வேலைவாய்ப்புகள் சரிந்து வருகிறது


வேலைவாய்ப்புகள் சரிந்து வருகிறது
x
தினத்தந்தி 26 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-26T20:18:18+05:30)

நாட்டில் அனைத்து ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது வேலைவாய்ப்புகள் தான்.

புதிய புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில் ஒரு தனிநபருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதாக கருதமுடியாது. அந்த தனிநபரின் வேலைவாய்ப்பு மூலம் ஒரு குடும்பமே வளர்ச்சி அடையும். அவர்கள் பெறும் வருமானத்தின்மூலம் கூடுதலாக பணப்புழக்கமும் உருவாகும். சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில், ‘இந்தியாவில் நடுத்தர மக்கள் 40 சதவீதம் இருக்கிறார்கள்’ என்று கூறப்படுகிறது. மற்றொரு ஆய்வில், ‘60 கோடியே 40 லட்சம் நடுத்தர மக்கள் இருக்கிறார்கள்’ என்று கூறப்படுகிறது. ஆக, இப்போது நடுத்தர குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கும், ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகள் அளிக்க வேண்டிய அவசர அவசியம் வந்து விட்டது. ஒருபக்கம் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை எழுந்துள்ள நிலையில், 2016–ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை 50 லட்சம் மக்கள் தங்கள் வேலைகளை இழந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை பெங்களூருவில் உள்ள அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

2011–ம் ஆண்டு இருந்த வேலையில்லா திண்டாட்டத்தின் அளவைவிட, 2018–ல் இருமடங்காக அதாவது 6 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகம் படித்தவர்கள் மற்றும் சற்று குறைவாக படித்தவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ஏராளமான தொழிலாளர்களும் 2016 முதல் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். வேலைபார்க்கக்கூடிய  வயதில்  உள்ள  நகர்ப்புற  பெண்களில்  10 சதவீதம் பேர்  பட்டதாரிகள். ஆனால்,  அவர்களில்  34 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். நகர்ப்புற ஆண்களில் 13.5 சதவீதம் பேர் வேலை பார்க்கும் வயதில் உள்ள பட்டதாரிகள் ஆவார்கள். ஆனால், இவர்களில் 60 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இந்த வேலை இழப்புகள் எல்லாம் பெரும்பாலும் 2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு கொண்டுவந்த நேரத்தில் இருந்துதான் தொடங்கியிருக்கிறது. இந்த ஆய்வறிக்கை இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்த ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மையம் 4 மாதத்துக்கு ஒருமுறை ஒரு லட்சத்து 60 ஆயிரம் வீடுகளில், 5 லட்சத்து 22 ஆயிரம் பேர்களிடம் ஆய்வுகள் நடத்தியிருக்கிறது.

சமீபத்தில் வாக்காளர்கள் இடையே நீங்கள் அரசாங்கத்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ‘46.8 சதவீதம் பேர் நல்ல வேலைவாய்ப்புகள் வேண்டும்’ என்றுதான் கூறியிருக்கிறார்கள். எனவே, மக்கள் எதிர்பார்ப்பது எல்லாம் வேலைவாய்ப்புகள்தான். வேலையில்லா திண்டாட்டம் என்ற பள்ளத்தில் விழுந்து கிடக்கும் இளைஞர் சமுதாயத்தை மேலே கைதூக்கி விடவேண்டுமென்றால், மத்திய அரசாங்கமும் சரி, மாநில அரசுகளும் சரி, மிகத்தீவிரமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கென தனி கொள்கைகளை வடிவமைத்து நிறைவேற்ற வேண்டும். வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலைவாய்ப்புகள் வழங்கும் தொழில்முனைவோர்களாக இளைஞர்களை மாற்றுவோம். பெருந்தலைவர் காமராஜர் ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் என்பதை தன் லட்சியமாக கொண்டு அரசை நடத்தியதுபோல, இப்போது உள்ள மத்திய– மாநில அரசுகள் ஊருக்கு ஒரு தொழிற்சாலையை அமைப்போம், அந்த பகுதிகளில் உள்ள படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிப்போம் என்பதை லட்சியமாக கொண்டு முழுவீச்சில் செயல்பட்டு, இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டமே இல்லை என்று பெருமைப்பட கூறும் நிலையை உருவாக்க வேண்டும்.

Next Story