மக்கள் எதிர்பார்ப்பு மானியம் அல்ல


மக்கள் எதிர்பார்ப்பு மானியம் அல்ல
x
தினத்தந்தி 2 April 2019 3:00 AM IST (Updated: 1 April 2019 9:54 PM IST)
t-max-icont-min-icon

பொதுவாக ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் ஓட்டுகளை கவர்வதற்காக மானிய மழையை பொழிவதுண்டு. எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு இலவசங்களையும், மானியங்களையும் வழங்குவோம் என்று வாக்குறுதிகளை வாரி வாரி வழங்குவார்கள்.

அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இந்தியாவில் உள்ள 12 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளில் வழங்கப்படும் என்று உறுதி அளித்து, முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தை 4 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாங்கிவிட்டனர். மற்றவர்களும் தேர்தலுக்குப்பிறகு இந்த தொகையை பெற்றுவிடுவார்கள். தமிழ்நாட்டில் இந்தத்திட்டத்தின்கீழ் ஏறத்தாழ 75 லட்சம் விவசாயிகள் பயனடைய வாய்ப்பு இருக்கிறது. இது மத்திய அரசாங்கம் வழங்கிய மானியம். தமிழக அரசு தன் பங்குக்கு ஏற்கனவே பொங்கலோடு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1,000 வழங்கியது. மேலும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தேர்தலுக்கு முன்பு ரூ.2 ஆயிரம் வழங்கியுள்ளது.

இப்போது பந்து காங்கிரஸ் பக்கம் என்ற வகையில், தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே ராகுல்காந்தி நாட்டில் உள்ள 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருவாயாக மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்மூலம் நாட்டில் உள்ள மொத்த குடும்பங்களில், 20 சதவீத ஏழை குடும்பங்களும், அந்த குடும்பங்களில் உள்ள 25 கோடி மக்களும் பயன்பெறுவார்கள் என்று அறிவித்துள்ளார். ‘நியாய்’ என்று கூறப்படும் ‘நீதி’ என்ற பொருளிலான இந்தத்திட்டம் குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் போன்ற பொருளாதார நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகுதான் இதை அறிவிப்பதாக கூறியிருக்கிறார். இந்தத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ஆண்டுக்கு செலவாகும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே நாட்டில் 950 மத்திய அரசாங்க நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் இது 5 சதவீதமாகும். இந்த 950 திட்டங்களில் 11 நலத்திட்டங்கள் மட்டும் மொத்த பட்ஜெட்டில் 50 சதவீத ஒதுக்கீடு செலவாகிறது. மீதமுள்ள 939 நலத்திட்டங்கள் எவை-எவை தேவை, எந்தெந்த திட்டங்களை கைவிட்டுவிடலாம் என்ற ஒரு ஆய்வு நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், இப்போது மேலும் ஒரு திட்டமாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றால் இதுவும் சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்தத்திட்டம் ஏழ்மையை ஒழிப்பதற்கான ஒரு துல்லிய தாக்குதல், இறுதி தாக்குதல் என்று ராகுல்காந்தி கூறுகிறார். ஆனால், பணம் வழங்கும் திட்டங்கள் பொதுமக்களை வேலை செய்யவிடாமல் சோம்பேறிகளாக ஆக்கிவிடும். மக்களுக்கு உதவவேண்டுமென்றால், நாட்டில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் தொழில்மயமாக்குவதிலும், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலும், விவசாய வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினால் போதும். ஏழ்மையில் இருப்பவர்கள் போதிய வருவாயை பெறும் வகையில் உரிய வேலைவாய்ப்புகள் தானாக உருவாகிவிடும் என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது. சமீபத்தில் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள 2 லட்சத்து 73 ஆயிரம் மக்களிடம் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில், மக்கள் இப்போது எதிர்பார்ப்பது என்னவென்று பட்டியல் வகுக்கப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலான மக்கள் நல்ல வேலைவாய்ப்புகள் வேண்டும் என்று முதலாவது கூறியிருக்கிறார்கள். அடுத்து நல்ல மருத்துவமனைகள், குடிநீர் வசதி, சாலை வசதி, பஸ், ரெயில் போன்ற பொது போக்குவரத்து வசதிகள் வேண்டும் விவசாயத்துக்கு தண்ணீர் வேண்டும் என்பதுபோல பலவற்றை கேட்டு இருக்கிறார்கள். ஆக, இதுதான் மக்களின் நாடித்துடிப்பாகும்.

Next Story