இன்று இல்லை என்றால் நாளை


இன்று இல்லை என்றால் நாளை
x
தினத்தந்தி 8 Sep 2019 10:30 PM GMT (Updated: 8 Sep 2019 12:26 PM GMT)

நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆய்வு மேற்கொள்ளாத இடத்தில், இந்திய விண்கலம் போய் இறங்கும் முயற்சியில் நேற்று முன்தினம் அதிகாலையில் திடீர் சறுக்கல் ஏற்பட்டதால், ஒட்டுமொத்த இந்தியாவே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆய்வு மேற்கொள்ளாத இடத்தில், இந்திய விண்கலம் போய் இறங்கும் முயற்சியில் நேற்று முன்தினம் அதிகாலையில் திடீர் சறுக்கல் ஏற்பட்டதால், ஒட்டுமொத்த இந்தியாவே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 2008–ம் ஆண்டு அக்டோபர் 22–ந் தேதி அனுப்பப்பட்ட சந்திரயான்–1 நிலவை சுற்றிவந்து அங்கு ஈரப்பதம் இருப்பதை கண்டுபிடித்தது. சந்திரயான்–1 மேற்கொண்ட ஆய்வுகளை அடிப்படையாக வைத்து, சந்திரயான்–2 விண்கலத்தை அனுப்பி நிலவின் தென்துருவத்தில் லேண்டரை இறக்கி, அதிலிருந்து பிரக்யான் ரோவரை 500 மீட்டர் தூரம் சுற்றிவரச்செய்து பல ஆய்வுகளை நடத்த திட்டமிடப்பட்டது. பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் நிலவு இருக்கிறது. சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளத்தில் இருந்து கடந்த ஜூலை 15–ந் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. இதைக்காண ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் வந்திருந்தார். ஆனால் ராக்கெட்டை ஏவுவதற்கு 56 நிமிடங்கள் இருக்கும்போது எரிபொருள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டு, இந்த முயற்சி நிறுத்தப்பட்டது. பிறகு இதை சரிசெய்து கடந்த ஜூலை 22–ந் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் மூலம் சந்திரயான்–2 விண்ணில் ஏவப்பட்டது. 

47 நாட்கள் மிக வெற்றிகரமாக பயணம் செய்து, 7–ந் தேதி அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் தரை இறங்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. நிலவில் இந்திய விண்கலம் இறங்கும் இந்த நிகழ்ச்சியைக் காண பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் உட்கார்ந்திருந்தார். லட்சக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்த சந்திரயான்–2 திட்டமிடப்பட்டபடி நிலவை சுற்றிவந்து ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் தனியாக பிரிந்து நிலவில் இறங்க பயணித்தது. நள்ளிரவு 1.18 மணிக்கு கவுண்டவுன் தொடங்கி வெற்றிகரமாக இறங்கிக்கொண்டிருந்த நேரத்தில், 2 மணியை நெருங்கும் நிலையில் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும்போது சிக்னல் கிடைக்கவில்லை. முயற்சி வெற்றி பெறவில்லை என்று அறிந்ததும், இஸ்ரோ தலைவர் சிவன் உள்பட விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டு அழுதனர். பிரதமர் அவர்களுக்கு ஆறுதல் கூறி பாராட்டு தெரிவித்து உற்சாகப்படுத்தினார். 

இந்த நிலையில், நிலவில் விழுந்த லேண்டரை ஆர்பிட்டர் நேற்று கண்டுபிடித்துள்ளது. அதனுடன் தொடர்பை ஏற்படுத்தவும் தற்போது முயற்சி நடக்கிறது. இது ஒரு பக்கம் தொடரட்டும். 2022–ம் ஆண்டு ககன்யான் திட்டத்தின் மூலம் விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இனி இந்தியா தீவிரமாக ஈடுபட வேண்டும். இதற்காக 3 விண்கலங்கள் தயாரிக்கப்பட உள்ளன. 2 முறை ஆளில்லா விண்கலங்கள் அனுப்பப்பட்டு, பிறகு 3–வது முறையாக 3 பேரை விண்வெளிக்கு அனுப்பும் இந்த திட்டத்திற்காக ரஷியா – பிரான்சுடன், இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. யாரை அனுப்புவது என்ற தேர்வு தொடங்கிவிட்டது. அவர்களுக்கு ரஷியாவில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. சந்திரயான்–2 திட்டத்தில் தொய்வு ஏற்பட்டதை கண்டு இஸ்ரோ மையம் துவண்டுவிடாமல், ககன்யான் திட்ட வெற்றிக்காக முழு முயற்சி எடுக்க வேண்டும். சந்திரயான்–2 போனால் பரவாயில்லை. ககன்யான் திட்டத்தில் 3 விண்வெளி வீரர்களை அடுத்த 3 ஆண்டுகளில் விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் இந்தியா வெற்றி பெறவேண்டும் என்று நாட்டு மக்கள் இப்போதே வாழ்த்துகிறார்கள். சந்திரயான்–2–வுக்கு ஏற்பட்ட தடைக்கல்லை, ககன்யான் வெற்றிக்கான படிக்கல்லாக மாற்றிக்கொள்வோம். 

Next Story