தமிழ் மண்ணில் மலர்ந்தது புதிய அத்தியாயம்


தமிழ் மண்ணில் மலர்ந்தது புதிய அத்தியாயம்
x
தினத்தந்தி 13 Oct 2019 10:30 PM GMT (Updated: 13 Oct 2019 11:55 AM GMT)

மிகப்பெரிய இரு நாடுகளான சீனாவும், இந்தியாவும் ஆசிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றன.

மிகப்பெரிய இரு நாடுகளான சீனாவும், இந்தியாவும் ஆசிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் தொகையில் உலகில் அதிகம் உள்ள இரு நாடுகள் இந்தியாவும், சீனாவும்தான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே வர்த்தக உறவும், கலாசார உறவும் தழைத்தோங்கியது. எனவே சென்னையில், அதாவது மாமல்லபுரத்தில் தான் இந்த சந்திப்பை நடத்தவேண்டும் என்ற உறுதியான முடிவை மோடி எடுத்தார். இந்திய பிரதமராக 2014–ல் மோடியும், சீன அதிபராக 2013–ல் ஜின்பிங்கும் பொறுப்பேற்ற பிறகு சற்று மாற்றம் தென்பட்டு, நட்புறவை நோக்கி இரு தலைவர்களும் நடைபோட்டனர். 2014–ம் ஆண்டு சீன அதிபர் ஜின்பிங் குஜராத் மாநில தலைநகர் ஆமதாபாத்தையும், காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் உள்ள உஹான் நகரில் மோடியும், ஜின்பிங்கும் சந்தித்தனர். 

இந்த ஆண்டு இந்தியாவில் இரு தலைவர்களும் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே பண்டையகாலத்தில் தமிழ்நாடு வழியாகத்தான் உறவு செழித்து இருந்தது. மாமல்லபுரம்தான் அதற்கு வழிகோலியது. இவ்வாறு இரு நாடுகளுக்கிடையே உள்ள நீண்ட நெடிய பாரம்பரியமான உறவுகளை பின்னணியாக வைத்து, வாழ்வில் இளமை பருவத்தில் பல கஷ்டங்களை தாங்கி, படிப்படியாக வளர்ந்து உயர்ந்த இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசி இருக்கிறார்கள். இது ஒரு முறைசாரா சந்திப்பு மட்டுமல்லாமல், நட்புரீதியான சந்திப்பாகும். முதல் நாள் பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்களின் கலாசார உடையான வேட்டி–சட்டை, துண்டு அணிந்து பச்சை தமிழராகவே மாமல்லபுரத்தில் சீன அதிபரை வரவேற்றார். சீன அதிபரும் கோட்டு–சூட்டு அணியாமல், சாதாரண பேண்ட்–சட்டை அணிந்து இரு நண்பர்கள் பேசும்போது ஆடை முக்கியமல்ல, மனம்தான் முக்கியம் என்ற வகையில், தனியாக நடந்துகொண்டும், ஒன்றாக அமர்ந்துகொண்டும் அளவளாவினர். முதல் நாள் மட்டும் ஏறத்தாழ 5 மணி நேரம் இரு தலைவர்களும் பேசினர். வர்த்தகம், பொருளாதாரம், இருநாட்டு மக்களிடையே உறவு மேம்பாடு, பயங்கரவாத ஒழிப்பு என நிறைய வி‌ஷயங்களைப்பற்றி மனம்விட்டு பேசினர். தமிழக அரசு அளித்த வரவேற்பும், ஏற்பாடுகளும் தன்னை பெருமகிழ்ச்சி அடைய வைத்துவிட்டது என்று சீன அதிபர் கூறினார். 

இதுவரையில் குஜராத்தில் சந்தித்த நேரத்திலும், உஹான் நகரில் சந்தித்த நேரத்திலும், சர்வதேச அரங்கில் பல கூட்டங்களில் 17 முறை நடந்த சந்திப்புகளிலும் இல்லாத ஒரு நெருக்கம், மாமல்லபுரத்தில் நடந்த நட்புரீதியான சந்திப்பில் தென்பட்டது. 2–வது நாளும் மோடி தங்கியிருந்த கடற்கரை ஓட்டலில் இரு தலைவர்களும் பேட்டரி காரில் பயணம் செய்யும்போதும், கடற்கரை காற்றை அனுபவித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்த நேரத்திலும், இருநாட்டு பிரச்சினைகளையும் ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி அன்பு விழுமிய கருத்து பரிமாற்றங்களை மேற்கொண்டனர். இருநாட்டு பிரதிநிதிகளோடு சந்தித்த கூட்டத்தில்தான் ஒரு குழுவாக அவர்கள் பேசினார்கள். முதல் நாள் வேட்டி–சட்டையில் அசத்திய பிரதமர், 2–ம் நாள் கூட்டத்தில் மதிப்பிற்குரிய விருந்தினர்களை வரவேற்கிறேன் என்று தமிழில் பேசி பிரமாதப்படுத்தி இருக்கிறார். இது இருநாட்டு உறவின் புதிய அத்தியாயம். இருநாடுகளிடையே எந்த பிரச்சினையும் எழ அனுமதிக்கமாட்டோம் என்று கூறினார் மோடி. சீன அதிபர் ஜின்பிங், இரு நாடுகளுக்கிடையே உறவு மேலும் வலுப்பெற்று வருகிறது, வருங்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்துக்கு இந்த சந்திப்பு ஒரு அடித்தளம் என்று பறைசாற்றினார். காஷ்மீர் பிரச்சினை குறித்து இந்த சந்திப்பில் எதுவும் பேசப்படவில்லை. தமிழ் மண்ணில் மலர்ந்தது ஒரு புதிய அத்தியாயம். இந்த உறவு தொடர வேண்டும். நட்புறவு வலுப்பெற வேண்டும்.

Next Story