தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்


தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 16 May 2019 11:00 PM GMT (Updated: 2019-05-16T20:08:01+05:30)

தமிழ்நாட்டில் ஏராளமான இளைஞர்கள் வடமாநிலத்தில் இருந்து வந்து இங்குள்ளவர்களின் வேலைவாய்ப்புகளை தட்டிப்பறித்து விடுகிறார்கள் என்று குறை சொல்லப்படுகிறது.

சாதாரண வேலைகள் மட்டுமல்லாமல், ரெயில்வே, தபால்துறை போன்ற பல மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழர்களைத் தவிர வெளிமாநிலத்தவரே அதிகமாக வேலைவாய்ப்பை பெற்றுவிடுகிறார்கள் என்று கூறிக்கொண்டு இருக்கிறோம். ரெயில்வேயை பொறுத்தமட்டில் மதுரை டிவி‌ஷனில் தற்போது உள்ள 490 ஸ்டே‌ஷன் மாஸ்டர்களில், ஏறத்தாழ 250 ஸ்டே‌ஷன் மாஸ்டர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ரெயில்வேயில் எல்லா பதவிகளிலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே சேர்கிறார்கள் என்ற ஒரு குறை இருக்கிறது. ஆனால், தற்போது வெளிவந்த ஒரு தகவல்படி தமிழக இளைஞர்கள் ரெயில்வே பணிகளில் சேர்வதற்கு அதிக அளவில் விண்ணப்பிப்பதும் இல்லை. விண்ணப்பித்தவர்களும் அந்தப்பதவிகளுக்காக நடக்கும் தேர்விலும் கணிசமான அளவு வெற்றிபெறுவதும் இல்லை என்ற ஒரு திடுக்கிடும் தகவல் இப்போது வெளிவந்துள்ளது. 

சமீபத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ்காரர்களுக்கான பணி நியமனம் நடந்தது. இந்தத்தேர்வில் இந்தியா முழுவதும் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டன. இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் இருந்தும் ஏதாவது ஒரு குழுவில் உள்ள பணி இடங்களுக்காக விண்ணப்பிக்கலாம். குரூப் ஏ என்று அழைக்கப்படும் குழுவில் தென்னக ரெயில்வே, தென்மத்திய ரெயில்வே, தென்மேற்கு ரெயில்வேக்கான பணி இடங்களை நிரப்ப தேர்வு நடந்தது. இந்தக்குழுவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, புதுச்சேரி ஆகியவை அடங்கும். சப்–இன்ஸ்பெக்டர் பதவிக்கு ரூ.45 ஆயிரம் சம்பளம், போலீஸ்காரர் பணிக்கு ரூ.27 ஆயிரம் சம்பளம். ஐ.டி. கம்பெனிகளில் சேரும்போது வாங்கும் சம்பளத்தைவிட இது அதிகம். குரூப் ஏ குழுவில் போலீஸ்காரர்கள் வேலைக்கு 7,94,088 பேர்களும், சப்–இன்ஸ்பெக்டர் வேலைக்கு 2,24,553 பேர்களும் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அண்டை மாநிலங்களிலிருந்து இந்தப்பணிக்கு விண்ணப்பித்தவர்களைவிட தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்தவர்களின் சதவீதம் மிகமிக குறைவு. 

இதுமட்டுமல்லாமல், எழுத்துத்தேர்வுக்காக நடந்த கம்ப்யூட்டர் தேர்வில் மற்ற மாநிலங்களைவிட, தமிழக மாணவர்கள் தான் மிக குறைந்த அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்று உடற்பயிற்சி தேர்வு மற்றும் மருத்துவதேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான். வடமாநிலங்களை குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களின் தேர்ச்சி விகிதம் கூட அதிகமாக இருக்கிறது. ஆக வெளிமாநிலத்தவர்கள் நிறையபேர் வேலைவாய்ப்பு பெற்றுவிட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று வெறுமனே பேசிக்கொண்டிருப்பதில் எவ்விதபலனும் இல்லை. வடமாநிலங்களில் இதற்கென தனி பயிற்சி மையங்கள் இருக்கின்றன. தமிழக இளைஞர்களை பொறுத்தமட்டில் இந்த வேலைவாய்ப்புகளின் விவரங்கள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற போட்டி தேர்வுகளில் வெற்றிபெறும் வகையில் அவர்களுடைய தகுதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். தமிழக அரசின் அண்ணாமேலாண்மை நிலையம், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதுபோல, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் இதுபோன்ற பணிகளுக்கும் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். கல்லூரிகளிலும் இதுபோன்ற போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளை நடத்துவது மிகமிக இன்றியமையாதது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலைக்கல்லூரிகளில் இருந்து மட்டும் வெளியே வரும்நிலையில், இதுபோன்ற வேலைவாய்ப்புகளுக்கான பயிற்சிகளையும் அளித்தால்தான் வேலையில்லா திண்டாட்டம் குறையும்.

Next Story