லாப–நஷ்டம் பார்க்கக்கூடாது


லாப–நஷ்டம் பார்க்கக்கூடாது
x
தினத்தந்தி 21 July 2019 10:30 PM GMT (Updated: 21 July 2019 11:39 AM GMT)

1969–ம் ஆண்டு ஜூலை மாதம் 19–ந்தேதி இந்திய வரலாற்றிலேயே புரட்சிகரமாக இந்திராகாந்தி 14 தனியார் வங்கிகளை நாட்டுடமையாக்கினார்.

1969–ம் ஆண்டு ஜூலை மாதம் 19–ந்தேதி இந்திய வரலாற்றிலேயே புரட்சிகரமாக இந்திராகாந்தி 14 தனியார் வங்கிகளை நாட்டுடமையாக்கினார். ஜூலை 12–ந்தேதி பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தனியார் வங்கிகள் நாட்டுடமையாக்கப்படும் என்று அறிவித்தார். தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட அவரது நிதி மந்திரி மொரார்ஜி தேசாய் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இந்தநிலையில், ஜூலை 19–ந்தேதி அன்று இரவு மந்திரிசபை கூட்டத்தின் முடிவுக்கு ஏற்ப 14 தனியார் வங்கிகளை நாட்டுடமையாக்கும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ரூ.50 கோடி டெபாசிட்டுகளுக்கு மேல் வைத்திருந்த 14 தனியார் வங்கிகளும் ஒரே அவசர சட்டத்தின் மூலம் நாட்டுடமையாக்கப்பட்டன. சில தனியார் வங்கிகள் திவாலானநிலையில், வங்கிச்சேவை மக்களுக்கு அதிலும் குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு அதிகம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து 1980–ம் ஆண்டு ஏப்ரல் 28–ந்தேதி ரூ.200 கோடிக்கு மேல் டெபாசிட் வைத்திருந்த 6 வங்கிகளும், ஸ்டேட் வங்கி மற்றும் அதன் இணைப்பாக உள்ள வங்கிகளையும் சேர்த்து பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. தற்போது சில வங்கிகள் இணைக்கப்பட்டதை தொடர்ந்து, 24 பொதுத்துறை வங்கிகள் இருக்கின்றன. இந்த வங்கிகள் எல்லாம் நாட்டுடமையாக்கப்பட்டபிறகு, கிராமங்களில்கூட வங்கி கிளைகள் தொடங்கப்பட்டன. ஏராளமான ஏழை–எளிய மக்களுக்கு, விவசாயிகளுக்கு, வியாபாரிகளுக்கு, சிறு குறு, நடுத்தர மற்றும் கனரக தொழில்களுக்கு கடன் வழங்கப்பட்டதை யாரும் மறுக்கமுடியாது. நாடு முழுவதும் அனேகமாக ஒவ்வொரு வீட்டிலும் வங்கி கணக்குகள் இருக்கின்றன. 

பிரதமரின் ‘ஜன்தன் யோஜனா’ வங்கி திட்டத்தில் இன்று 21 லட்சத்து 41 ஆயிரம் பேர், ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் பொதுத்துறை வங்கிகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள். அதுபோல, முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.17 ஆயிரத்து 250 கோடியே 73 லட்சம் மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. பல வகைகளில் சாதாரண ஏழை–எளிய மக்களுக்கும் பயன்தரும் பொதுத்துறை வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்ட நாளில் ரூ.5.7 கோடி லாபத்தில் இயங்கின. தற்போது ஒட்டுமொத்த நஷ்டம் எவ்வளவு என்றால் ரூ.49 ஆயிரத்து 700 கோடி ஆகும். தனியார் வங்கிகள் எல்லாம் லாபத்தில் இயங்கும் நேரத்தில், பொதுத்துறை வங்கிகள் மட்டும் நஷ்டத்தில் இயங்குகிறதே. லாபத்தில் இயங்க வேண்டாமா? என்று கருத்துகள் கூறப்படுகின்றன. இவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது என்றாலும், பொதுத்துறை வங்கிகள் மக்கள் சேவைக்காக நடத்தப்படுகிறது. இதில் லாப–நஷ்டம் பார்க்கவேண்டிய தேவையில்லை. பல மானியங்கள் நேரடி வங்கி சேவை மூலமாக பொதுத்துறை வங்கிகள் வழியாகத்தான் நடக்கிறது. அன்றாட வாழ்க்கையில் அவசர தேவைகளுக்கான கடன் உதவிகளை பொதுத்துறை வங்கிகள்தான் வழங்குகிறது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் சொன்னதுபோல, இது கிரிக்கெட் போட்டியை, கால்பந்து போட்டியோடு ஒப்பிடுவது போலாகும். பொதுத்துறை வங்கிகளை தனியார் வங்கிகளோடு ஒப்பிடக்கூடாது. ஏனெனில், தனியார் வங்கிகளின் முக்கிய குறிக்கோள் லாபம்தான். ஆனால் பொதுத்துறை வங்கிகளுக்கு சமுதாய கடமைகள்தான் அதிகமாக இருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது.

Next Story