மேலும் தாமதமாகுமா உள்ளாட்சி தேர்தல்?


மேலும் தாமதமாகுமா உள்ளாட்சி தேர்தல்?
x
தினத்தந்தி 15 April 2019 10:00 PM GMT (Updated: 2019-04-15T19:39:51+05:30)

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இப்போது 18–ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. அதுமுடிந்தவுடன், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

பிரதமர் நரேந்திரமோடி எப்போதுமே நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டசபை தேர்தலையும் ஒன்றாக நடத்தவேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டி வந்தார். இப்போது வெளியிடப்பட்டுள்ள பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் அதைவிட ஒருபடி தாண்டி ஒரு நல்ல கருத்தை வாக்குறுதியாக தந்துள்ளார். அரசாங்க செலவை குறைக்கும் வகையிலும், அரசு அமைப்புகள், பாதுகாப்பு படைகளை மிகவும் திறமையாக பயன்படுத்தும் வகையிலும், சிறந்த கொள்கை திட்டங்களை செயல்படுத்த ஒரேநேரத்தில் நாடாளுமன்றம், சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் நோக்கத்தில் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை நிச்சயமாக நாடு முழுவதும் எல்லோரும் வரவேற்பார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இப்போது 18–ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. அதுமுடிந்தவுடன், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இதுவரை தேர்தல் ஆணையராக பணியாற்றிய மாலிக் பெரோஸ்கான் அனைத்து பணிகளையும் மிகவேகமாக முடித்திருந்தார். இப்போது மாலிக் பெரோஸ்கான் பதவியில் இருந்து ஓய்வுபெற்று, அவருக்கு பதிலாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருந்த ஆர்.பழனிசாமி பதவி ஏற்றுள்ளார். உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருந்ததற்கு பல காரணங்கள் கூறப்பட்டு கடைசியாக வார்டுகள் மறுவரையறை செய்யவேண்டும் என்ற காரணம் கூறப்பட்டிருந்தது. இப்போது அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை பணி முடிவடைந்து அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன்படி இடஒதுக்கீடு, சுழற்சி முறை செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பட்டியலை அரசுதான் வெளியிடவேண்டும். 

கடந்த ஜனவரி மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதுபற்றி மாநில தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் மே 31–ந்தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும், அதிலிருந்து 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தது. தற்போது தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. தேர்தல் நடத்தும் பொறுப்பு அதிகாரிகளுக்கும் வாக்காளர்கள் பட்டியல் அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால், சட்டசபை தொகுதிகளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட அந்த வாக்காளர்கள் பட்டியலைக்கொண்டு எந்தெந்த வார்டுகளின்கீழ், எந்தெந்த வாக்காளர்கள் வருகிறார்கள், அவர்களுக்கு எங்கு வாக்குசாவடி இருக்கிறது என்பதையெல்லாம் இணைக்கும் பொறுப்பு தேசிய தகவல் மையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலின் குறுந்தகடை தேசிய தகவல் மையம் கேட்டு இருக்கிறது. இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பணியில் உறுதுணையாக இருக்கவேண்டிய மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் எல்லாம் நாடாளுமன்ற தேர்தல், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பதால் வாக்காளர்கள் பட்டியலை, வார்டுகளோடு பொருத்தும் பணியில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்தநிலையில், கோர்ட்டில் தெரிவித்தபடி, மே 31–ந்தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வழியே இல்லை. மே 23–ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியானபிறகு அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபடத்தொடங்கினால், தேர்தல் அறிவிக்கையை வெளியிட ஜூன் மாதம் இறுதியிலோ, ஜூலை மாதம் முதல்வாரமோ ஆகிவிடும். அந்த கணக்குபடிப்பார்த்தால் ஆகஸ்டு கடைசியிலோ, செப்டம்பர் முதல் வாரத்திலோ தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது. போதும் 3 ஆண்டுகள் தாமதம். உள்ளாட்சி தேர்தலை ஆகஸ்டு–செப்டம்பரில் நடத்தியே தீரவேண்டும்.

Next Story