இதுதான் தமிழ்நாடு


இதுதான் தமிழ்நாடு
x
தினத்தந்தி 19 April 2019 10:00 PM GMT (Updated: 2019-04-19T19:45:13+05:30)

நாடாளுமன்ற தேர்தலின் 2–வது கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 38 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்துள்ளது.

‘தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவருக்கோர் குணமுண்டு’ என்ற வகையில், தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தல் மிகவும் அமைதியான முறையிலேயே நடந்தது. 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 71.87 சதவீதமும், 18 சட்டசபைகளுக்கான இடைத்தேர்தல்களில் 75.57 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்துள்ளது. 5 நாட்கள் தொடர்விடுமுறை இருந்தும், இவ்வளவு பேர் வாக்களித்துள்ளது நிச்சயமாக பாராட்டுக் குரியது. அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த சில வன்முறை சம்பவங்களை தவிர, பெரிய அளவில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை எதுவும் நடைபெறவில்லை. வாக்குச்சாவடியை இந்த கட்சி கைப்பற்றிவிட்டது, அந்தக்கட்சி கைப்பற்றிவிட்டது என்பது தமிழ்நாட்டில் இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து பல்வேறு கட்சியினரின் பிரசாரங்கள் அமைதியாக நடந்து இருக்கிறது. கட்சித்தலைவர்களின் பேச்சுகளில் அனல் வீசியது. ஆனால், பிரசாரங்களில் தென்றல் வீசியது. நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட தலைவர்கள் பல இடங்களில் பரஸ்பர மரியாதையை செலுத்திக்கொண்டனர். 

‘தந்தி’ டி.வியில்., ‘சபாஷ் சரியான போட்டி’ என்று ஒளிபரப்பப்பட்ட விவாத நிகழ்ச்சியில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 22 முக்கிய வேட்பாளர்கள் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆகியோரை ஒரே நிகழ்ச்சியில் பேட்டிக்கண்டது மிகவும் சிறப்புக்குரியதாக இருந்தது. தொகுதி வாரியாக இந்த நிகழ்ச்சியில் நெறியாளர்கள் ஒரேநேரத்தில் இருதரப்பு வேட்பாளர்களிடம், எதிர்தரப்பு வேட்பாளரிடம் உங்களுக்கு பிடித்தது என்னவென்று கேட்டு, ஒருவரை யொருவர் பாராட்ட வைத்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது. ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதியில் அண்ணன் மகாராஜன் தி.மு.க. வேட்பாளராகவும், தம்பி லோகிராஜன் அ.தி.மு.க. வேட்பாளராகவும் போட்டியிட்டு இருக்கிறார்கள். வாக்குச்சாவடிகளில் உள்ள பல்வேறு கட்சி வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் தேர்தல் முடிந்த வுடன், ‘போய் வருகிறேன்’ என்று ஒருவருக் கொருவர் கைகொடுத்துக் கொண்டு போனது தமிழருக்குரிய பண்பை காட்டியது. 

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் செல்வராசு ஜீப்பை நிறுத்தி கீழே இறங்கி பார்வையாளர் வரிசையில் கூட்டத்தில் அவரும் உட்கார்ந்து பேச்சை கேட்டுவிட்டு, மேடையில் ஏறி சீமானையும் பாராட்டிவிட்டு சென்று இருக்கிறார். இதுபோன்ற அரசியல் நாகரிகங்கள் இன்னும் மலரவேண்டும். தேர்தல்வரை நடந்த இந்த அமைதியான சூழ்நிலை, மே 23–ந்தேதி ஓட்டு எண்ணிக் கையிலும் நடக்கவேண்டும். தேர்தல் முடிந்தபிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டிற்கான பிரச்சினைகளில் கட்சி வேறுபாடின்றி ஒரே குரலை எழுப்பவேண்டும். ஆயிரம் கருத்து வேறுபாடுகள் கட்சிகளுக்கு இடையே இருக்கலாம். அதைத்தாண்டி அந்த காலங்களில் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா ஆகியோர் மாற்று கட்சியினரையும் மதிப்போடு பாராட்டி நடத்திய அரசியல் பண்பு இப்போதும், எப்போதும் தமிழ்நாட்டில் தழைக்க வேண்டும். ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்று அறிஞர் அண்ணா பறைசாற்றிய அறிவுரைகள் மங்கிப்போய்விடக்கூடாது. 

Next Story