வெளிநாடுகளில் நர்சுகளுக்கு வேலைவாய்ப்பு


வெளிநாடுகளில் நர்சுகளுக்கு  வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 8 Aug 2019 11:00 PM GMT (Updated: 8 Aug 2019 2:51 PM GMT)

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவின் பல மாநிலங்களுக்கு மன்னர்கள், ஜனாதிபதிகள், பிரதமர்கள், மந்திரிகள் வருவதுண்டு.

மாநில அரசுகள் சார்பில் அந்த நேரங்களில் எல்லாம் அவர்களை விமான நிலையங்களில் வரவேற்பதும், அவர்களை கவுரவப்படுத்தும் வகையில் விருந்துகள் அளிப்பதும், அந்த மாநிலங்களில் உள்ள முக்கியமான இடங்களை சுற்றிக்காட்டுவதும், மீண்டும் விமான நிலையத்துக்கு சென்று வழிஅனுப்புவதும் ஒரு சம்பிரதாயமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால், இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், பரஸ்பர வர்த்தகத்துக்காகவும், மாணவர்கள் கல்வி தொடர்பான பரிமாற்றங்களுக்காகவும், பல்வேறு உதவிகளுக்காகவும் கூட்டங்களை நடத்தி, முடிவுகளை மேற்கொள்வதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது. ஏதோ வந்தார்கள், பார்த்தார்கள், திரும்பிச் சென்றார்கள் என்றில்லாமல், வந்தார்கள், இரு அரசுகளுக்கும் பயனளிக்கும் வகையில் ஒப்பந்தங்களில் இருதரப்பும் கையெழுத்திட்டனர் என்று இருப்பதில்தான் பயன் இருக்கும். 

அந்த வகையில், நெதர்லாந்து நாட்டு மன்னரான வில்லம்– அலெக்சாண்டரும், ராணி மேக்சிமாவும் கேரளாவுக்கு அக்டோபர் மாதம் 17, 18–ந் தேதிகளில் சுற்றுப்பயணம் வருகிறார்கள், அவர்களோடு பல்வேறு நிறுவன அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்கள், உயர் அதிகாரிகள் என்று 20 பேரும், 40 பேர் கொண்ட நிதி தூதுக்குழுவினரும் வருகிறார்கள். சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாகவும் மன்னரை சந்திக்கும் நேரத்தில் பேசப்படும். நெதர்லாந்து தேசிய ஆவண காப்பகமும், கேரள மாநில ஆவண காப்பகமும் இணைந்து கொச்சியிலும், தென்மாநிலங்களில் உள்ள டச்சு நாட்டு பாரம்பரிய நினைவுச்சின்னங்களை மேம்படுத்துவது தொடர்பாகவும் இந்தக்கூட்டத்தில் பேசப்படும் என்று முதல்–மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக கேரளாவில் நர்சிங் படிப்பு முடித்த 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம்வரை எண்ணிக்கையில் உள்ள நர்சுகளை நெதர்லாந்து நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவது தொடர்பாகவும் முடிவு செய்யப்படுகிறது. தற்போது நெதர்லாந்து நாட்டில் நர்சுகள் பற்றாக்குறை; கேரளாவில் நிறைய நர்சுகள் வேலை தேடுகிறார்கள். அந்தவகையில், இது பரஸ்பர உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

தமிழ்நாட்டிலும் டச்சு நாட்டின் நினைவுச்சின்னங்கள் நிறைய இருக்கின்றன. கேரள அரசாங்கத்தின் இந்த முயற்சி, நிச்சயமாக தமிழ்நாட்டிலும் பின்பற்றவேண்டிய ஒன்றாகும். தமிழ்நாட்டில் 5 அரசு நர்சிங் கல்லூரிகள், 176 தனியார் நர்சிங் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 7 நர்சிங் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றிலிருந்து ஆண்டுதோறும் ஏறத்தாழ 19 ஆயிரம் மாணவ–மாணவிகள் நர்சிங் முடித்து வேலைவாய்ப்பை எதிர்நோக்கி வெளியே வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு வழங்குவது என்பது முடியாத ஒன்றாகும். தனியார் மருத்துவமனைகள் நிறைய தொடங்கப்படும் நிலையில், அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால், நர்சுகளில் பலர் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்கவேண்டும், கைநிறைய சம்பாதிக்கவேண்டும், வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக உயரவேண்டும் என்ற குறிக்கோளில் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் உதவும் வகையில், தமிழக அரசும் இதுபோன்று வெளிநாட்டு தலைவர்களை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர்கள் உதவியை கோருவதோடு மட்டுமல்லாமல், என்ஜினீயர்கள், டாக்டர்கள், நர்சுகள், விவசாய பட்டதாரிகள் போன்ற தொழில்படிப்பு முடித்த இளைய சமுதாயத்தினருக்கு வேலைவாய்ப்பு பெறும்வகையில் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்பதே வெளிநாட்டில் வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Next Story