தேர்வாணையம் வினாத்தாள் தவறா?


தேர்வாணையம் வினாத்தாள் தவறா?
x
தினத்தந்தி 12 Sep 2019 10:30 PM GMT (Updated: 2019-09-12T19:51:59+05:30)

தேர்வாணையம் வினாக்கள் தயாரிப்பதில் மிகவும் கவனமான நடைமுறைகளை கையாள வேண்டும்.

நாட்டில் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடைந் துள்ளது. உற்பத்தித்துறை, சேவைத்துறை என வேலைவாய்ப்புகளை வழங்கும் பல துறைகளில் உற்பத்தி பாதிப்பு, அதன் காரணமாக நிறைய தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு பெருகினால்தான் மக்களிடம் வாங்கும் சக்தி அதிகமாக இருக்கும். தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள இந்த சூழ்நிலையில், அரசு வேலைவாய்ப்பு களை பெரிதும்  எதிர்பார்க்கிறார்கள். 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தான் அரசு பணிகளுக்காக தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. சமீபத்தில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் வரி தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் என்பதுபோன்ற குரூப்–4 பிரிவுகளில், 6 ஆயிரத்து 491 காலியிடங்களுக்காக கடந்த 1–ந்தேதி தேர்வு நடந்தது.

13.69 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில், பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறிவு பிரிவில் இருந்து 25 கேள்விகளும் மற்றும் தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் 100 கேள்விகளும் கேட்கப்பட்டன. தமிழ் அல்லது ஆங்கில மொழியில் தேர்வை எழுதலாம் என்று கூறப்பட்டது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் 90 மதிப்பெண்கள் தகுதி மதிப்பெண்ணாக கருதப்படுகிறது. ஆனால் இந்த தேர்வை எழுதியவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். பல கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டாக, தகவல் அறியும் உரிமை சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் எது? என்று கேட்டு, அதற்கு 4 விடைகளை கொடுத்து, அதில் உள்ள சரியான விடை எது? என்று குறிப்பிட வேண்டும். ஆனால் 4 பதில்களிலுமே சரியான விடை இல்லை. இதுபோல 1951–ம் ஆண்டு நடந்த முதல் பொது தேர்தலில் எத்தனை அரசியல் கட்சிகள் போட்டியிட்டன என்ற கேள்விக்கு 4 பதில்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. அந்த நான்குமே சரியான விடை இல்லாத சூழ்நிலையில், எந்த பதிலை தேர்ந்தெடுக்க முடியும்?. முதல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாள் என்ற கேள்விக்கு தமிழ் தாளில் குடியரசு தினம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி பல மொழி பெயர்ப்புகள், வினாக்களில் தவறுகள் இருந்தன. சில மாதங்களுக்கு முன்பு நடந்த குரூப்–1 தேர்வில்கூட இதுபோன்ற பல தவறுகள், குளறுபடிகள் இருந்தன.

கடந்த ஜனவரி முதல் ஆகஸ்டு வரை நடந்த 25 தேர்வுகளிலும் ஏதாவது தவறுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு தவறான கேள்விகள் கேட்டதற்காக பல நேரங்களில் சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு முறையும் கேள்வித்தாள்களில் தவறுகள் இருப்பது ஒரு வழக்கமான நடைமுறையாகவே ஆகிவிட்டது. சரியான விடைகளுக்கு மதிப்பெண் கொடுத்து தேர்வு செய்ய வேண்டிய நிலையில், வினாக்களே தவறாக இருந்தால் தேர்வு எழுதுபவர்களின் விடை எப்படி சரியாக இருக்க முடியும்?. எனவே, தவறு என்பது எப்போதும் நடக்கிற ஒரு நடைமுறை என்பது உடனடியாக மாற்றப்படவேண்டும். தேர்வாணையம் வினாக்கள் தயாரிப்பதில் மிகவும் கவனமான நடைமுறைகளை கையாள வேண்டும். இதுவரை நடந்த தவறுகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக என்ன பணிகளுக்கான தேர்வு நடக்கிறதோ, அந்த பணிக்கேற்ற வகையில் கேள்விகளைக் கொண்ட வினாத்தாள்கள் இருப்பது சாலச்சிறந்ததாகும். 

Next Story