ஈரானில் கச்சா எண்ணெய் வாங்க தடை


ஈரானில் கச்சா எண்ணெய் வாங்க தடை
x
தினத்தந்தி 24 April 2019 10:30 PM GMT (Updated: 24 April 2019 2:54 PM GMT)

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே உள்ள மோதலால், இந்தியா உள்பட 8 நாடுகள் இனிமேல் ஈரானில் இருந்து கச்சா இறக்குமதி செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் எல்லாம் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை உறுதிசெய்ய ஈரானும், அதற்கு பதிலாக அந்த நாட்டின்மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, சீனா, பிரான்சு, ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளும், ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் 2015–ம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் செய்தன. இந்த ஒப்பந்தம் ஒபாமா அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது மேற்கொண்ட ஒப்பந்தமாகும். 

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்காமல் தடுப்பதற்கு இந்த ஒப்பந்தம் போதுமானதாக இல்லை என்று தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான தாக்குதல்களை தொடுத்து வந்தார். இந்தநிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 8–ந்தேதி இந்த ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்தபின், நவம்பர் மாதம் முதல் ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை முழுமையாக அமல்படுத்தப்பட்டது. ஈரானிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துகொண்டிருந்த இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, தைவான், துருக்கி, இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு மட்டும் இந்த பொருளாதார தடைகளை அமல்படுத்துவதிலிருந்து 180 நாட்களுக்கு அமெரிக்கா விலக்கு அளித்தது. இந்த 6 மாதகால தடை வருகிற மே மாதம் 2–ந்தேதியோடு முடிவடைகிறது. அதன்பின் ஈரானிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை முழுமையாக நிறுத்திவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தமட்டில், இங்கு எண்ணெய் வளம் இல்லை. உலகிலேயே கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் 3–வது பெரிய நாடு. 80 சதவீத எண்ணெய் ஈராக், சவுதிஅரேபியா, ஈரான், அமெரிக்கா, ஐக்கிய அரபுநாடுகள், நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. 2017–2018–ல் ஈரானிலிருந்து தினமும் 4,52,000 பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. ஏனெனில், உத்தரவாதமான வினியோகம், விலையும் குறைவு. ஈரானிலிருந்து சரக்குகட்டணங்கள் இல்லாமல் இறக்குமதி செய்யமுடியும். 60 நாள் காலஅவகாசத்தில் கச்சா எண்ணெய்க்கான கட்டணத்தை கொடுத்துவிட முடியும். இதுமட்டுமல்லாமல், மொத்த எண்ணெய் விலையில் 45 சதவீதத்தை இந்திய ரூபாயிலும், மீதி தொகையை யூரோவிலும் கொடுத்துவிடலாம். இந்தியா கொடுக்கும் 45 சதவீத இந்திய ரூபாயை, ஈரான் யூகோ வங்கி கணக்கில்போட்டு அதை வைத்துக்கொண்டு இந்திய பொருட்களை இறக்குமதி செய்யும். இவ்வாறு இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் பல சலுகைகளை இந்தியா இழக்கநேரிடும். இந்தத்தடையை சமாளிக்க மற்ற நாடுகளிலிருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ளலாம் என்று இந்தியா என்னதான் சொன்னாலும், இனிமேல் கூடுதல் விலைகொடுத்து கச்சா எண்ணெய் வாங்கவேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்படும். இது நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்கும். இந்திய பணமதிப்பு குறையும். சமையல் கியாஸ், பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்து, அதன்காரணமாக விலைவாசியும் உயரும் அபாயம் இருக்கிறது. அடுத்து அமையும் மத்திய அரசாங்கத்திற்கு இதையெல்லாம் சமாளிக்கவேண்டிய பொறுப்பு இருக்கிறது.

Next Story