மோடி அலை வேகமாக வீசுகிறதா?
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக திருவிழா முடிந்துவிட்டது. 17-வது நாடாளுமன்ற தேர்தல் அதிக வன்முறையின்றி, மிக அமைதியான முறையில் நடந்து முடிந்திருக்கிறது.
மார்ச் மாதம் 10-ந்தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11, 18, 23, 29 மற்றும் மே மாதம் 6, 12, 19 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடந்திருக்கிறது. 2014-ம் ஆண்டு முழு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று நரேந்திரமோடி தலைமையில் ஆட்சி அமைத்த பா.ஜ.க., ஆட்சிபீடத்தில் மீண்டும் ஏறுமா? அல்லது ஒருசில எதிர்க்கட்சிகளை தவிர, மற்ற எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து புதியவேகத்தில் பா.ஜ.க.வை எதிர்த்து வருகிறதே அந்த அணி வெற்றிபெறுமா?. பா.ஜ.க. அல்லாத, காங்கிரஸ் அல்லாத 3-வது அணி ஆட்சி அமைக்கவேண்டும் என்ற முயற்சிகள் வெற்றிபெறுமா? என்று ஒட்டுமொத்த இந்தியா மட்டுமல்லாமல், உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறது.
நரேந்திரமோடி, நாடு முழுவதிலும் 142 தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசியிருக்கிறார். ராகுல்காந்தியும் 150-க்கும் மேற்பட்ட பேரணிகளில் பேசினார். இப்போது தேர்தல் முடிந்த அன்று வெளியான தேர்தல் கணிப்புகள் எல்லாமே மிக உறுதியாக பா.ஜ.க.தான் முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று உறுதிபட தெரிவித்துவிட்டது. அனைத்து கணிப்புகளும் ஒன்றுபோல பா.ஜ.க. கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் என்று உறுதியாக தெரிவித்துள்ளது.
எல்லா கூட்டணிகளின் கணக்கையும் கூட்டி கழித்து பார்த்தால், 2014-ல் பா.ஜ.க. கூட்டணி 39 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தநிலையில், இப்போது நிச்சயமாக 40 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை குவிக்கும். எதிர்க்கட்சிகள் தரப்பில் தேர்தல் கணிப்பு புரளி என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரையில் பெரும்பான்மையான தேர்தல் கணிப்புகளை பார்த்தால், எண்ணிக்கை வேண்டுமானால் சரியாக இல்லையே தவிர, எந்த கூட்டணிக்கு அதிக இடங்கள் கொடுத்து இருந்தார்களோ, அந்த கூட்டணிதான் வெற்றிபெற்று இருக்கிறது. ஆனால் 2004, 2009-ம் ஆண்டுகளில் பெரும்பாலான கணிப்புகள் தேர்தல் முடிவுகளோடு ஒத்துபோகவில்லை. இந்தியாவில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் நடந்த தேர்தலையொட்டிய கருத்துக்கணிப்புகள், 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், பிரெக்சிட் கருத்து கணிப்புகளெல்லாமே தவறாகத்தான் முடிந்தது. ஆக, தேர்தல் கணிப்புகள் சரியாகவும் இருந்திருக்கிறது. தவறாகவும் இருந்திருக்கிறது. இப்போது வெளிவந்த கணிப்புகள் எல்லாம் சரியாக இருந்தால் மோடி அலை குறையவில்லை. இப்போது வேகமாக வீசுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். மதசார்பற்ற கூட்டணி என்று எதிர்க்கட்சிகள் கூறியதன் மூலம் நமக்கானவர்கள் இவர்கள்தான் என்ற எண்ணம் இந்துக்களுக்கு தோன்றியதால், ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.வுக்கு வாக்குகள் விழுந்து இருக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. மற்றொன்று எந்த நடவடிக்கை என்றாலும் மோடிதான் உறுதியாகச் செய்வார். விவசாயிகளுக்கு ‘6 ஆயிரம் ரூபாய் தருகிறேன்’ என்று சொல்லி அந்த தொகையும் தவணையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. விவசாயிகளின் ஓட்டுகளையும் அள்ளித்தந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, மோடியின் தேர்தல் பிரசார உரைகளும், பாஜ.க.வின் தேர்தல் அறிக்கையும் இந்த வெற்றி மகுடத்தை மோடி தலையில் சூட்டப்போகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஆனால் 23-ந்தேதி தேர்தல் முடிவுதான், இந்த தேர்தல் கணிப்புப்படி பா.ஜ.க. வெற்றி கோப்பையை தக்க வைக்கப்போகிறதா? என்பதை உறுதி செய்யும்.
Related Tags :
Next Story