ஒரே தேசம்; ஒரே அடையாள அட்டை


ஒரே தேசம்; ஒரே அடையாள அட்டை
x
தினத்தந்தி 14 July 2019 10:30 PM GMT (Updated: 2019-07-14T22:19:28+05:30)

பிரதமர் நரேந்திரமோடி இந்தமுறை பதவியேற்றதிலிருந்து ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, ‘ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு’, ‘ஒரே நாடு ஒரே மின்சார தொடர்’ என்பதுபோல, பல வி‌ஷயங்கள் நாடு முழுவதும் ஒன்றுபோல் இருக்கவேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டிவருகிறார்.

பிரதமர் நரேந்திரமோடி இந்தமுறை பதவியேற்றதிலிருந்து ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, ‘ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு’, ‘ஒரே நாடு ஒரே மின்சார தொடர்’ என்பதுபோல, பல வி‌ஷயங்கள் நாடு முழுவதும் ஒன்றுபோல் இருக்கவேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டிவருகிறார். அந்த பட்டியலில் இப்போது ‘ஒரே நாடு ஒரே அடையாள அட்டை’ என்பதும் வரப்போவதற்கான அறிகுறி பிரகாசமாக தென்படுகிறது. பட்ஜெட் உரையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தற்போது 120 கோடிக்கும் மேலான இந்தியர்கள் ஆதார் அட்டையை வைத்திருக்கிறார்கள். வரி கட்டுபவர்களின் வசதிக்காக, அதை எளிமைப்படுத்துவதற்காக ‘பான்’ என்று கூறப்படும் நிரந்தர கணக்கு எண்ணும், ஆதார் அட்டையும் ஒன்றுக்கு பதிலாக ஒன்றை பயன்படுத்திக்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய பான் கார்டு இல்லாதவர்கள், ஆதார் எண்ணை குறிப்பிடலாம். அதுமட்டுமல்லாமல், எங்கெங்கு பான் எண்ணை குறிப்பிடவேண்டுமோ, அங்கெல்லாம் ஆதார் எண்ணை குறிப்பிட்டுவிடலாம் என்று தெரிவித்துள்ளார். ஆதார் அட்டை என்பது 12 இலக்கம் கொண்ட தனித்துவமான அடையாள எண்ணை கொண்டதாகும். பான் எண் என்பது வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும்போது குறிப்பிடுவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

நமது மக்கள் தொகை 135 கோடிக்கு மேலாகும். இதில், நிதி மந்திரி சொன்னதுபோல, 123 கோடிக்குமேல் மக்கள் ஆதார் அடையாள அட்டை வைத்திருக்கிறார்கள். ஆனால், பான் கார்டு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 44 கோடியே 57 லட்சம்தான். ரூ.50 ஆயிரத்துக்குமேல் என்ன பொருள் வாங்கினாலும், வங்கிகளில் டெபாசிட் செய்தாலும், பரிமாற்றம் செய்தாலும், பான் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக இருக்கிறது. ஆனால், பலரிடம் பான் கார்டு இல்லாத நிலையில், நிதி மந்திரி அறிவித்த அறிவிப்பு நிச்சயமாக வரவேற்கத்தக்கதாகும். எதிர்காலத்தில் பான் கார்டு முறையை ரத்து செய்யும் வகையில், அந்த இடத்துக்கு ஆதார் வந்துவிடுமா? என்று கேட்டதற்கு, இன்றைய காலக்கட்டத்தில் அது இல்லை. இது மக்களின் வசதிக்காகத்தான் கூறப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் எங்களிடம் பான் கார்டு இல்லை என்று கூறுகிறார்கள். ஆதார் பயன்பாடு என்பது வரி கட்டுபவர்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கும். ஆனால், இதை ஒரேநாளில் எப்படி செய்ய முடியும்?. பான் கார்டை எடுத்துவிட்டு, ஆதாரை நடைமுறைக்கு கொண்டுவருவது என்பது நாட்டு மக்களின் உணர்வை பொறுத்ததாகும் என்று கூறியிருக்கிறார். 

ஆதார் அட்டையை பொறுத்தமட்டில், கருவிழி, விரல்ரேகை என்று பல முறைகளில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. எனவே போலி அட்டை வழங்க முடியாது. உலகம் முழுவதும் பல நாடுகளில் மக்களுக்கு ஒரே அடையாள அட்டைதான் இருக்கிறது. எல்லா பயன்பாட்டுக்கும் ஒரே அடையாள அட்டைதான் பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில், இந்தியாவிலும் பான் கார்டு விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நிபந்தனைகள், தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ, அவை அனைத்துமே ஆதார் அட்டை பெறுவதற்கும் வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரே பணியை செய்ய 2 அட்டைகள் வேண்டாம். ஆதார் அட்டையில் உள்ள விவரங்களே எல்லா பயன்பாட்டுக்கும் போதுமானதாகும். எனவே, பல அடையாள அட்டைகள் தேவையில்லை. ஆதார் அடையாள அட்டை ஒன்றே போதும். இதை மத்திய அரசாங்கம் அறிவிப்பாகவோ, சட்டமாகவோ வெளியிடவேண்டும்.

Next Story