இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை


இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 4:35 PM GMT)

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுகிறதோ’ என்பார்கள். ‘குற்றாலத்தில் சளி பிடித்தால், கொடைக்கானலில் ஏன் தும்மல் வருகிறது?’ என்பார்கள். அதைத்தான் இப்போது பாகிஸ்தான் செய்து கொண்டிருக்கிறது.

காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிப்பதோ, அரசியல் சட்டத்தின் 370-வது மற்றும் 35ஏ பிரிவுகளை அங்கு ரத்து செய்வதோ முழுக்க, முழுக்க இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை. இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. வெளிநாடுகளில் நடக்கும் எந்த உள்நாட்டு விவகாரங்களிலும் இந்தியா தலையிடுவதில்லை. அதுபோலத்தான் மற்ற நாடுகளும் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. ஆனால் பாகிஸ்தான் மட்டும் காஷ்மீர் பிரச்சினையில் வேண்டாதவகையில் தலையிட்டு கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் ராணுவ தளபதி அவர் வேலையை பார்க்காமல், பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மக்களோடு உறுதியாக நிற்கிறது. கடைசிவரை அவர்கள் போராட்டத்தோடு துணை நிற்போம். அவர்களின் எண்ணங்கள் நிறைவேறும் வகையில் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறோம் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

இம்ரான்கான் இருமுறை தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை கூட்டியிருக்கிறார். 7-ந்தேதி நடந்த கூட்டத்திற்குப்பிறகு, இந்தியா காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை தன்னிச்சையாக சட்டவிரோதமாக ரத்து செய்து இருக்கிறது என்று குற்றம் சாட்டியதுடன், இந்திய தூதர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும், அதேபோல இந்தியாவில் பாகிஸ்தான் தூதர் இருக்கமாட்டார் என்றும் கூறியிருக்கிறார். இதுமட்டு மல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர வர்த்தகம் ரத்து செய்யப்படுகிறது என்றும் கூறினார். பரஸ்பர வர்த்தகத்தை ரத்து செய்வதால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட போவதில்லை. ஏனெனில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு செய்யப்படும் இறக்குமதியைவிட, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செய்யப்படும் ஏற்றுமதிதான் அதிகமாக இருக்கிறது.

கடந்த 2018-19-ல் இந்தியாவில் இருந்து 200 கோடி டாலர் அளவிற்கு பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி நடந்தது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து 50 கோடி டாலர் அளவிற்குத்தான் இறக்குமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா எந்தவொரு பொருளுக்காகவும் பாகிஸ்தானை சார்ந்து இருப்பதில்லை. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு பாகிஸ்தானில் சலுகை எதுவும் இல்லை. ஏனெனில், பாகிஸ்தான் இந்தியாவை முன்னுரிமை பட்டியலில் வைக்கவில்லை. புல்வாமா சம்பவத்திற்குப்பிறகு இந்தியாவும், பாகிஸ்தானை முன்னுரிமை பட்டியலில் இருந்து விலக்கி வைத்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 200 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. பாகிஸ்தானுக்குத்தான் ஏற்றுமதி செய்யவேண்டும் என்ற கட்டாயம் இந்தியாவுக்கு இல்லை. அங்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சந்தை தயாராக இருக்கிறது என்றாலும், பாகிஸ்தான் எல்லை ஓரங்களில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அங்கிருந்து வரும் சில பொருட்கள் தடைபடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாதவகையில், அந்த பொருட்களையெல்லாம் தங்கு தடையின்றி இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து சப்ளை செய்யவேண்டியது இருக்கிறது. அதுபோல, பாகிஸ்தானுக்கு இதுவரை ஏற்றுமதி செய்துகொண்டிருந்த பொருட்கள் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட அனைத்து உதவிகளையும் வழங்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், ஆகஸ்டு 15-ந்தேதி காஷ்மீர் மக்களோடு இணைந்து கருப்பு தினமாக கொண்டாடுவோம் என்ற பாகிஸ்தானின் அறிவிப்பு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

Next Story