அதிகாரிகள்தான் இதற்கு பொறுப்பு


அதிகாரிகள்தான் இதற்கு பொறுப்பு
x
தினத்தந்தி 13 Sep 2019 10:30 PM GMT (Updated: 2019-09-13T18:33:22+05:30)

சென்னையில் நெஞ்சை பதறவைக்கும் ஒரு கொடூரமான சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது.

சுபஸ்ரீ என்ற 23 வயது சாப்ட்வேர் என்ஜினீயர் பணி முடிந்து, ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அவர் போகும்போது, சாலையின் நடுவே உள்ள தடுப்பில் ஒரு அ.தி.மு.க. பிரமுகரின் மகன் திருமணத்துக்காக கட்டப்பட்டிருந்த பேனர் அவர்மீது விழுந்தது. திடீரென இந்த பேனர் விழுந்ததால் நிலைதடுமாறிய சுபஸ்ரீ கீழே விழுந்தார். இவ்வளவுக்கும் ஹெல்மெட் அணிந்திருந்தார். ஆனால், அந்தநேரத்தில் அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரி அவர்மீது ஏறி இறங்கியதால் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிர் இழந்தது, தமிழ்நாடு முழுவதையுமே கண்ணீர் வடிக்கவைக்கிறது. 

பெரிய பெரிய பிளாஸ்டிக் பேனர்கள், கட்–அவுட்கள் வைப்பது தமிழ்நாடு முழுவதும் ஒரு நாகரிகமாகவே மாறிவிட்டது. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் தங்கள் வீட்டில் நடக்கும் திருமணம், கிரகபிரவேசம், ஏன் ஒரு வயது குழந்தையின் பிறந்த நாளுக்குக்கூட பேனர் வைப்பதுதான் தங்களுக்கு கவுரவம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்துதான் இப்படி பொதுஇடங்களிலும் பேனர் வைப்பது சகஜமாகிவிட்டது. இவ்வளவுக்கும் சென்னையில் நடந்த இந்த சம்பவம் முதல் சம்பவம் அல்ல. இது தொடர்நிகழ்வாகவே மாறிவிட்டது. சென்னையில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கு சிறிய அளவிலும், பெரிய அளவிலும் பல சம்பவங்கள் இதுபோல அடிக்கடி நடந்து வருகின்றன. தொடர்ந்து இவ்வாறு அரங்கேற்றப்படும் பேனர் கலாசாரத்துக்கு நீதிமன்றங்கள் தடைவிதித்து உத்தரவுகள் பிறப்பித்துக்கொண்டுதான் உள்ளன. 2006–ம் ஆண்டே சென்னை ஐகோர்ட்டு பேனர் வைப்பதற்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. 2008–ல் அதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதிசெய்தது. 

இதுதொடர்பாக இந்த உத்தரவுகள் பிறப்பித்த பிறகும், தொடர்ந்து பேனர் கலாசாரம் தலைவிரித்துக் கொண்டு ஆடுவதை பார்த்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்தார். அப்போதும் பேனர் வைப்பதற்கு ஐகோர்ட்டு தடைவிதித்தது. நேற்று மீண்டும் இந்த வழக்கு ஐகோர்ட்டில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சே‌ஷசாயி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சம்பவம் குறித்து கடுமையான கண்டன கணைகளை அரசு மீதும், அதிகாரிகள் மீதும், அரசியல் கட்சிகள் மீதும் வீசியது. அரசியல் கட்சிகள் சமுதாய பொறுப்புணர்வோடு செயல்பட்டு தங்கள் கட்சிக்காரர்களை சட்டவிரோத பேனர் வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தவேண்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர். தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் தங்கள் நிகழ்ச்சிகளில் பேனர், கட்–அவுட் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும் என்று உடனடியாக அறிவிப்பு வந்துவிட்டது. 2018–ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொதுஇடங்களில் பேனர் வைப்பதற்கு முழுமையான தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டபிறகு, அதைமீறி இனியும் பேனர் வைக்கப்பட்டால் உள்ளாட்சி அமைப்புகளும், போலீசாரும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சென்னையில் மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுத்து, பேனரை அகற்றியிருந்தால் சுபஸ்ரீ உயிர் இழந்திருக்கமாட்டார். எனவே, இந்த கோர சம்பவத்துக்கு அதிகாரிகள்தான் பொறுப்பு. விதிகளும் இருக்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளும் இருக்கின்றன. இனியும் உள்ளாட்சி அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இனி பொதுஇடங்களில் எங்கேயும் பேனர் இருக்கக்கூடாது. 

Next Story