண் குழந்தை பிறப்பை சட்டத்துக்கு விரோதமாக தடுக்கும்போக்கு வளர்ந்து வருகிறது. கிராமப்புறங்களில் பெண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருக்கெடுவதற்கு பதிலாக, சலிப்பான உணர்வு தோன்றத்தொடங்கியது. இன்னமும் சில இடங்களில் பெண் குழந்தை பிறந்துவிட்டால், அதை கொன்றுவிடும் பெரிய சீர்கேடு நிலவுகிறது. 

இந்தநிலையில், அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்தும் முழுமையாக இத்தகைய நிலைமைகளை மாற்ற முடியவில்லை. சமீபத்தில் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்பட்டது. ஆனால் அடுத்த சிலதினங்களிலேயே இந்திய தலைமை பதிவாளர் நாடு முழுவதிலும் பிறப்பில் ஆண், பெண் விகிதங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டார். அதில் மிகவும் அதிர்ச்சித்தரத்தக்க வகையில் தென்மாநிலங்களில் கேரளாவைத்தவிர, தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் பெண் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்திருக்கிறது. சராசரியாக 1,000 ஆண் குழந்தைகளுக்கு எத்தனை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன என்ற கணக்கெடுப்பில் தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 2007–ல் 935 பெண் குழந்தைகள், 2016–ல் 840 பெண் குழந்தைகள்தான் பிறந்திருக்கிறது. இதுபோல, ஆந்திராவில் 2007–ல் 974 பெண் குழந்தைகள், 2016–ல் 806 பெண் குழந்தைகளும், கர்நாடகாவில் 2007–ல் சராசரியாக 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1,004 பெண் குழந்தைகள் பிறந்தநிலையில், 2016–ம் ஆண்டோ 896 ஆக குறைந்துவிட்டது. தெலுங்கானாவில் 2013–ல் 954 ஆக இருந்தது. 2016–ல் 881 ஆக குறைந்திருந்தது. 

இவ்வளவுக்கும் கருவிலுள்ள குழந்தை ஆணா?, பெண்ணா? என்ற சோதனையை நடத்தி அதை வெளியே சொல்வது பெரிய குற்றம் என்று நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கும் நிலையில், இந்த கணக்குகளை பார்த்தால் அதுவும் நடப்பதுபோலத்தான் தெரிகிறது. அதுபோல, பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொல்லும் வழக்கம் இன்னும் முற்றிலுமாக நிறுத்தப்படவில்லையோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது. இத்தகைய நிலையைப்போன்று செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் ஆண் குழந்தைகளை உருவாக்கம் செய்வதும், ரத்தம் மூலமான மரபணு ஆய்வின் மூலம் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிவதும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சாத்தியமான ஒன்றாக கருதப்படுகிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் இப்படி குறைந்து கொண்டேபோனால், வருங்காலத்தில் நிச்சயமாக எல்லா ஆண்களுக்கும் திருமணத்திற்காக தகுந்த வாழ்க்கைத்துணை கிடைப்பது முடியவே முடியாது. எனவே, கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழிப்பதை முழுமையாக தடைசெய்யும் நடவடிக்கைகளை அரசு இன்னும் மிகத்தீவிரமாக எடுக்கவேண்டும். ஸ்கேன் சென்டர்களில் இன்னும் கண்காணிப்பு அதிகமாக்கப்படவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்மையை போற்றும் நிலையும், பெண் குழந்தைகள் பிறந்தால் அரசு வழங்கும் சலுகைகள், பெண்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அளிக்கும் இடஒதுக்கீடுகள் ஆகியவற்றை சாதாரண பாமரமக்களும் தெரிந்து கொள்ளும்வகையில் விழிப்புணர்வை வேகப்படுத்தவேண்டும்.

Next Story