கூடங்குளம் அணுஉலை கழிவு பிரச்சினை


கூடங்குளம் அணுஉலை கழிவு பிரச்சினை
x
தினத்தந்தி 12 Jun 2019 10:30 PM GMT (Updated: 12 Jun 2019 1:44 PM GMT)

உலகம் முழுவதிலும் அணுமின்நிலையங்கள் அமைத்து மின்சார உற்பத்தியை பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

லகம் முழுவதிலும் அணுமின்நிலையங்கள் அமைத்து மின்சார உற்பத்தியை பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், புனல்நீர் மின்உற்பத்தி நிலையங்களுக்கான அனைத்து வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டுவிட்டன. அனல்மின்சார நிலையங்கள் ஏராளமாக அமைக்கப்பட்டுவிட்டன. இதற்கான நிலக்கரி வெளிமாநிலங்களிலிருந்து வாங்கப்படுகிறது. அனல்மின்சார நிலையங்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும்பாதிப்பு ஏற்படுகின்றன. இந்த சூழ்நிலையில், நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியோடு அணுமின்நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் பல முட்டுக்கட்டைகளுக்கு பிறகு கையெழுத்திடப்பட்டது. இந்த அணுஉலையால் எந்தநேரத்திலும் பாதிப்பு ஏற்படலாம் என்று எதிர்ப்புக்குரல் எழுந்துகொண்டே இருந்தது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் இந்தத்திட்டத்துக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். 

தற்போது கூடங்குளத்தில் முதல், 2–வது அணுஉலைகள் தலா 1,000 மெகாவாட் உற்பத்தி திறனோடு இயங்கி வருகின்றன. இந்த மின்சாரம் தமிழ்நாட்டுக்கு அதிக அளவிலும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது. இந்தநிலையில், 3–வது, 4–வது அணுஉலைகளுக்கான கட்டுமான பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. 5–வது, 6–வது அணுஉலைகள் அமைக்க பூர்வாங்க வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டது. இந்தநிலையில், இப்போது மற்றொரு பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. கூடங்குளம் அணுஉலைகளில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் யுரேனியம், பயன்பாட்டுக்குப்பிறகு புளூட்டோனியம் அணுக்கழிவாக மாறிவிடுகிறது. இந்த அணுக்கழிவுகளை பாதுகாப்பாக ஏதாவது ஒரு இடத்தில் போட்டு வைக்கவேண்டும். தற்போது அந்தக்கழிவு அணுஉலைக்கு கீழே உள்ள குட்டைகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. பொதுவாக, அணுக்கழிவுகளை முதலில் தற்காலிகமாக ஒரு மையத்திலும், பிறகு நிரந்தரமாகவும் சேமித்து வைக்கவேண்டும். தற்போது தற்காலிக அணுக்கழிவு மையத்தை கூடங்குளம் மற்றும் விஜயபதி கிராமங்களில் அமைக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளிக்கவேண்டும். அந்த பகுதிகளிலுள்ள பொதுமக்களிடம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் அனுமதி குறித்து விவாதிப்பதற்காக ஜூலை 10–ந்தேதி ஒரு கருத்துக்கேட்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தற்காலிக அணுக்கழிவு மையங்கள் பாதுகாப்புக்கு உகந்ததல்ல. பூமிக்கு அடியில் பல கி.மீட்டர் ஆழத்தில் இந்தக்கழிவுகளை சேமித்து வைப்பதுதான் பாதுகாப்பானது என்று கருத்து கூறப்படுகிறது. இந்தக்கழிவுகளை நிரந்தரமாக புதைத்துவைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆழ்நிலை கருவூலம் அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கான தொழில்நுட்பமும் இந்தியாவிடம் இல்லை என்ற பெரிய குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் தெளிவான விளக்கம் அளிக்கவேண்டும். கூடங்குளம் அணுமின்நிலையங்கள் எந்த அளவுக்கு தேவையானதோ, அந்த அளவுக்கு அணுக்கழிவுகளை சேமித்துவைக்கும் கட்டமைப்புகளை உரியமுறையில் உருவாக்குவதும் மிகமிக முக்கியமானதாகும். 

எனவே, மக்களிடம் கருத்துக்கேட்டு, அவர்கள் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்றவகையில், அந்த அணுக்கழிவு மையங்களை இப்போது திட்டமிட்டிருக்கும் இடத்தில் அமைப்பதா அல்லது ஆள்நடமாட்டம் இல்லாத வேறொரு இடத்தில் அமைப்பதா, ஏற்கனவே திட்டமிட்டு பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்ட கோலார் தங்க வயலிலுள்ள சுரங்கங்களில் வைக்க முடிவு செய்யலாமா? என்பது குறித்து தீவிரமாக ஆராயவேண்டும். வெறுமனே எதிர்ப்பு தெரிவிக்காமல் ஜூலை 10–ந்தேதி இதுதொடர்பாக அனைத்து விவரங்களையும் நன்கு தெரிந்துவைத்திருக்கும் சமூகசேவை நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் போய் தங்கள் கருத்துகளை பதிவு செய்வதே சாலச்சிறந்ததாகும்.

Next Story