கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி இருக்கலாமே?


கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி இருக்கலாமே?
x
தினத்தந்தி 20 Aug 2019 10:30 PM GMT (Updated: 20 Aug 2019 2:37 PM GMT)

யாரும் எதிர்பார்க்காத வகையில், தமிழக அரசு பால் கொள்முதல் விலை மற்றும் ஆவின் விற்பனை விலையை உயர்த்தி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

4 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில், பசும்பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.28–லிருந்து, 32 ரூபாயாக அதாவது ஒரு லிட்டருக்கு ரூ.4–ம், எருமைப்பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு 35 ரூபாயிலிருந்து, 41 ரூபாயாக அதாவது ஒரு லிட்டருக்கு ரூ.6–ம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தது. இதுபோல ஆவின் பால் விற்பனை விலை ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் இதற்கு முன்னால் 2014–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19–ந்தேதிதான் கொள்முதல் விலையும், விற்பனை விலையும் உயர்த்தப்பட்டது. ஆக, இந்த 5 ஆண்டுகளில் பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் கொள்முதல் விலையும் உயர்த்தப்படவில்லை. ஆவின் விற்பனை விலையும் உயர்த்தப்படவில்லை. இப்போது அறிவிக்கப்பட்ட விலை உயர்வு இரு தரப்புக்கும் திருப்தி அளிக்கவில்லை. உற்பத்தியாளர்களை எடுத்துக்கொண்டால், தமிழ்நாடு தொடர்ந்து வறட்சியால் பாதிக்கப்படுகிறது. கால்நடை களுக்கு தேவையான புல் வகைகளோ, வைக்கோலோ விவசாயிகளிடம் போதுமான அளவில் இல்லை. இதுமட்டுமல்லாமல், பசுந்தீவனம், கலப்பு தீவனம், உலர்தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலையும், கால்நடைகளின் மருத்துவச் செலவும் அதிகரித்துக் கொண்டு இருக்கும் அளவுக்கு கொள்முதல் விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை என்பது அவர்களது குறை. பால் நுகர்வோரை எடுத்துக் கொண்டால், ஒரேநேரத்தில் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு என்றால் எங்கள் பட்ஜெட்டுக்கு தாங்காதே என்று குறை கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 33 லட்சத்து 23 ஆயிரம் லிட்டர் பால் ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படுகிறது. பொதுமக்களுக்கு விற்பனையாகும் அளவை எடுத்துக்கொண்டால், 

10 லட்சத்து 42 ஆயிரம் லிட்டர்தான். மீதமுள்ள பால் எல்லாம் மோர், லஸ்சி, தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா, பால் பவுடர், ஐஸ்கிரீம் என பல உபபொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளிச்சந்தையில் விற்பனையாகின்றன. கடந்த ஆண்டு ஆவின் நிறுவனத்துக்கு 14 கோடியே 50 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. 

பால் உற்பத்தியாளர்கள் மனநிறைவு கொள்ள வேண்டும் என்றால், அவர்களின் இடுபொருட்கள் அனைத்தையும் மானிய விலையில் கொடுக்க முடியுமா? என்று அரசு பரிசீலிக்க வேண்டும். பொதுமக்களை பொறுத்தமட்டில், ஒரே நேரத்தில் 6 ரூபாய் உயர்த்து வதைவிட, படிப்படியாக உயர்த்தி இருந்தால் அவர்களுக்கு வலி தெரியாது. மேலும் பால் என்பது அத்தியாவசியமானது. எப்படி மின்சாரத்திற்கு, உணவு பொருட்களுக்கு, மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசலுக்கு அரசு மானியம் கொடுக்கிறதோ, அதுபோல பாலுக்கும் அரசு மானியம் கொடுக்கலாம். கொள்முதல் விலை உயர்வால் அரசுக்கு கூடுதலாக 480 கோடி ரூபாய்தான் செலவு ஆகிறது. இதை ஆவின் நிறுவனத்துக்கு அரசு மானியமாக கொடுத்தால், பொதுமக்களுக்கு விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது. அதுபோல பாலின் முக்கியத்துவம் கருதி, அரசு ஒன்று விலையை உயர்த்தாமல் இருக்கலாம் அல்லது அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தலாம் என்பதுதான் பொதுவான கோரிக்கையாக இருக்கிறது. 

Next Story