மருந்துகள் விலை குறைக்கப்பட வேண்டும்


மருந்துகள் விலை குறைக்கப்பட வேண்டும்
x
தினத்தந்தி 26 May 2019 10:00 PM GMT (Updated: 26 May 2019 4:16 PM GMT)

நாட்டில் இப்போது பெரும்பாலான மக்களுக்கு விதவிதமான நோய்கள் வந்து கொண்டிருக்கின்றன. நீரிழிவு, இதயநோய், ரத்தஅழுத்தம், புற்றுநோய் போன்ற நிறைய நோய்களின் தாக்குதல்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளன. இதுதவிர, கேள்விப்படாத பல புதிய நோய்களும் இப்போது மக்களுக்கு வருகிறது.

அந்த காலத்தில் எல்லாம் இவ்வளவு நோய்கள் இருந்ததா?. இப்போதுதானே இவ்வளவு நோய்கள் மக்களுக்கு வருகிறது. இதற்கு எல்லாம் காரணம் சுற்றுச்சூழல் மாசு, ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற விவசாய இடுபொருட்களால் விளைவிக்கும் உணவு தானியங்கள், காய்கனிகள் என்று ஒருபக்கம் காரணம் சொல்கிறார்கள். ஆனால் மற்றொரு பக்கத்தில் முன்பெல்லாம் இந்த நோய்களை கண்டுபிடிக்க மருத்துவமும், மருத்துவ நிபுணர்களும் இல்லாதநிலையில், இப்போது எல்லா நோய்களும் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால்தான் அந்தகாலத்தில் இருந்த இறப்பு விகிதத்தைவிட, இப்போது இறப்பு விகிதம் குறைந்து, மக்கள் வாழும் ஆயுட்காலம் அதிகரித்தது என்று கூறுவதும் நிதர்சனமான உண்மையாகும். ஏழை-எளிய மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்துகள் கொடுக்கப்பட்டாலும், சில பல நோய்களின் தீவிரத்தால் அதிக விலை கொடுத்து மருந்துகள் வாங்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இப்போது எல்லாம் புற்றுநோய், இதயநோய், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மக்கள் மருந்து கடைகளில் விலை உயர்ந்த மருந்து மாத்திரைகள், ஊசி மருந்துகளை வாங்கவேண்டியநிலை இருக்கிறது. இதற்கு எல்லாம் நிறைய செலவாகிறது. முதிர்வயதில் மருந்து மாத்திரைகளுக்கு நிறைய செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதனால் வாழ்க்கை நடத்த பணம் போதவில்லை என்ற வேதனை சமுதாயத்தில் இருக்கிறது. இந்தநிலையில், புற்றுநோய்க்கான 9 வகையான மருந்து விலையை 90 சதவீதம் அளவிற்கு மத்திய அரசாங்கம் குறைத்து இருக்கிறது.

எர்லோடஸ் என்ற மாத்திரையின் 10 பாக்கெட் விலை ரூ.6,600 ஆக இருந்தது. தற்போது ரூ.1,840 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஹீமோதெரபி ஊசி மருந்துக்காக பெம்க்சல் (500 எம்.ஜி.) என்ற நுரையீரல் புற்றுநோய்க்கான ஊசி மருந்தின் விலை ரூ.22,000 ஆக இருந்தது, இப்போது அதன்விலை ரூ.2,880 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் 100 எம்.ஜி. அளவுள்ள ஊசி மருந்தின் விலை ரூ.7,700-லிருந்து ரூ.800 ஆக குறைக்கப்பட்டுள்ளது. லனோல்மஸ் மாத்திரை 10 பாக்கெட்டின் விலை ரூ.1,452 ஆக இருந்தது. தற்போது ரூ.739 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல புற்றுநோய்க்கான மற்ற 6 மாத்திரைகள், ஊசி மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. புற்றுநோயாளிகளுக்கு இது நிச்சயமாக பெரிய நிம்மதியை அளிக்கும். புற்றுநோய்க்கு மட்டுமல்லாமல், இதயநோய், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குமான மருந்துகளின் விலையையும் அரசு குறைக்கவேண்டும். மக்கள் நலவாழ்வு திட்டம் என்றவகையில் இதுபோன்ற விலை குறைப்புகளுக்கு அரசாங்கம் நிறைய நிதி ஒதுக்கீடு செய்வதில் எந்த தவறும் இல்லை. மானியங்களுக்கு செலவழிக்கும் தொகையைவிட, இதுபோல மருந்து, மாத்திரைகள், ஊசி மருந்துகளுக்கு விலை குறைப்பது என்பது மக்களுக்கு நேரடியாக பயன் அளிக்கும். அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்ற நோய்களுக்கு நல்ல தரமான விலை உயர்ந்த மருந்துகளை வழங்கவேண்டும். மொத்தத்தில், ஆரோக்கியமான வாழ்வை மக்களுக்கு கொடுக்க எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தாலும் வரவேற்புக்குரியது.

Next Story