ஜி.எஸ்.டி.யை குறைக்கவேண்டிய நேரம் இது


ஜி.எஸ்.டி.யை குறைக்கவேண்டிய நேரம் இது
x
தினத்தந்தி 10 Sep 2019 10:30 PM GMT (Updated: 2019-09-10T19:13:39+05:30)

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ரொனால்டு ரீகன் மிகவும் யதார்த்தமான தத்துவங்களை உதிர்ப்பது வழக்கம். பொருளாதாரம் குறித்து அவர் அன்று சொன்னது, இன்று இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

பொருளாதாரம் தொடர்பாக அரசாங்கத்தின் கண்ணோட்டத்தை மிகவும் சுருக்கமாக சொல்லிவிடலாம். ‘பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தால் வரிப்போடலாம். வளர்ந்து கொண்டிருந்தால் ஒழுங்குபடுத்தலாம். வளர்ச்சியை காணாமல் நின்றுவிட்டால் மானியம் கொடுக்கலாம்’ என்று ரீகன் அன்று கூறியதை, அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய அவசர அவசியம் வந்துவிட்டது. நாட்டின் பொருளாதாரம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவு 5 சதவீதமாக குறைந்துவிட்டது. உற்பத்தித்துறையின் வளர்ச்சி 1 சதவீதத்துக்கும் கீழேபோய் 0.6 சதவீதமாகவும், விவசாயத்துறையின் வளர்ச்சி வெறும் 2 சதவீதமாகவும்தான் இருக்கிறது. உற்பத்தியும் இல்லை, வளர்ச்சியும் இல்லை, வாங்கும் சக்தியும் இல்லை, பணப்புழக்கமும் இல்லை. இப்படி எல்லாவற்றிலும் ஒரு மந்தநிலையை நாடு கண்டுகொண்டிருக்கிறது.

2017–ம் ஆண்டு ஜூலை 1–ந்தேதி முதல் அமலுக்கு வந்த சரக்கு சேவைவரியும், 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந்தேதி கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஏற்படுத்திய ரணம், கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, இப்போது பெரிய காயமாக மாறிவிட்டது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) என்ற கோ‌ஷத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் எங்கள் இலக்கு என்று சொல்கிறது. ஆனால், இப்போது ஏற்பட்டிருக்கும் நிலையில் அதை அடைய முடியுமா? என்ற கவலையை கொடுத்துள்ளது. இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் கடந்த 19 ஆண்டுகளாக மாதம்மாதம் மோட்டார் வாகனங்களின் விற்பனை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பட்டியலிட்டு வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் இதுவரை இல்லாத அளவு மோட்டார் வாகனங்களின் விற்பனை 23.55 சதவீதம் குறைந்துள்ளது. பல மோட்டார் வாகன தொழிற்சாலைகளில் கதவடைப்பு, உற்பத்தி குறைப்பு, தொழிலாளர்கள் வேலை இழப்பு என்று போய்க்கொண்டிருக்கிறது. டெலிவி‌ஷன் விற்பனைகூட பெருமளவில் சரிந்துவிட்டது. 

இந்த நேரத்தில் ரொனால்டு ரீகன் கூறியதுபோல, அரசாங்கம் உதவிக்கரம் நீட்டவேண்டிய கட்டாயமாகிவிட்டது. மோட்டார் வாகனங்களுக்கு தற்போது 28 சதவீதம் முதல் பல்வேறு கட்டங்களாக 50 சதவீதம்வரை சரக்கு சேவைவரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விகிதத்தை உடனடியாக குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கூட, ‘இதுகுறித்து நான், நிதி மந்திரியிடம் பேசுவேன்’ என்று கூறியிருக்கிறார். சரக்கு சேவைவரியை குறைப்பதை பெரும்பாலும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், தற்போது சரக்கு சேவைவரி வசூல் கடந்த ஆகஸ்டு மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடி வசூலை அடையமுடியாமல், ரூ.98 ஆயிரத்து 202 கோடி என்று தடுமாறிக்கொண்டிருக்கிறது. வருகிற 20–ந்தேதி கோவாவில் 37–வது சரக்கு சேவைவரி கவுன்சில் கூட்டம் நடக்க இருக்கிறது. மோட்டார் வாகனம், டெலிவி‌ஷன் உள்பட பல்வேறு பொருட்களுக்கு பொதுமக்கள் வாங்கும் அளவுக்கு விலை இருக்கவேண்டுமென்றால், சரக்கு சேவைவரியை குறைத்தால்தான் முடியும் என்பதை அந்தக்கூட்டத்தில் எடுத்துக்கூறி, விலையை சீரமைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. ‘அலர்ட் டுடே, அலைவ் டுமாரோ’ என்ற ஆங்கில பழமொழிக்கேற்ப, ‘இன்று உஷார், நாளை உயிர்ப்பு’ என்ற நிலையில்தான் நாடு இருக்கிறது.

Next Story