தலையங்கம்

வரி கட்டுபவர்களுக்கு கவுரவம் + "||" + Honor for tax payers in thalaingam

வரி கட்டுபவர்களுக்கு கவுரவம்

வரி கட்டுபவர்களுக்கு கவுரவம்
மத்திய அரசாங்க பட்ஜெட்டில் இந்த நிதி ஆண்டில் ரூ.27 லட்சத்து 86 ஆயிரத்து 349 கோடி செலவாகவும், ரூ.20 லட்சத்து 82 ஆயிரத்து 589 கோடி வரவாகவும் இருக்கும் என்றும், ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்து 760 கோடி நிதி பற்றாக்குறையாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசுக்கு வரும் ஒரு ரூபாய் வரவில், 21 காசுகள் கம்பெனி வரி மூலமாகவும், 19 காசுகள் ஜி.எஸ்.டி. மூலமாகவும், 16 காசுகள் வருமானவரி மூலமாகவும், 8 காசுகள் மத்திய கலால்வரி மூலமாகவும், 4 காசுகள் சுங்கவரி மூலமாகவும் கிடைக்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. நாம் வாங்கிய வட்டிக்கு மட்டும் 18 காசுகள் போய்விடுகிறது. மானியங்களுக்காக மட்டும் 8 காசுகள் செலவாகிவிடுகிறது.


இந்த நிலையில், வரிகள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ.11 லட்சத்து 37 ஆயிரம் கோடி நேரடி வரி மூலம் வருவாயாக கிடைத்துள்ளது. இந்த பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடி வரையில் வருமானம் இருப்பவர்களுக்கு இப்போது விதிக்கப்படும் கூடுதல் வரியில் இருந்து இன்னும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல, ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் இருப்பவர்களுக்கு கூடுதலாக 7 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பவர்களுக்கு 2 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. முறையாக வருமானம் ஈட்டி, முறையாக வங்கி கணக்கில் பணம் செலுத்துபவர்களுக்கு, நாங்கள் போட்ட பணத்தை எடுப்பதற்கு எங்களுக்கே வரியா? என்ற ஒரு மனக்குறை இருக்கிறது. தற்போதுள்ள கணக்குப்படி ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடி வரை வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் வருமானத்தில் 39 சதவீதம் வரி கட்டவேண்டிய நிலை இருக்கிறது. இதுபோல, ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 42.74 சதவீதம் வருமான வரி கட்டவேண்டியதிருக்கிறது. இந்த கணக்குகளை பார்த்தால், அமெரிக்காவில் ஆண்டுக்கு 6 லட்சம் டாலர் அதாவது ஏறத்தாழ ரூ.4 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்குத்தான் அதிகபட்ச வருமான வரியாக 37 சதவீதம் விதிக்கப்படுகிறது.

ஆக, இந்தியாவில் மிக அதிகமான அளவில்தான் வருமான வரி கட்டுபவர்கள் இருக்கிறார்கள். 2018-19-ம் ஆண்டு கணக்குபடி, இந்தியாவில் 6 கோடியே 68 லட்சம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. நேர்மையாக வரி கட்டுபவர்களுக்கு சமுதாயத்தில் கவுரவம் அளிக்கப்பட வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மாவட்ட ரீதியாக அதிக வரிகட்டும் 10 பேருக்கு உரிய கவுரவம் அளிக்கப்படவேண்டும். விமான நிலையங்களில் விமானம் ஏறவரும்போது விரைவில் அவர்கள் உள்ளே செல்ல தனி சலுகை அளிக்கப்பட வேண்டும். இதுபோல, குடியேற்ற கவுண்ட்டர்களில் தூதரக அந்தஸ்துபோன்று சலுகை வழங்கி விரைவில் செல்ல அனுமதிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிக வரி கட்டுபவர்களின் பெயர்களை முக்கிய கட்டிடங்கள், சாலைகள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களுக்கு சூட்டவேண்டும். இப்படி நேர்மையாக வரி கட்டுபவர்களுக்கு உரிய கவுரவம் அளித்தால், எல்லோருக்குமே முறையாக வரி கட்டவேண்டும், அதுபோல கவுரவத்தை பெறவேண்டும் என்ற ஒரு ஊக்கம் வந்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

1. தலையங்கம்: பட்டாசு தொழில் அழிந்துவிடக்கூடாது
தீபாவளி மகிழ்ச்சி பட்டாசு வெடிப்பதில்தான் இருக்கிறது. இந்த பட்டாசு தொழில் விருதுநகர் மாவட்டம், சிவகாசியைத்தான் மையமாக கொண்டு இயங்குகிறது.
2. வீழ்ச்சி அடையும் மோட்டார் வாகன விற்பனை
சீனாவும், இந்தியாவும் மக்கள் தொகையில் ஒன்றையொன்று நெருங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால், தொழில் வளர்ச்சியில் சீனா சற்று முன்னேறி இருக்கிறது.
3. தமிழ்நாட்டில் சீன முதலீடுகள் அதிகரிக்கும்
பிரதமர் மோடி–சீன அதிபர் ஜின்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு உலகம் முழுவதையுமே உற்றுநோக்க வைக்கிறது. சீன பத்திரிகைகள் இந்த சந்திப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. ஏராளமான சீன பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறார்கள்.
4. வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும்
2 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு கூடி, ரெப்போ ரேட், ரிவர்ஸ் ரெப்போ ரேட் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி வளர்ச்சி எப்படி இருக்கும்? என்பதை நிர்ணயிக்கிறது.
5. வணங்க வேண்டிய தலைவர்களின் சிலைகள்
இந்த உலகத்தில் இப்படியா வாழ்ந்தார்கள்? என்பதை நம்புவதற்கு கடினமாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு சொல்லுக்கும்–செயலுக்கும் இடைவெளி இல்லாமல் இருந்தவர்கள், இருவர். ஒருவர் காந்தியடிகள், இன்னொருவர் காமராஜர். இருவருமே பொதுவாழ்வில் எளிமை, தூய்மை, நேர்மை என்று வாழ்ந்தவர்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...