ஆதரவோ, எதிர்ப்போ பதிவு செய்ய வேண்டும்


ஆதரவோ, எதிர்ப்போ பதிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 23 Jun 2019 10:30 PM GMT (Updated: 23 Jun 2019 4:57 PM GMT)

ஜனாதிபதி பதவி ஏற்றபிறகு முதன்முறையாக கடந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ராம்நாத் கோவிந்த் உரையாற்றும்போது, மிக முக்கியமான கருத்தாக நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் பற்றி பேசினார்.

னாதிபதி பதவி ஏற்றபிறகு முதன்முறையாக கடந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ராம்நாத் கோவிந்த் உரையாற்றும்போது, மிக முக்கியமான கருத்தாக நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் பற்றி பேசினார். ‘அடிக்கடி தேர்தல் நடத்துவது என்பது அரசு நிர்வாகத்துக்கும் மட்டுமல்ல, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுவதால் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அனைத்து எதிர்க்கட்சிகளும் இதுகுறித்து ஒன்றாக கலந்துபேசி ஒருமித்த முடிவை எடுக்கவேண்டும்’  என்று  பேசினார்.  அந்த  நேரத்தில்   ப.சிதம்பரம், இது மேலும் ஒரு தேர்தல் தமாஷ். நமது  அரசியல் சட்டத்தில் ஒரேநேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வழியில்லை என்று  கூறினார்.  கடந்த வாரம் நடந்த நாடாளுமன்ற  கூட்டத்தில் உரையாற்றும்போதும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது கருத்தை மீண்டும் தெரிவித்தார். ஒரே நாடு! ஒரே தேர்தல்! என்பது இன்றைய காலக்கட்டத்துக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். வளர்ச்சியை வேகப்படுத்தி நாடு பயன்பெற இது மிகவும் துணையாக நிற்கும் என்று கூறினார். 

2017–ம் ஆண்டு குடியரசு தினத்தன்றும் இதே கருத்தை வலியுறுத்தி அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி பேசியிருந்தார். அரசியல் கட்சிகளோடு ஆலோசனை செய்து தேர்தல் கமி‌ஷன் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று பேசினார். இந்த கருத்தை 1983–ம் ஆண்டு தேர்தல் கமி‌ஷனும், 1999–ல் சட்டகமி‌ஷனும், 2015–ல் நாடாளுமன்ற நிலைகுழுவும், மீண்டும் 2018–ல் சட்டகமி‌ஷனும் வலியுறுத்தியது. பிரதமர் நரேந்திரமோடி ஒரே நாடு! ஒரே தேர்தல்! என்பதில் மிக முனைப்போடு இருக்கிறார். சமீபகாலங்களாக மிகவும் வேகமெடுத்துள்ள இந்த பொருள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒன்றாக கலந்து ஆலோசித்து முடிவெடுக்க கடந்த 19–ந்தேதி அன்று அனைத்து கட்சிகள் கூட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி கூட்டியிருந்தார். இதில் 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 21 கட்சிகள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டன. 3 அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை அறிக்கையாக தெரிவித்திருந்தன. 16 அரசியல் கட்சிகள் அதிலும் முக்கியமாக காங்கிரஸ், தி.மு.க. போன்ற பெரிய எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது நிச்சயமாக பெரும் ஏமாற்றமாக இருந்தது. 

இதுகுறித்து விரிவாக விவாதிக்க ஒரு குழுவை அமைக்க இப்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பெரிய முடிவுகள் பற்றி விவாதிக்க ஒரு கூட்டத்தை கூட்டும்போது, ஆதரவோ, எதிர்ப்போ அதுகுறித்து இரு கருத்துகளும் முழுமையாக பதிவு செய்யப்படவேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகும். ஏனெனில், அனைத்துக்கட்சிகளும் கலந்து கொண்டு இது வேண்டும் அல்லது வேண்டாம் என்று தங்கள் தரப்புவாதங்களை அறிவித்தால்தான் இருவிதமான கருத்துகளையும் தராசில் இரு தட்டுகளில் வைப்பதுபோல வைத்து சீர்தூக்கி பார்த்து ஒருமித்த ஒரு முடிவை எடுக்க வழிவகுக்கும். இந்த வி‌ஷயத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் விருப்பு, வெறுப்பை காட்டாமல், இதை அரசியல் ஆக்காமல், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இப்போது நியமிக்கப்பட்ட குழுவில் கருத்துகளை பதிவு செய்யவேண்டும். அந்த குழுவும் அனைத்து தரப்பையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். மக்களின் பொதுவான கருத்துகளை திரட்டவேண்டும். அதற்கேற்ப நமது அரசியல் கட்சிகள் முடிவு எடுக்கவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும்.

Next Story