2–வது மொழியாக இந்திக்கு இடமா?


2–வது மொழியாக இந்திக்கு இடமா?
x
தினத்தந்தி 20 Sep 2019 11:00 PM GMT (Updated: 20 Sep 2019 1:31 PM GMT)

சமீபகாலங்களில் பலமுறை இந்திக்கு முக்கியத்துவம் அளிக்க எடுக்கப்படும் முயற்சிகள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், பல மாநிலங்களில் குறிப்பாக தென்மாநிலங்களில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதிலும் கடந்த 14–ந் தேதி ‘இந்தி’ தினம் கொண்டாடப்பட்ட நேரத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ‘இந்திதான் இந்த நாட்டை இணைக்கக்கூடிய ஒரே மொழியாகும். இந்தியை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 உலகளாவிய ஒரு அடையாளம் ஏற்பட நாடு முழுவதுக்குமான ஒரு மொழி வேண்டும். நாட்டை ஒருங்கிணைக்க ஒரு மொழியால் முடியும் என்றால், அது அதிக மக்கள் பேசும் மொழி இந்திதான்’ என்று கூறியது, நாட்டின் பல தரப்பினரிடமிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளப்பியது. 

தி.மு.க. சார்பில் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (20–ந் தேதி) பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த போராட்டத்துக்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்தநிலையில், 18–ந்தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அழைத்து பேசினார். இந்த அழைப்புக்கு பிறகு மு.க.ஸ்டாலின், ‘‘மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எந்த காரணத்தைக்கொண்டும் தமிழகத்தில் ‘இந்தி’ திணிக்கப்படமாட்டாது என்று அழுத்தம் திருத்தமாக கவர்னர், தன்னிடம் எடுத்து சொன்னதாகவும், மத்திய அரசின் பிரதிநிதியாக நான் இருக்கக்கூடியவன். எனவே, மத்திய அரசு சொல்லித்தான் இதை உங்களிடத்தில் கூறுகிறேன் என்ற உறுதியை தந்ததாகவும்’’ கூறினார். இதேபோல, ‘‘இந்தியாவின் ஒரேமொழியாக இந்திதான் இருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. நான் சொன்னதை தவறாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள்’’ என்று அமித்ஷா சொன்ன கருத்தை மனதில்கொண்டு, 20–ந் தேதி தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம் என்றும் கூறியிருந்தார். 

ஆனால், அதேநாளில் அமித்ஷா பேசிய பேச்சை பார்த்தால், அவர் தன் நிலைபாட்டிலிருந்து முழுமையாக இறங்கி வரவில்லை என்பதுபோல தெரிகிறது. ‘‘இந்தி மொழியை கட்டாயமாக திணிப்பதற்கு தான் ஆதரவாக இல்லை. நான் திரும்ப திரும்ப சொல்வது தாய்மொழியை வலுப்படுத்தவேண்டும். நாட்டில் ஒரு பொதுமொழி இருக்க வேண்டும். இதுதொடர்பாக நான் மக்களிடம் கேட்பது, ‘உங்கள் தாய்மொழிக்கு அடுத்தாற்போல் ஏதாவது ஒரு மொழியைக்கற்றால், நீங்கள் இந்தியை 2–வது மொழியாக கற்றுக்கொள்ளவேண்டும். இதில் என்ன தவறு இருக்கிறது?’’ என்று கூறினார். ஆக, 2–வது மொழியாக இந்தியை கற்றுக்கொள்ளவேண்டும். இந்தி பொதுமொழியாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடுகளில் இருந்து அமித்ஷா மாறவில்லை. தமிழ்நாடு போன்ற இருமொழிக்கொள்கை அமல்படுத்தப்படும் மாநிலங்களில் முதல் மொழியாக தாய்மொழியும், 2–வது மொழியாக ஆங்கிலமுமே கற்றுக்கொடுக்கப்படுகிறது. அமித்ஷா கூறுவதுபோல, 2–வது மொழியாக இந்தி கற்கவேண்டும் என்றால், தாய் மொழியும், இந்தி மொழியும் கற்றுக்கொள்ளமுடியுமே தவிர, ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேல்நாடுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்று இருக்கிறார்கள் என்றால், ஆங்கிலத்தில் நல்ல புலமையும், கம்ப்யூட்டரில் திறமையும் கொண்டு இருப்பதால்தான் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படியொரு சூழ்நிலையில், ஆங்கிலம் தெரியாமல் தமிழும், இந்தியும் மட்டும் படித்தால் வேலைவாய்ப்பு பாதிக்கும். எனவே, அமித்ஷா சொல்லும் 2–வது மொழி ‘இந்தி’ என்ற கருத்து தமிழ்நாட்டுக்கு ஒருபோதும் பொருந்தாது.

Next Story