இ–சிகரெட்டுக்கு முழுமையான தடை


இ–சிகரெட்டுக்கு முழுமையான தடை
x
தினத்தந்தி 24 Sep 2019 10:30 PM GMT (Updated: 2019-09-24T19:56:48+05:30)

இ–சிகரெட் என்பது பேட்டரி மூலம் பயன்படுத்தப்படும் ஒரு சிகரெட் ஆகும். இதில் நிக்கோடின் கலந்த திரவம் வைக்கப்பட்டு இருக்கும்.

–சிகரெட் என்பது பேட்டரி மூலம் பயன்படுத்தப்படும் ஒரு சிகரெட் ஆகும். இதில் நிக்கோடின் கலந்த திரவம் வைக்கப்பட்டு இருக்கும். இந்த சிகரெட்டை பயன்படுத்தும்போது, ஏரோசோல் என்ற நச்சுப்பொருள் அதிலிருந்து கிளம்பி, புகைப்பதற்கு துணை நிற்கிறது. இந்த இ–சிகரெட்டில் சாதாரண சிகரெட்டை புகைக்கும்போது வெளிவரும் வாசனை வருவதில்லை. புகையும் கொஞ்ச அளவே வருகிறது. இதை விற்பனை செய்ய ஒரு யுக்தியாக சிகரெட் பழக்கத்தில் இருந்து விடுபட இது உதவும். சிகரெட், பீடி போன்று இதில் அதிக தீமையில்லை என்றெல்லாம் கூறித்தான் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.1,000–த்துக்கு மேல் பல ரகங்களில் இருக்கிறது. ஆனால் இ–சிகரெட்டினால் நிக்கோடின் பாதிப்பு ரத்த நாளங்களிலும், இதயத்திலும் மிக அதிகமாக ஏற்படுகிறது. இதய துடிப்பு, ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துகிறது. இதை பயன்படுத்தினால் மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு என்று பல நோய்கள் ஏற்படும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் கே.குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் புதன்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பொதுமக்கள் உடல்நலத்துக்கு நலன்பயக்கும் ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படாமல், சீனா போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவுக்கு கொண்டுவந்து விற்பனை செய்யப்படும் இ–சிகரெட்டுக்கு (எலெக்ட்ரானிக் சிகரெட்) முழுமையான தடைவிதித்து அவசர சட்டம் பிறப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்தின்கீழ் இ–சிகரெட்டை தயாரித்தல், இறக்குமதி–ஏற்றுமதி செய்தல், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்லுதல், ஆன்லைன் மூலம் விற்பனை, வினியோகம் செய்தல் போன்றவை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன. இந்த தடையை மீறி இந்த செயலை செய்பவர்களுக்கு  ஒரு  ஆண்டு சிறைத்தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. ஒரு தடவைக்கு மேல் இந்த குற்றங்களை செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இ–சிகரெட் வைத்திருப்பவர்களுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்கிறது.  

கடந்த ஆண்டே மத்திய அரசாங்கம் அனைத்து மாநிலங்களுக்கும் இ–சிகரெட்டை தடைசெய்ய வழங்கிய ஆலோசனையை ஏற்று, தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 3–ந்தேதி இதுதொடர்பான அரசாணையும் பிறப்பித்தது. தமிழ்நாட்டை போல, 16 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் இ–சிகரெட்டுக்கு தடை விதித்திருந்தாலும், மத்திய அரசாங்க சட்டம் இல்லாமல் முழுமையாக அதை அமல்படுத்த முடியாமல் இருந்தது. தற்போது மத்திய அரசும் சட்டம் பிறப்பித்துவிட்டது. மாநில அரசின் சட்டமும் அமலில் இருக்கிறது. பீடி, சிகரெட்டினால் ஏற்படும் தீமையைவிட, இ–சிகரெட்டை புகைப்பதால் ஏற்படும் தீமை குறைவு என்று பரவலாக ஒரு கருத்து கூறப்படுகிறது. ஆனால், இ–சிகரெட்டினால் எந்த அளவுக்கு அபாயம் என்று குறிப்பிட்டு இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை. இது தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதில் சந்தேகமே இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தன் ஆய்வில் தெரிவித்துள்ளது. மேலும் புகைபிடித்தல் பழக்கத்தை விட்டுவிட முயற்சிப்பவர்களுக்கு இது துணைபுரியும் என்பதற்கான ஆதாரம் இல்லை என்றும் அது தெரிவிக்கிறது. மாறாக புகைபிடிக்கும் பழக்கத்துக்கு தூண்டுகோலாகவும், நுழைவு வாயிலாகவும்தான் இ–சிகரெட் இருக்கிறது.

Next Story