சர்ச்சை ஏற்படுத்திய கிரண்பெடியின் கருத்து


சர்ச்சை ஏற்படுத்திய கிரண்பெடியின் கருத்து
x
தினத்தந்தி 2 July 2019 10:30 PM GMT (Updated: 2019-07-02T20:00:38+05:30)

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையின் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையும், கடும் வறட்சி நிலையும், அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ளது.

மிழ்நாட்டில், குறிப்பாக சென்னையின் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையும், கடும் வறட்சி நிலையும், அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டெலிவி‌ஷன்களில்கூட இந்த வறட்சிநிலையை பெரிய அளவில் ஒளிபரப்புகிறார்கள். அமெரிக்க பத்திரிகைகள் எல்லாம் முக்கிய செய்தியாக பிரசுரிக்கிறார்கள். மேலும் பல நாடுகளில் உள்ள டெலிவி‌ஷன்கள், பத்திரிகைகளில் சென்னை வறட்சிதான் பரபரப்பான செய்தியாகிவிட்டது. இந்த அளவுக்கு கோரத்தாண்டவம் ஆடும் இந்த வறட்சி கொடுமையில் இருந்து எப்படி சமாளித்து மீளப்போகிறார்கள் என்று எல்லோரையும் வருத்தத்தோடு பார்க்க வைக்கிறது. சமீபத்தில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் தமிழ்நாட்டில் 528 கிணறுகளில் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் 60 சதவீதம், அதாவது 318 கிணறுகளில் நீர்மட்டம் வெகு ஆழத்துக்கு போய்விட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரத்தில் அருகில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 5 கிணறுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 3 கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஒரு செய்தி தமிழக அரசியல் கட்சிகளிடையே பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பத்திரிகைகளில் வந்த குடிநீர் தட்டுப்பாடு படங்களை பதிவிட்டு, இந்தியாவின் 6–வது பெரிய நகரமான சென்னை வறட்சியில் முதல் நகரமாகிவிட்டது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் இதேநகரம் வெள்ளக்காடாக இருந்தது. அப்படியானால் பிரச்சினை எங்கே இருக்கிறது? என்று கேள்வி கேட்டுவிட்டு அதற்குப்பதிலாக அவரே, மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அக்கறையில்லாத அதிகார வர்க்கம் என்று எல்லோரையும் சாடியுள்ளார். இதே செய்தியில் மக்கள் மீதும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மழைநீர் சேகரிப்பதிலும், தண்ணீரை வீணாக்குவதிலும், எதிலும் அக்கறை காட்டாமல் தன்னலத்தோடும், பொறுப்பற்ற முறையிலும் இருக்கிறார்கள். அதேநேரத்தில் எப்போதும் தாங்கள் எதிர்நோக்கியுள்ள எல்லா பிரச்சினைக்கும் அரசாங்கம்தான் தீர்வு காணவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் வெளியிட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல், புதுச்சேரியில் ஆகாயத்தாமரையால் நிறைந்து கிடந்த ஒரு ஏரியை காட்டி, அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இருந்து வரும் கழிவுநீர் அந்த ஏரிக்குள் விடப்படுவதையும் காட்டி, எப்படி தானும், அதிகாரிகளும், பொதுமக்களில் தன்னார்வ தொண்டு மிக்க தொண்டர்களும் ஒன்றுசேர்ந்து அந்த ஏரியை சுத்தப்படுத்தி இப்போது மிக சுத்தமான நிலையில் இருக்கும் அந்த ஏரியின் படத்தையும் காட்டியுள்ளார்.

தமிழக பிரச்சினையில் தேவை இல்லாமல் நுழைந்து தமிழக நிர்வாகம், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் மட்டுமல்லாமல், தமிழக மக்களையும் கொச்சைப்படுத்தி கிரண்பெடி பேசி இருக்கிறார் என்றவகையில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் கிரண்பெடி, தான் மக்களின் கருத்தைத்தான் பதிவிட்டு இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். புதுச்சேரி மாநில கவர்னர் என்ற முறையில் புதுச்சேரியை பற்றி மட்டும் கவலைப்படுவதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டை பற்றி தேவையற்ற முறையில் கிரண்பெடி கருத்துகளை வெளியிடுகிறார் என்ற வகையில் சர்ச்சை கிளம்பினாலும், உலக அளவில் சென்னை உள்பட தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி பற்றி பேசப்படுகிறது, பார்க்கப்படுகிறது, கருத்து சொல்ல வைக்கப்படுகிறது என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.

Next Story