ஆச்சரியங்களை அள்ளித்தந்த தேர்தல்கள்


ஆச்சரியங்களை அள்ளித்தந்த தேர்தல்கள்
x
தினத்தந்தி 24 May 2019 10:30 PM GMT (Updated: 24 May 2019 12:55 PM GMT)

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் அனைத்தும் எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு இருக்கிறது.

டந்து முடிந்த தேர்தல் முடிவுகள் அனைத்தும் எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு இருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி கடந்த 17–ந்தேதி மத்தியபிரதேசத்தில் உள்ள கார்கோனில் நடந்த பா.ஜ.க. பிரசார கூட்டத்தில் பேசும்போது, ‘இந்த தேர்தலில் பா.ஜ.க. 300–க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும்’ என்று உறுதியாகச்சொன்னார். அவர் கூறியதற்கும் மேலாக 303 இடங்களில் பா.ஜ.க. தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜ.க. கூட்டணியின் கட்சிகளையும் சேர்த்தால் 352 இடங்களில் வெற்றிபெற்று அசைக்கமுடியாத சக்தியாக விளங்குகிறது. 

கடந்த 2014–ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 44 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது. இதனால் அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. இந்த தேர்தலிலும் அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு 55 இடங்களை பெறவேண்டும் என்ற நிலையில், 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது. கடந்த நாடாளுமன்றத்தில் 3–வது இடத்தில் அ.தி.மு.க. இருந்தது. நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் அதேபோன்று 3–வது இடத்தில் தி.மு.க. வந்திருக்கிறது. ஆக, 3–வது இடம் தமிழ்நாட்டிற்குத்தான் என்று உறுதியாகிவிட்டது. இதுவும் நூலிழையில் கிடைத்த ஒரு பரிசுதான். இதுவரையில் இல்லாத அளவு நாடாளுமன்றத்தில் 76 பெண் எம்.பி.க்கள் இடம்பெறுகிறார்கள். மாநில வாரியாக பா.ஜ.க. பெற்ற வெற்றியை எடுத்துக்கொண்டால், பல ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறது. உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. அவ்வளவுதான் என்று அரசியல் வட்டாரம் சொன்னதற்கு மாறாக, 62 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அதுபோல ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் தோல்வி அடைந்த பா.ஜ.க., இப்போதும் தோல்வி அடையும் என்று எல்லோரும் கணித்தார்கள். ஆனால் இந்த 3 மாநிலங்களிலும் அப்படியே முழுமையாக வெற்றிபெற்றுள்ளது. டெல்லியிலும் முழுவெற்றிதான். இப்படி எல்லா மாநிலங்களிலும் வெற்றிக்கொடியை நாட்டமுடிந்த பா.ஜ.க.வினால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய தென்மாநிலங்களில் மட்டும் காலூன்ற முடியவில்லை. இப்படி பல ஆச்சரியங்களை அள்ளித்தந்த இந்த தேர்தல் தமிழ்நாட்டையும் விட்டுவைக்கவில்லை. 

தமிழகம், புதுச்சேரியை சேர்த்து 39 இடங்களில் நடந்த தேர்தலில் தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசார அணுகுமுறைகளும், ஆளுமையுமே இந்த வெற்றிக்கு காரணம். இந்த கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்ட 10 தொகுதிகளில் தேனியில் மட்டும் வெற்றிக்கனியை அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமாரிடம் பறிகொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியில் இந்த ஒரு இடத்தை தவிர, மற்ற எல்லா கட்சிகளும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பெரிய தோல்வியை தழுவியது. மொத்தம் 5 இடங்களில் வெற்றிபெற்ற இரு கம்யூனிஸ்டு கட்சிகள் தமிழ்நாட்டில்தான் தி.மு.க. ஆதரவோடு போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் வெற்றிபெற்று புத்துயிர் பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் பெற்ற ஓட்டுகளும் அவர்கள்மீது எல்லோர் பார்வையும் விழவைத்து இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் இவ்வளவு வெற்றியை பெற்ற தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி, 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அந்தளவு முழுமையான வெற்றியை பெறமுடியாமல் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதனால், அ.தி.மு.க. அரசு ஆட்சியை தக்க வைக்கமுடிந்தது என்றாலும், தமிழக அரசியலை பொறுத்தமட்டில் வரப்போகும் நாட்கள் பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தப்போகிறது.

Next Story