பிரதமரின் உறுதியான நடவடிக்கை


பிரதமரின் உறுதியான நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Oct 2019 10:30 PM GMT (Updated: 18 Oct 2019 2:43 PM GMT)

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, காஷ்மீர் பிரச்சினை ஒரு தீராத தலைவலியாக இருக்கிறது.

ந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, காஷ்மீர் பிரச்சினை ஒரு தீராத தலைவலியாக இருக்கிறது. இந்தியாதானே தாய்வீடு, இந்தியாவில் இருந்து பிரிந்து வந்த குழந்தைதானே நாம் என்று பாகிஸ்தான் முதலில் இருந்தே நினைக்கவில்லை. இந்தியாவுக்கே சொந்தமான காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச்செய்வதும், பயங்கரவாத செயல்களை நடத்துவதுமே தன்னுடைய முதல் செயலாக செய்து கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370–வது பிரிவை மத்திய அரசாங்கம் ரத்து செய்தது. காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங் களாகவும் பிரித்தது. இது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை. இதில் வேறெந்த நாடும் தலையிடமுடியாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. 

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவோடு நட்புறவாக இருந்த மலேசியா, பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் சில கருத்து களை வெளியிட்டது, பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. மலேசிய பிரதமர் மகாதிர் முகமது ஐக்கிய நாட்டு சபையில் பேசும்போது, ‘இந்தியா, காஷ்மீர் மீது படையெடுத்து அதை கைப்பற்றிக் கொண்டது. இந்த பிரச்சினையை தீர்க்க பாகிஸ்தானோடு இணைந்து இந்தியா செயல்பட வேண்டும். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, பாகிஸ்தானை கோபம் அடைய செய்திருக்கிறது’ என்று பேசியுள்ளார். தேவையில்லாமல் காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைத்து இதுவரையில் இருந்த நட்பில் ஒரு விரிசலை மலேசியா ஏற்படுத்திவிட்டது. மலேசியா, இந்தியாவுக்கு கடந்த ஆண்டு மட்டும் 

75 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பாமாயில் உள்பட சில பொருட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இருந்து சர்க்கரை, மாட்டு இறைச்சி போன்ற பல பொருட்களை 44 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பில்தான் இறக்குமதி செய்துள்ளது. பாமாயில் தொழிலில் மட்டும் மலேசியாவில் 3 கோடியே 20 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்தநிலையில், மலேசியாவில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்வதை நிறுத்த இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பாமாயில் இறக்குமதி மீது கடந்த மாதம் 

5 சதவீத கூடுதல் வரியை விதித்ததில் இருந்தே இறக்குமதி குறைந்துவிட்டது. தற்போது இறக்குமதியாளர்களும் அரசாங்கத்தின் திட்டவட்டமான உத்தரவாதம் வராததால், இறக்குமதியை நிறுத்திவிட்டனர். இதன் காரணமாக பெரும் அதிர்ச்சியடைந்த மலேசியா, இப்போது வெள்ளைக்கொடி காட்டும்விதமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா சர்க்கரை மற்றும் மாட்டு இறைச்சியின் அளவை உயர்த்த பரிசீலித்துக் கொண்டி ருக்கிறது. மலேசியா பாமாயில் இல்லையென்றால், உலகிலேயே பாமாயில் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தோனேஷியா மற்றும் அர்ஜென்டினா, உக்ரைன் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வாய்ப்பு இருக்கிறது. மலேசியாமீது இவ்வளவு உறுதியான நடவடிக்கை எடுத்துள்ள இந்தியா, இப்போது பாகிஸ்தான் மீதும் கடுமையான நடவடிக்கையை எடுக்கப்போகிறது. 

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் நதிகளின் தண்ணீரை அங்கு அனுப்பாமல், ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் இந்திய விவசாயிகள் பயன்அடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித் துள்ளார். இந்த தண்ணீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கு சொந்தமானது. இதை நிறுத்தி இந்த மாநிலங்களின் விவசாயிகள் பயன்அடையும் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் மலேசியாவுக்கு இது சரியான பாடமாகும். வெறுமனே கண்டன அறிக்கைகளை மட்டும் வெளியிடு வதற்கு பதிலாக, இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாகத்தான் இரு நாடுகளையும் திருத்த முடியும்.  

Next Story