பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயந்து ஓடவேண்டும்


பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயந்து ஓடவேண்டும்
x
தினத்தந்தி 26 Sep 2019 11:00 PM GMT (Updated: 26 Sep 2019 4:45 PM GMT)

காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கம். காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் அரசியல் சட்டம் 370-வது பிரிவு கடந்த ஆகஸ்டு மாதம் 5, 6-ந் தேதிகளில் நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து பாகிஸ்தான் கொக்கரிக்கிறது.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் இதை பயன்படுத்திக் கொண்டு தங்கள் ஆட்டத்தை தொடங்கிவிடக்கூடாது என்பதால், காஷ்மீரில் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர், போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் எல்லாம் மூடப்பட்டிருந்த நிலையில், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட்டு சகஜநிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இவ்வளவு பாதுகாப்பையும் மீறி, வியாபாரிகள் கடைகளை திறக்கக் கூடாது என்று பயங்கரவாதிகள் அச்சுறுத்துவதும், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களை திறக்கக்கூடாது என்று மிரட்டுவதும் நடந்து வருகிறது. ஆங்காங்கு கடைகளை திறக்கக்கூடாது என்று நோட்டீஸ்கள் ஒட்டப்படுகின்றன. சில கடைகளில் (L.W.) அதாவது கடைசி எச்சரிக்கை என்று பொருள்படும் ‘லாஸ்ட் வார்னிங்’ என்ற நோட்டீஸ்களும் ஒட்டப்படுகின்றன. வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற 60 பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநிலத்துக்குள் ஊடுருவி விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். உள்ளூரில் உள்ள 2 பேர் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக தலைமை போலீஸ் அதிகாரி தெரிவிக்கிறார். பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து தங்களை அனுப்பியவர்களிடம் பேசுவதற்கு, காஷ்மீரில் செல்போன் சேவை இல்லாததால் பஞ்சாப் சென்று அங்கிருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு வந்திருந்த ராணுவ தளபதி பிபின் ராவத், பயங்கரவாதிகள் 500 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் எல்லையில் தயாராக இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இது நான் சொல்லும் குறைந்தபட்ச எண்ணிக்கை. பருவகாலத்துக்கு ஏற்ப எண்ணிக்கை உயரலாம். இப்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் ஜம்மு காஷ்மீரின் வடபகுதியில் இருந்து குரேஸ் பகுதிக்கு பயங்கரவாதிகள் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார். காஷ்மீரில் மட்டுமல்லாமல், பஞ்சாபிலும் பயங்கரவாதிகளின் முயற்சிகள் தொடங்கிவிட்டன. பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் பஞ்சாபில் நவீன தானியங்கி ஆயுதங்கள் போடப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்-மந்திரி அமரீந்தர் சிங் கூறியிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் இவ்வாறு பாகிஸ்தானில் இருந்து எல்லையைத்தாண்டி பஞ்சாபுக்குள் நுழைந்து ராஜோக் என்ற கிராமத்தில் போடப்பட்ட 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள், பிஸ்டல்கள், சேடிலைட் போன்கள், கையெறிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி இன்று ஐக்கிய நாட்டு சபையில் பேசுகிறார். இந்த நேரத்தில் பயங்கரவாதிகள் இந்தியாவில் தங்கள் தாக்குதலை அரங்கேற்றலாம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. எனவே, காஷ்மீர் மட்டுமல்லாமல், பஞ்சாப் மட்டுமல்லாமல், நாடு முழுவதுமே மிக விழிப்புடன் இருக்கவேண்டும். வடக்கே இமயமலை பகுதி மட்டுமல்லாமல், நாட்டின் கடலோர பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படவேண்டும். மொத்தத்தில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளோ, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளோ நமது முயற்சி இந்தியாவில் எடுபடாது என்று எண்ணி பயந்து ஓடவேண்டும். அதற்குரிய வகையில் ராணுவம், துணை ராணுவ படைகளும், போலீசாரும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பயங்கரவாதிகளை ஒடுக்க எடுக்கப்படும் எந்த நடவடிக்கைக்கும் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. ஆதரவுகரம் நீட்டவேண்டும். ஏனெனில், பயங்கரவாதிகளால் பாதிக்கப்படப்போவது இந்த நாட்டு மக்கள்தான்.

Next Story