தலையங்கம்

மாவட்ட நீதிபதிகள் தேர்வில் ஒருவர் கூட தேறவில்லை + "||" + District Judges Exam No one has succeeded

மாவட்ட நீதிபதிகள் தேர்வில் ஒருவர் கூட தேறவில்லை

மாவட்ட நீதிபதிகள் தேர்வில் ஒருவர் கூட தேறவில்லை
மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு முதல் சுப்ரீம் கோர்ட்டுவரை உள்ள காலி இடங்களை நிரப்ப இப்போது பணி நியமனம் நடந்து வருகிறது.
தமிழக நீதித்துறையில் 31 மாவட்ட நீதிபதிகள் காலி இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இவர்களுக்கு கடந்த மாதம் 7–ந்தேதி முதல்நிலைத்தேர்வும், இந்தமாதம் 25, 26–ந்தேதிகளில் முதன்மைத்தேர்வும், அதன்பிறகு நேர்முகத்தேர்வும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், கடந்த மாதம் 7–ந்தேதி நடந்த முதல்நிலைத்தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 3,562 வக்கீல்கள், அரசு வக்கீல்கள், உதவி பப்ளிக் பிராசிகியூட்டர் மற்றும் பணியில் இருக்கும் மாஜிஸ்திரேட்டுகள், சிவில் நீதிபதிகள் போன்றவர்கள் கலந்து கொண்டனர். முதல்நிலைத்தேர்வில் 2 தேர்வுத்தாள்கள் இருந்தன. முதல்தாள் சிவில் சட்டங்கள் தொடர்பான கேள்விகளை கொண்டதாக இருக்கும். 2–வதுதாள் கிரிமினல் சட்டங்கள் தொடர்பான கேள்விகளை கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.  

இந்த தேர்வில் வெற்றிபெற மொத்தம் 300 மதிப்பெண்களில், பொதுப்பிரிவினர் 120 மதிப்பெண்களும், பி.சி., எம்.பி.சி. உள்பட பிற பிரிவினர் 105 மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 90 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும். சரியான விடையை எழுதியிருந்தால் ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண்ணும், தவறாக எழுதியிருந்தால் ½ மதிப்பெண் கழிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இப்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மிகவும் அதிர்ச்சித்தரத்தக்க வகையில் இந்த முடிவுகள் அமைந்துள்ளன. ஒருவர்கூட இந்த தேர்வில் வெற்றி பெறவில்லை. நிறையபேர் மைனஸ் மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்கள். ஆக, முதல்நிலைத்தேர்வு முடிந்த நிலையில், முதன்மைத்தேர்வு நடத்த வாய்ப்பே இல்லை. இந்த தேர்வில் கலந்து கொள்ள குறைந்தபட்ச தகுதியாக 7 ஆண்டுகளுக்கும் மேலாக வக்கீல் தொழிலில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 7 ஆண்டுகளுக்கும் மேலாக வக்கீல் தொழிலில் அனுபவம் பெற்றவர்களாலும் இந்த தேர்வில் வெற்றிபெற முடியவில்லை. அரசு வக்கீல்களாக, மாஜிஸ்திரேட்டுகளாக, சிவில் நீதிபதிகளாக பணியாற்றியவர்களாலும் இந்த தேர்வில் வெற்றிபெற முடியவில்லை என்றால் நிச்சயமாக என்ன குறை? என்பதை ஆராய வேண்டும். 

நமது சட்டக்கல்வியின் தரத்தில் குறைவா? அல்லது வக்கீல் தொழிலில் உள்ளவர்கள் தங்கள் தகுதியை, திறமையை மேம்படுத்திக்கொள்ள அதாவது புத்தாக்கம் செய்ய தவறி விட்டார்களா? என்று தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான வக்கீல்கள் இந்த கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டவிதமே தவறாக இருக்கிறது என்கிறார்கள். மேலும் ஒருவரின் நீதி தொடர்பான அணுகுமுறையை சோதிப்பது போலவோ, இந்த பணிக்கு ஏற்றவாறோ கேள்விகள் இல்லை. எடுத்துக்காட்டாக, தூக்கு கயிறுக்கு எவ்வாறு சுருக்கு போடவேண்டும்?, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முதல்உதவி அளிக்க வேண்டும்? என்பதுபோல கேட்டிருந்தார்கள். கணக்கு பாடமோ, ரசாயன பாடமோ, பவுதிகமோ என்றால் உலகம் முழுவதும் ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்கமுடியும். ஆனால் சட்டத்தை பொறுத்தமட்டில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பதில் அளிப்பார்கள். எது எப்படி இருந்தாலும், இந்த தேர்வில் ஏன் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை? என்றால் கேள்விகள் கேட்கப்பட்டதில் குறையா? அல்லது பதில் அளிக்கக்கூடிய அளவுக்கு திறமை இல்லையா? என்பதை ஐகோர்ட்டு, தமிழக அரசு, தேர்வு நடத்திய நீதி பணிகள் தேர்வு வாரியம் ஆராய்ந்து தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த குறைகள் களையப்பட வேண்டும்.


தொடர்புடைய செய்திகள்

1. 2–வது மொழியாக இந்திக்கு இடமா?
சமீபகாலங்களில் பலமுறை இந்திக்கு முக்கியத்துவம் அளிக்க எடுக்கப்படும் முயற்சிகள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், பல மாநிலங்களில் குறிப்பாக தென்மாநிலங்களில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதிலும் கடந்த 14–ந் தேதி ‘இந்தி’ தினம் கொண்டாடப்பட்ட நேரத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ‘இந்திதான் இந்த நாட்டை இணைக்கக்கூடிய ஒரே மொழியாகும். இந்தியை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
2. பிஞ்சு உள்ளங்களை இது வெகுவாக பாதிக்கும்
மத்திய அரசாங்கத்தால் 2009–ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்துக்கான விதிகள் தமிழ்நாட்டில் 2011–ம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் 6 வயது முதல் 14 வயது வரையிலான ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரையிலான தொடக்கக்கல்வியை இலவசமாக படிக்க உரிமை இருக்கிறது.
3. பெட்ரோல் – டீசல் விலை உயரும் அபாயம்
எல்லா வளமும் உள்ள இந்தியாவில் எண்ணெய் வளம் மட்டும் இல்லாத சூழ்நிலையில், வெளிநாடுகளில் இருந்துதான் பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
4. மின்சார வாகனங்களின் உற்பத்தி கேந்திரமாகும் தமிழ்நாடு
எல்லா வளமும் உள்ள இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் மட்டும் கிடையாது. நமக்கு தேவைப்படும் மொத்த கச்சா எண்ணெயில் 83 சதவீத தேவை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது.
5. செய்வதை மட்டும் சொல்லுங்கள்
பொதுவாக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்னால், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று தொடங்கி... அதைச் செய்வோம் இதைச் செய்வோம்’ என்று ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவீசுவது வழக்கம்.