புழக்கத்தில் இருந்து மறையும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு!


புழக்கத்தில் இருந்து மறையும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு!
x
தினத்தந்தி 17 Oct 2019 10:30 PM GMT (Updated: 2019-10-17T18:23:49+05:30)

இப்போதெல்லாம் பொதுமக்களிடையே வங்கி சேவை பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ப்போதெல்லாம் பொதுமக்களிடையே வங்கி சேவை பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களுக்கும் சரி, தனியார் ஊழியர்களுக்கும் சரி, சம்பள பட்டுவாடா எல்லாம் வங்கிகள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் முதல் அரசின் நலஉதவிகள் அனைத்தும் ரொக்கமாக கொடுக்கப்படுவதில்லை. பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் பணம் போடப்பட்டு அங்கிருந்துதான் பணம் எடுக்கிறார்கள். வங்கியில் உள்ள பணத்தை எடுப்பதற்கு பெரும்பாலும் ஏ.டி.எம். எந்திரத்தைத்தான் எல்லோரும் நாடுகிறார்கள். 

சமீபகாலங்களாக ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கச் சென்றால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை. வங்கிகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கொடுப்பது மிகவும் அரிதாகிவிட்டது. 2016–ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதமர் நரேந்திரமோடி திடீரென ஒருநாள் இரவு, புழக்கத்தில் இருந்த 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபிறகு, ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டை அச்சடித்து புழக்கத்தில் இட்டது. 2016–2017–ம் ஆண்டில் 354 கோடியே 29 லட்சத்து 91 ஆயிரம் எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. அடுத்த ஆண்டான 2017–2018–ல் இதன் அளவு குறைக்கப்பட்டு, 16 கோடியே 15 லட்சத்து 7 ஆயிரம் எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. 2018–2019–ல் இந்த எண்ணிக்கை இன்னும் பெருமளவில் குறைக்கப்பட்டு, 4 கோடியே 66 லட்சத்து 90 ஆயிரம் எண்ணிக்கையில்தான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. 

இந்த நிதியாண்டில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இன்றுவரை ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகூட அச்சடிக்கப்படவில்லை. புழக்கத்திலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இப்போதெல்லாம் அதிகம் காணப்படுவதில்லை. கருப்பு பணத்தை பதுக்கிவைப்பதை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், வியாபாரிகள், விவசாயிகளுக்கு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பணத்தை எடுத்துச்செல்ல 2 ஆயிரம் ரூபாய் நோட்டுதான் மிகவும் வசதியாக இருக்கிறது. திருட்டு பயமில்லாமல் யாருக்கும் தெரியாத அளவுக்கு பணத்தை எடுத்துச்செல்ல 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருந்தால்தான் வசதியாக இருக்கும். அரசு டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கிற நேரத்தில், சிறிய அளவிலான பணப்பரிமாற்றங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிகவும் உதவியாக இருக்கும்.  

2 ஆயிரம் ரூபாய் புழக்கத்திற்கு வந்தபிறகு, கருப்பு பணம் வைத்திருப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும் என்ற வாதம் முழுமையாக சரியாக இருக்காது. ஏனெனில், அதன் பிறகுதான் அடுத்த ஆண்டிலேயே 97 ஆயிரத்து 689 பேர் தங்கள் வருமான வரிக்கணக்கில், ஒரு கோடி ரூபாய்க்குமேல் வருமானம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டைவிட 20 சதவீதம் பேர் இவ்வாறு தங்கள் வருமானத்தை தாக்கல் செய்துள்ளனர். ஒரு கோடி ரூபாய்க்குமேல் வருமான வரி கட்டியவர்களின் எண்ணிக்கையும் 20 சதவீதம் உயர்ந்திருக்கிறது. எனவே, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான் கருப்பு பணம் பதுக்கலுக்கு வழிவகுக்கும் என்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல. இதுமட்டுமல்லாமல், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை அச்சடித்து 3 ஆண்டுகளுக்குள் பணப்புழக்கத்தை குறைப்பதும், அதை செல்லாது என்று அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்ற கருத்து நிலவ வகைசெய்வதும் நிச்சயமாக நல்லதல்ல. கருப்பு பணத்தை ஒழிக்க எத்தனையோ நடவடிக்கைகள் இருக்கும்போது, இந்த நடவடிக்கை தேவையில்லை என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது.

Next Story