வெளியுறவுத்துறை மந்திரியின் உடனடி பணி


வெளியுறவுத்துறை மந்திரியின் உடனடி பணி
x
தினத்தந்தி 4 Jun 2019 11:00 PM GMT (Updated: 4 Jun 2019 4:15 PM GMT)

வெளிநாடுகளோடு குறிப்பாக அமெரிக்காவோடு உள்ள உறவில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் கட்டாயம் இப்போது இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெளியுறவுத்துறை மந்திரியாக எஸ்.ஜெய்சங்கரை, பிரதமர் நரேந்திரமோடி மந்திரிசபையில் சேர்த்தது மிகவும் பொருத்தமான ஒருவரை, பொருத்தமான நேரத்தில், பொருத்தமான பணியில் நியமித்து இருக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பல நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் இந்திய தூதராக பணியாற்றிய அனுபவத்தோடு, வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றிய ஜெய்சங்கருக்கு, இப்போது மிக முக்கியமான பிரச்சினைகளில் தீர்வு காணவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்தே ஒரு பெரியண்ணன் மனோபாவத்தில்தான் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே சீனா, மெக்சிகோவோடு வர்த்தகபோரை நடத்திவரும் அமெரிக்கா, ஈரானிலிருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்கக்கூடாது என்று கடுமையான நிபந்தனைகளை விதித்தது. 

கடந்த மார்ச் மாதம் டிரம்ப் ஒரு மாநாட்டில் பேசும்போது, ‘‘அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஹார்லே–டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களை ஏற்றுமதி செய்யும்போது 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. நான் 2 நிமிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக இது 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதேநேரம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு தற்போது 2.4 சதவீதம்தான் வரி விதிக்கப்படுகிறது. இதை 25 சதவீதமாக உயர்த்தப்போகிறேன்’’ என்று கூறியிருந்தார். இதுமட்டுமல்லாமல், சில நாட்களில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 1,784 பொருட்களுக்கு இதுவரை வரி இல்லாமல் இருந்தநிலையை மாற்றி, வரி விதிக்கப்போகிறேன் என்று அறிவித்திருந்தார். இன்று முதல் அது அமலுக்கு வரப்போகிறது. வளரும் 120 நாடுகளுக்கு வரி இல்லாத வர்த்தக சலுகைகளை வழங்கும் ஜி.எஸ்.பி. என்ற திட்டத்தை, 1974–ம் ஆண்டு அமெரிக்கா அமலுக்கு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்கீழ் வரி இல்லா சலுகையை பெறும் நாடுகள், வர்த்தக முன்னுரிமை நாடுகள் என்று பட்டியலிடப்பட்டன. இந்த பட்டியலில் இந்தியா முக்கியமான இடத்தில் இருந்தது. இதன்மூலம் பல பொருட்கள் அமெரிக்காவுக்கு வரி இல்லாமல் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. 

வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து ஒப்பந்தப்படி, இந்தியா சமஅளவிலான வர்த்தக வாய்ப்புகளை இந்திய சந்தைகளில் வழங்க தவறிவிட்டது. அதனால் இந்தியாவை வர்த்தக முன்னுரிமை பட்டியலிலிருந்து நீக்க முடிவு எடுத்துள்ளேன் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். இந்தியாவில் இருந்து செயற்கை நகைகள், காலணி தவிர, மற்ற தோல் பொருட்கள், மருத்துவ சாதனங்கள், வேளாண் பொருட்கள், ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி செய்வது இந்த நடவடிக்கைகளால் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. சீனா மீது இதுபோல நடவடிக்கை எடுத்தநேரத்தில், அங்கு இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு ரூ.4.2 லட்சம் கோடி மதிப்பில் கூடுதல் வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவும் அதுபோல பதிலடி கொடுக்கப்போகிறதா? அல்லது ஏற்கனவே அமெரிக்காவில் பணியாற்றிய அனுபவம் கொண்ட வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, தொடர்ந்து அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுமா?, வர்த்தக நல்லுறவு மேம்படுமா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

Next Story