இதுபோல எந்த மருத்துவமனையிலும் நடக்கக்கூடாது


இதுபோல எந்த மருத்துவமனையிலும் நடக்கக்கூடாது
x
தினத்தந்தி 9 May 2019 10:15 PM GMT (Updated: 2019-05-09T21:00:57+05:30)

மருத்துவமனைகள் என்பது உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்படும் நோயாளிகளை உயிர் பிழைக்கவைக்கும் உன்னதமான பணிகளை செய்யும் இடங்களாகும்.

சமீபகாலங்களாக அரசு மருத்துவமனைகள் பற்றி வெளிவரும் குறைபாடுகள் திருப்திகரமாக இல்லை. ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சாத்தூர் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை ஏற்றி அந்த பெண்ணை எச்.ஐ.வி. நோயாளியாக்கிய கொடுமையும், தொடர்ந்து 3 அரசு மருத்துவமனைகளில் கெட்டுப்போன ரத்தத்தை ஏற்றியதால் 15 கர்ப்பிணி பெண்கள் இறந்ததாகவும் செய்தி வந்தது. இதில், மருத்துவத்துறை நடத்திய விசாரணையில், மருத்துவமனைகளில் அவ்வாறு கெட்டுப்போன ரத்தத்தை ஏற்றவில்லை என்ற முடிவு அறிவிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை இல்லை என்ற புகார் கூறப்பட்டது. இதையொட்டி, உள்ளூர் கடைகளில் மருந்து வாங்கிக்கொள்ளலாம் என்று மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இப்போது மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் நரம்பியல் துறை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மல்லிகா, ரவீந்திரன், பழனியம்மாள் ஆகியோர் மரணம் அடைந்த செய்தி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இவர்கள் மரணம் அடைந்தபிறகு ஆறுமுகம், செல்லத்தாய் ஆகியோரும் உயிர் இழந்திருக்கிறார்கள். இந்த மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் போடப்பட்டு, ஆக்சிஜன் செலுத்தப்பட்டிருந்தது. அந்தநேரத்தில் மதுரையில் பெய்த பெருமழையால் மாலை 6.20 மணியிலிருந்து இரவு 7.20 மணிவரை அந்த ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்டது. பொதுவாக, மின்தடை ஏற்பட்டால் உடனடியாக ஜெனரேட்டர்கள் தானாக இயங்க தொடங்கி மின்சாரம் தடைபடவே கூடாது. ஆனால் இந்த மருத்துவமனையில் அந்த நரம்பியல்துறை தீவிர சிகிச்சைப்பிரிவு இருக்கும் வார்டில் இருந்த 2 ஜெனரேட்டர்களிலும் பழுது ஏற்பட்டதால் இயங்கவில்லை. கும் இருட்டு நிலவியது. டாக்டர்களும், நர்சுகளும் டார்ச் லைட்டுகளையும், செல்போனில் உள்ள விளக்குகளையும் இயக்கி அங்கும் இங்குமாக பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தனர். மாலை 6.55 மணிக்கு தொடங்கி 3 நோயாளிகளும் 15 நிமிடங்களில் அடுத்தடுத்து மரணம் அடைந்துவிட்டனர். ஆக்சிஜன் தடைபட்ட நிலையில் அந்த நோயாளிகள் இறந்துள்ளனர் என்று உறவினர்கள் கூறுகிறார்கள். மருத்துவமனை வட்டாரம் வெண்டிலேட்டரில் மின்சாரம் தடைபட்டாலும், ஜெனரேட்டர் இயங்காவிட்டாலும், வெண்டிலேட்டரோடு இணைக்கப்பட்டுள்ள பேட்டரிகள் பேக்கப் மூலம் ஒரு மணி நேரம்வரை இயங்கும். அந்தவகையில் வெண்டிலேட்டர் இயங்கியது என்று கூறுகிறார்கள். நோயாளிகள் தரப்பிலோ வெண்டிலேட்டர் இயங்கவில்லை. பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் இருந்தால் கேட்கும் பீப் ஒலி கேட்டது என்றுகூட தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனை தரப்பிலோ கவலைக்கிடமான இருந்த நிலையில்தான் உயிர் இழந்தனர். வெண்டிலேட்டர் இயங்காததால் அல்ல என்கிறார்கள். 

பொதுவாக, ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஜெனரேட்டர் இயங்குவதை உறுதிப்படுத்தவேண்டும். வெண்டிலேட்டர்கள் தடையின்றி இயங்குவதை பயோ மெடிக்கல் பொறியாளர்கள் அவ்வப்போது சோதனை நடத்தவேண்டும். இதையெல்லாம் அந்த மருத்துவமனைகளில் முறையாக செய்யப்பட்டதா? என்பதையும் ஆய்வு நடத்தவேண்டும். மதுரையில் நடந்த சம்பவத்தை விசாரிக்க மருத்துவத்துறை நிபுணர்கள் இல்லாமல், வெளியில் உள்ள நிபுணர்களைக்கொண்டு உடனடியாக முழு விசாரணையை நடத்தவும், பிரேத பரிசோதனையையும் அரசு டாக்டர்கள் குழுவோடு, வெளியிலிருந்து வரும் மருத்துவ நிபுணரையும் வரவழைத்து நடத்தவேண்டும். மதுரையில் நடந்த இந்த சம்பவத்தைபோல, இனி எந்த இடத்திலும் நடக்கக்கூடாது.

Next Story