இனி ‘நீட்’ தேர்வு கட்டாயம்


இனி ‘நீட்’ தேர்வு கட்டாயம்
x
தினத்தந்தி 6 Jun 2019 10:00 PM GMT (Updated: 6 Jun 2019 7:21 PM GMT)

இனி நிச்சயமாக ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படாது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தேர்தல் அறிக்கைகளிலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில், அப்படிப்பட்ட எந்த உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை. தேர்தலுக்கு முன்பு சென்னை வந்திருந்த மத்திய மந்திரி பியூஷ் கோயல், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வை தொடர்ந்து நடத்துவோம். அதை ரத்து செய்யவேண்டியதில்லை. அ.தி.மு.க. அரசாங்கத்தை நாங்கள் இந்த விஷயத்தில் சமாதானப்படுத்தி ஏற்க செய்வோம் என்று ஒருமுறையும், மற்றொருமுறை தமிழ்நாடு ஒரு மாநிலத்திற்கு மட்டும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யமுடியாது என்றும் உறுதிபட கூறினார். பா.ஜ.க. தன் நிலையை திட்டவட்டமாக தெளிவுபடுத்திவிட்டதால், இனி நிச்சயமாக ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படாது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

‘நீட்’ தேர்வு தொடர்ந்து நடக்கத்தான் போகிறது. அதற்கு ஏற்றவகையில் மாணவர்களை தயார்படுத்தும் நடவடிக்கைகளைத்தான் தமிழகஅரசு எடுக்கவேண்டும் என்பது ஒரு வெளிப்படையான உண்மையாகும். ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படுமோ? என்ற குழப்பத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தக்கூடாது. இந்தநிலையில், நேற்று முன்தினம் இந்த ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு முடிவு வெளியானது. இந்தியா முழுவதிலும் 14 லட்சத்து 10 ஆயிரத்து 755 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். இதில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 42 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் சராசரியாக 56.50 சதவீதம் மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், 1 லட்சத்து 23 ஆயிரத்து 78 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 59 ஆயிரத்து 785 பேர் தேர்வு பெற்றுள்ளனர். தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 48.57 சதவீதம்தான். கடந்த ஆண்டு தேர்ச்சிவிகிதம் 39.56 சதவீதம் என்றவகையில், இந்த ஆண்டு 9.01 சதவீதம்பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றாலும், அகில இந்திய சராசரியைவிட, இது குறைவு என்பது மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 70.72 சதவீதம் பேரும், தெலுங்கானாவில் 67.44 சதவீதம் பேரும், கேரளாவில் 66.59 சதவீதம் பேரும், கர்நாடகாவில் 63.25 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளநிலையில், தமிழகம் பின்தங்கியுள்ள நிலையை பார்த்தால் இன்னும் போகும்பாதை வெகுதூரம் என்பது தெள்ளத்தெளிவாக புலனாகிறது.

முதல் 50 இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. ஆந்திராவில் 3 மாணவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கேரளாவில் 3 பேர். கர்நாடகாவை சேர்ந்த 2 பேர். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மாணவி 7-வது இடத்திலும் தேர்வு பெற்றுள்ளநிலையில், தமிழ்நாடு மட்டும் அந்த பட்டியலுக்குள் வரமுடியாமல் மிகவும் பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் முதல் இடத்தை பெற்றுள்ள சுருதி அகில இந்திய வரிசையில் 57-வது இடத்தில்தான் இருக்கிறார். ஆக, தமிழக அரசுக்கும், தனியார் பள்ளிக்கூடங்களுக்கும் அடுத்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதப்போகும் மாணவர்களை தயார்படுத்துவதில் பெரும்பங்கு இருக்கிறது. கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே எந்தெந்த மாணவர்கள் ‘நீட்’ தேர்வை எழுத விருப்பம் தெரிவிக்கிறார்களோ, அவர்களுக்கென தொடக்கத்தில் இருந்தே தனியாக பயிற்சி வகுப்புகளை நடத்தி அவர்கள் ஆற்றலை மேம்படுத்த வேண்டியது முக்கிய கடமையாகும். நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக, கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தையும் உயர்த்தும்வகையில், அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

Next Story