ஒரு ஆசிரியருக்கு 60 மாணவர்கள்


ஒரு  ஆசிரியருக்கு 60  மாணவர்கள்
x
தினத்தந்தி 11 July 2019 10:30 PM GMT (Updated: 2019-07-11T22:40:58+05:30)

கல்வி என்பது எதிர்காலத்துக்கான பாஸ்போர்ட் போன்றதாகும். ஏனெனில், நாளை என்பது இன்றே அதற்காக தயார்படுத்திக்கொள்பவர்களுக்கு சொந்தமானதாகும் என்று அமெரிக்க நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் மால்கம் எக்ஸ் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார்.

ல்வி என்பது எதிர்காலத்துக்கான பாஸ்போர்ட் போன்றதாகும். ஏனெனில், நாளை என்பது இன்றே அதற்காக தயார்படுத்திக்கொள்பவர்களுக்கு சொந்தமானதாகும் என்று அமெரிக்க நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் மால்கம் எக்ஸ் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார். அத்தகைய கல்வியை கற்பிக்கும் புனிதமான பணியை ஆற்றுபவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் என்பவர்கள், மாணவர்கள் உயர்வதற்கான ஏணிகளாக இருக்கிறார்கள். அக்கரைக்கு சேர்க்கும் தோணிகளாக இருக்கிறார்கள். கற்றறிந்த அறிவுஊறும் கேணிகளாக மாணவர்களை மாற்றும் அறப்பணிகளில் ஈடுபடுபவர்கள்தான் ஆசிரியர்கள். ஆசிரியர்–மாணவர் உறவு என்பது மிகவும் மேன்மையான ஒரு உறவாகும். பெற்றோர், பிள்ளைகளை வளர்ப்பது குழந்தை பருவத்தில்தான். அதன்பிறகு அவர்களை அறிவுசால் குடிமக்களாக உருவாக்கும் பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்குத்தான் இருக்கிறது. வகுப்பு ஆசிரியர் என்பவர் வெறும் கல்வியை கற்றுக்கொடுக்கும் ஆசானாக மட்டுமல்லாமல், அவர்களை நல்ல குடிமக்களாக ஆக்குபவர்களாகவும், நல்ல குணநலன்களை கொண்டவர்களாக ஆக்குபவர்களாகவும் கொண்ட பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். 

அந்தவகையில், இதுவரையில் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில், ஒரு ஆசிரியருக்கு 30 அல்லது அதிகபட்சம் 40 மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பணி இருந்தது. இப்போது ஆசிரியர்–மாணவர் விகிதம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிக்கூடங்களும் இதுகுறித்து கல்வி மேலாண்மை தகவல் முகமையில் பதியவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்புவரை ஆசிரியர்–மாணவர் விகிதம் 1:30 என்றும், 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்புவரை உள்ள வகுப்புகளுக்கு 1:35 என்றும், 9–10–ம் வகுப்புகளுக்கு 1:40 என்றும், 11–12–ம் வகுப்புகளுக்கு 1:60 என்றும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர்–மாணவர் உறவு என்பது மிகவும் நல்ல அணுகுமுறையோடு இருக்கவேண்டுமென்றால், ஆசிரியர்–மாணவர் விகிதங்கள் குறைவாகத்தான் இருக்கவேண்டும். தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது என்றால், அதற்குகாரணம் ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான். ஆசிரியர், மாணவரை முகத்தோடு அடையாளம் காண்பதோடு மட்டுமல்லாமல், அவன் பெயரை அறிந்துவைப்பது மட்டுமல்லாமல், கல்வியில் அவன் ஆற்றல் என்ன?, பலவீனம் என்ன? என்பதை அறிந்து அதற்கேற்ற வகையில், அவனுக்கு கற்றுக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அவனுடைய குணநலன்களையும் சீரியமுறையில் உயர்த்துவதும் ஆசிரியரின் பொறுப்பாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளை ஆசிரியரிடமிருந்து பெற வேண்டுமென்றால், நிச்சயமாக மாணவர் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கவேண்டும். 

குறிப்பாக 9–10, 11–12–ம் வகுப்புகள் மாணவர்களின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் வகுப்புகளாகும். இந்த வகுப்புகளில் எல்லாம் மாணவரின் எண்ணிக்கை குறைவாக இருந்தால்தான், ஆசிரியர்களால் ஒவ்வொரு மாணவரின் மீதும் தனி கவனம் செலுத்தமுடியும். வகுப்பு அறைகள் என்பது ஆசிரியர், மாணவருடைய உறவுகளை வலுப்படுத்தும் இடமாக இருக்கவேண்டுமே தவிர, ஒரு மாநாடு போல இருக்கக்கூடாது. மாநாட்டில்தான் எதிரே உட்கார்ந்திருப்பவர் யார்?, அவர் பெயர் என்ன?, அவருடைய ஆற்றல் என்ன? என்பது பேசுபவர்களுக்கு தெரியாத நிலை இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலை வகுப்பு அறைகளில் மாணவர்களுக்கும் இருக்கக்கூடாது, ஆசிரியர்களுக்கும் இருக்கக்கூடாது. எனவே, ஆசிரியர்–மாணவர் விகிதத்தை அரசு 30 அல்லது 35 என்று எல்லா வகுப்புகளுக்குமே நிர்ணயித்தால், மாணவர்களின் கல்வித்தரமும் உயரும். அவர்கள் வாழ்வும் மேம்படும். ஆசிரியர்களுக்கும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

Next Story