வருது... வருது... லோக் ஆயுக்தா வருது!


வருது... வருது... லோக் ஆயுக்தா வருது!
x
தினத்தந்தி 5 March 2019 9:30 PM GMT (Updated: 2019-03-05T19:08:17+05:30)

ஊழல் என்பது சமுதாயத்தில் புரையோடி போய்விட்டது. அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒரு நேர்மையற்ற செயல்பாட்டை உருவாக்குகிறது. தகுதியை பின்னுக்கு தள்ளுவது ஊழல்.

அனைத்து மட்டத்திலும் உயர்பதவிகள் தொடங்கி, சாதாரண கடைநிலை ஊழியர்கள்வரை யார்மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டாலும், பாரபட்சமின்றி விசாரிக்க ஒரு அமைப்பு வேண்டும் என்றவகையில், மத்தியில் ‘லோக்பால்’ என்ற அமைப்பையும், மாநிலத்தில் ‘லோக் ஆயுக்தா’ என்ற அமைப்பையும் உருவாக்கவேண்டும் என்று 1968–ம் ஆண்டு மே மாதம் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருக்கும்போது ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதிலிருந்து எல்லா பிரதமர் ஆட்சிக்காலத்திலும் மசோதாக்கள் மட்டும் தவறாமல் தாக்கல் செய்யப்பட்டதே தவிர, அது நிறைவேற்றப்பட்டதோ, செயல்பாட்டுக்கு வந்ததோ இல்லை. 

2012–ம் ஆண்டில் காந்தியவாதி அன்னா ஹசாரே டெல்லியில் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதம், இனியும் இந்த மசோதாவை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தமுடியாது என்றநிலையை உருவாக்கியது. இதன் எதிரொலியாக லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டும், அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. இந்தநிலையில், சுப்ரீம்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்பேரில், மத்தியில் லோக்பாலும், மாநிலங்களில் லோக் ஆயுக்தாவும் அமைக்காமல் இருக்கமுடியாது என்றநிலை உருவாகி, மத்தியில் இந்த அமைப்பை உருவாக்குவதற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8 பேர் கொண்ட தேடல்குழு அமைக்கப்பட்டது. இந்த தேடல்குழு லோக்பால் தலைவர் பதவிக்கு 5 பேரையும், 8 உறுப்பினர்கள் பதவிக்கு 24 பேரையும் பரிந்துரை செய்துள்ளது. பிரதமர் தலைமையில் சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட தேர்வுக்குழு நியமனங்களை மேற்கொள்ளவேண்டும். தேடல்குழு பரிந்துரை செய்யும் பெயர்களில் இருந்துதான் தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது இல்லை. தேர்வுக்குழு வேறு சிறந்தவரையும் தேர்ந்தெடுக்க முடியும். இந்த தேர்வுக்குழு உடனடியாக கூடி லோக்பால் அமைப்பை உருவாக்கிவிட வேண்டும். தேர்தலை காரணம் காட்டி தள்ளி போட்டுவிடக்கூடாது. 

இதுபோல, தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பிற்கு ஒரு தலைவர், 2 நீதிசார்ந்த அனுபவம்வாய்ந்த உறுப்பினர்கள், 2 நீதிசாரா அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் ஆகியோரை கொண்ட அமைப்புக்கு உறுப்பினர்களை பரிந்துரை செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன், ஓய்வுபெற்ற அட்வகேட் ஜெனரல் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. பாரி ஆகியோரை கொண்ட ஒரு தேடல்குழு, இதற்காக விண்ணப்பித்திருந்த 100–க்கும் மேற்பட்டவர்களுக்கும் நேர்முகத்தேர்வு நடத்தி பட்டியலை தயாரித்துவிட்டது. இந்த பட்டியல் அரசாங்கத்திற்கு எந்தநேரத்திலும் அனுப்பப்பட இருக்கிறது. முதல்–அமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித்தலைவர் கொண்ட குழு லோக் ஆயுக்தா என்ற அமைப்பிற்கான தலைவரையும், உறுப்பினர்களையும் நியமிக்க இருக்கிறது. தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் உறுதி அளித்தபடி, ஏப்ரல் முதல் வாரத்துக்குள் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டு, ஜூன் முதல் வாரத்துக்குள் செயல்பாட்டுக்கு வந்தே ஆகவேண்டும். லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் மீதே ஊழல் குற்றச்சாட்டு வந்த சம்பவங்களும் சில மாநிலங்களில் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் அப்படி ஏற்படாமல் அப்பழுக்கற்றவர்களை நியமித்து, ஊழல் என்ற வி‌ஷசெடியை அடியோடு பிடுங்கி எறிந்து மீண்டும் முளைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Next Story