நிர்மலா சீதாராமன் தந்த நிவாரணம்


நிர்மலா சீதாராமன் தந்த நிவாரணம்
x
தினத்தந்தி 28 Aug 2019 11:00 PM GMT (Updated: 28 Aug 2019 1:41 PM GMT)

உலகம் முழுவதிலுமே பொருளாதார வளர்ச்சியில் ஒரு மந்தநிலை காணப்படுகிறது. வேகமாக பொருளாதாரத்தில் வளர்ச்சிகண்ட இந்தியாவும் இப்போது சரிவைக்கண்டுள்ளது.

 பல தொழில்களில் தேவை குறைந்து, உற்பத்தியில் வீழ்ச்சிக்கண்டு ஏராளமானவர்கள் வேலை இழந்து கொண்டிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார வளர்ச்சிக்கொண்ட நாடாக இந்தியா வளர்ந்தாகவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அந்த இலக்கை அடைவதற்கு தற்போதைய பொருளாதார சரிவு பெரிய தடை கல்லாக அமைந்துள்ளது. இந்தநிலையில், கடந்த ஆகஸ்டு 15–ந் தேதி சுதந்திரதினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்து பிரதமர் ஆற்றிய உரையில், ‘நாட்டுக்காக செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டுக்காக பணியாற்றுகிறார்கள். அவர்களை நாம் சந்தேகப்படக்கூடாது. அவர்களுக்குரிய மரியாதையையும், ஊக்கத்தையும் அளிக்கவேண்டும். அவர்களுக்கு பெருமைமிக்க இடத்தை அளிக்கவேண்டும் என்று தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசியதோடு நின்றுவிடாமல், அதேநாளில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை அழைத்து பொருளாதார நிலை குறித்து ஆலோசனை செய்து பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன் எதிரொலியாகத்தான் வருமானவரி அதிகாரிகள் வரி கட்டுவோரை துன்புறுத்தக்கூடாது’ என்ற வகையில் அறிவுறுத்தியுள்ளார். 

இதுமட்டுமல்லாமல், கடந்த 23–ந் தேதி தொழில் அதிபர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்கள் மீதுள்ள சுமைகளை இறக்கிவைக்கும் வகையிலும், எளிதாக தொழில் நடத்துவதற்கு தேவையான சூழ்நிலையையும், பல சலுகைகளையும் அடுக்கடுக்காக அறிவித்தார். ஒரு நோயாளி உடனடியாக குணமடைய ஒரு டாக்டர் ஊசிபோடுவதுபோல, பொருளாதார வளர்ச்சியை சீர்படுத்த பல சலுகைகள் கொண்ட அறிவிப்புகளை வெளியிட்டார். பங்குசந்தையில் முதலீடுகளை ஊக்குவிக்க பங்கு பரிமாற்றத்தின்போது விதிக்கப்படும் நீண்டகால மற்றும் குறுகியகால மூலதன ஆதாய சர்சார்ஜ் விலக்கிக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளதால் நிச்சயமாக பங்குசந்தையில் இருந்து வெளியேறிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்ய வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ‘ஸ்டார்ட் அப்’ தொழில்கள் மீதுள்ள ஏஞ்சல் வரி விலக்கிக்கொள்ளப்படும் என்று அறிவித்த அறிவிப்பு, புதுத்தொழிலை தொடங்குபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும். இதுபோல, ஜி.எஸ்.டி. ரீபண்டு 30 நாட்களுக்குள் இப்போது திருப்பித்தரப்படும் என்றும், இனிவரும் காலங்களில் 60 நாட்களில் திருப்பித்தரப்படும் என்றும் அறிவித்துள்ளது, சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். தற்போது ரூ.60 ஆயிரம் கோடி ரீபண்டு தொகை நிலுவையில் உள்ளது. இதுபோல, மோட்டார் வாகன தொழில்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் சமுதாய பொறுப்புடைமை திட்டத்தின்கீழ் விதிமீறல் என்றால், தற்போது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனி இவ்வாறு கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது. ஒரு சிவில் விதிமீறல் என்ற வகையில்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ரெப்போ ரேட் வட்டி குறைப்பின் பலனை பொதுமக்களுக்கு அளிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கு வட்டி குறையும். இப்படி மேலும் பல சலுகைகளை நிர்மலா சீதாராமன் வழங்கியதன் மூலம், தொழில் துறையிலும் குறிப்பாக மோட்டார் வாகன துறை, பங்குசந்தைகள் எல்லாம் புதிய வேகத்தை காணும். வேலைவாய்ப்பு பெருகும். வேகமான பொருளாதார வளர்ச்சியை காண வாசலை திறந்தும் வைக்கும்.

Next Story